விபத்தல்ல, அக்கறையின்மை!

கடந்த வாரம் உத்தரப் பிரதேசம் குஷிநகரில் ஆளில்லாத ரயில்வே கடவுப் பாதையைக் கடக்கும்போது பள்ளிவாகனத்தில் ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.

கடந்த வாரம் உத்தரப் பிரதேசம் குஷிநகரில் ஆளில்லாத ரயில்வே கடவுப் பாதையைக் கடக்கும்போது பள்ளிவாகனத்தில் ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இது ஏதோ வேற்று மாநிலத்தில் நடந்த விபத்து என்று மனிதாபிமானமோ, சமூக அக்கறையோ இல்லாமல் புறந்தள்ளிவிடலாகாது. காரணம், 13 குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். 4 குழந்தைகள் படுகாயமடைந்து இன்னமும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவதும், அவர்கள் பத்திரமாகப் பள்ளிக்கு சென்றுவர வாகனங்களை அமர்த்துவதும் நியாயமான உணர்வுகள். அந்தப் பெற்றோரின் கவலையையும் அக்கறையையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது பள்ளி நிர்வாகத்தின், அரசின் கடமை. கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி குஷிநகரில் கோரக்பூர் செல்லும் பயணிகள் ரயில் மோதியதால் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே மட்டுமல்ல, மாநில அரசும், பள்ளி நிர்வாகமும் கூட காரணம்.
விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்திற்கு எண் பலகை இருக்கவில்லை. அந்தப் பள்ளிக்கூடம் அரசின் அங்கீகாரம் பெற்றதல்ல. அதன் ஓட்டுநர், முறையாக உரிமம் பெற்றவர் அல்ல. அவருக்கு 18 வயதுகூட ஆகவில்லை. இதெல்லாம் போதாதென்று வாகனம் ஓட்டும்போது காதில் ஹெட்போனுடன் பாட்டுக் கேட்டுக்கொண்டு ஓட்டுவது அந்த ஓட்டுநரின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. 
அங்கீகாரம் இல்லாத பள்ளி செயல்பட்டது தவறு, அந்தப் பள்ளி, ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டியால் வாகனம் இயக்கியது தவறு. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், அந்தப் பகுதியில் அரசு பள்ளி எதுவும் செயல்படாமல் இருந்தது என்பதை கேட்கும்போது இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட நம்மால் 'அனைவருக்கும் கல்வி' என்று கோஷம் எழுப்ப முடிகிறதே தவிர, பள்ளி அமைத்துக் கொடுக்க முடியவில்லை என்பதுதான் வெளிப்படுகிறது.
நாடு முழுவதும் ஏறத்தாழ 63,000 கி.மீ. நீளமான இருப்புப்பாதையைக் கொண்டது இந்திய ரயில்வே. நாள்தோறும் 13,000 ரயில்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் 146 ரயில்கள் சதாப்தி, துரந்தோ, ராஜதானி போன்ற அதிவிரைவு வகையைச் சார்ந்தவை. இந்திய ரயில்வே இயக்கும் மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விரைவு ரயில்கள் 1,578. பாசஞ்சர் என்றழைக்கப்படும் 2,522 சாதாரண ரயில்களும் இயங்குகின்றன. நாள்தோறும் ஏறத்தாழ 1.3 கோடி பயணிகள் ரயிலில் பயணிக்கிறார்கள். 
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய ரயில்வே 30-க்கும் மேற்பட்ட பெரிய ரயில் விபத்துகளை சந்தித்திருக்கிறது. சென்ற 2016-17 நிதியாண்டில்தான், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் தடம் புரண்டதால் மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
தடம் புரளுதல்தான் இந்திய ரயில்வேயின் விபத்துக்கான இரண்டாவது முக்கியமான காரணம். கடந்த 10 ஆண்டுகளாக ரயில்கள் தடம் புரள்வது குறைந்துவருகின்றன. ஆனால், ஆளில்லாத கடவுப் பாதைகளில் விபத்துகள் குறைவதாகத் தெரியவில்லை. 2015-இல் மட்டும் ரயில்வே கடவுப் பாதைகளில் பலியானவர்கள் எண்ணிக்கை 262. 
இந்தியாவிலுள்ள 9,340 ஆளில்லாத ரயில்வே கடவுப் பாதைகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,357 காணப்படுகின்றன. குஜராத்துக்கு அடுத்தபடியாக அதிகமான ஆளில்லாத கடவுப் பாதை இருக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம்தான். தமிழகத்தில் பெரும்பாலான ஆளில்லாத கடவுப் பாதைகள் இப்போது முறையான கதவுகளுடன் கூடிய கடவுப் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டிருந்தாலும்கூட, இன்னும் ஆளில்லாத கடவுப் பாதை முறை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 
இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் ரயில் விபத்துகள் குறித்து உலக வங்கி கடந்த ஆண்டு கவலை தெரிவித்திருந்தது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பில்லாத ரயில்வே அமைப்பாக 
இந்தியா திகழ்வதாக உலக வங்கி கூறியிருக்கிறது. ஏனைய உலக நாடுகளில் காணப்படும் விபத்துகளைவிட 20 மடங்கு விபத்துகள் இந்தியாவில் நடக்கின்றன என்றும், இதைக் குறைப்பதற்கு ரயில் என்ஜின்களின் தரத்தில் மாற்றம் ஏற்படுத்துவது, ரயில்வே கடவுப் பாதைகள் அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்றுவது என்பது மட்டுமல்லாமல், ரயில்வே பாதுகாப்புக்காக தனியான கண்
காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரைகள் ரயில்வே நிர்வாகத்தால் எந்த அளவுக்கு கவனத்தில் கொள்ளப்பட்டன என்பதை குஷிநகர் விபத்து வெளிப்படுத்துகிறது.
2020 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவிலுள்ள அனைத்து கடவுப் பாதைகளையும் பாதுகாப்பானதாக மாற்றுவது என்று இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்திருந்தது. சமீபத்தில் நடந்திருக்கும் குஷிநகர் பள்ளி வாகன விபத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஆளில்லாத, பாதுகாப்பில்லாத ரயில்வே கடவுப் பாதைகளை அகற்றப்போவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்திருக்கிறது. 
ஒவ்வொரு விபத்து ஏற்படும்போதும் இதுபோல அறிவிப்புகள் வருவதும், பிறகு அது மறக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குஷிநகரில் இதே ரயில்வே கடவுப் பாதையில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் மோதியபோதும் ரயில்வே நிர்வாகம் இந்தக் கடவுப் பாதையை பாதுகாப்பானதாக மாற்ற இருப்பதாக அறிவித்ததைப்போல...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com