மகாதிரின் வெற்றி!

மலேசியாவின் நீண்ட நாள் பிரதமர் என்கிற சாதனை போதாதென்று இப்போது சர்வதேச அளவிலும் தனது 92-ஆவது வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகி சாதனை படைத்திருக்கிறார் மகாதிர் முகமது

மலேசியாவின் நீண்ட நாள் பிரதமர் என்கிற சாதனை போதாதென்று இப்போது சர்வதேச அளவிலும் தனது 92-ஆவது வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகி சாதனை படைத்திருக்கிறார் மகாதிர் முகமது. மகாதிர் போல 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மக்களால் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தவர்கள் இதுவரை இல்லை.
இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனியாக இருந்த மலேசியாவில், காலனி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய ஐக்கிய மலாய் தேசியக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் மகாதிரும் ஒருவர். 1981-இல் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பதவியேற்ற மகாதிர் அடுத்த 22 ஆண்டுகள் அசைக்க முடியாத செல்வாக்குள்ள தலைவராக வலம் வந்தார். அவருடைய பதவிக் காலத்தில்தான் மலேசியா மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தைக் கண்டது. கோலாலம்பூரிலுள்ள பெர்ட்னாக் ரெட்டைக் கோபுரம் உள்ளிட்ட எத்தனையோ சாதனைகளை அவரது 22 ஆண்டுகால ஆட்சி நிகழ்த்திக் காட்டியது. மேலை நாடுகளுக்கு இணையாக மலேசியாவில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய பெருமையும், கிழக்காசிய நாடுகளை ஒருங்கிணைத்த பெருமையும் மகாதிரையே சாரும்.
2003-இல் பதவியிலிருந்து மகாதிர் முகமது ஓய்வு பெற விரும்பியபோது, ஐக்கிய மலாய் தேசியக் கட்சி அதற்கு அவரை அனுமதிக்கவில்லை. பதினாறு மாதங்களுக்குப் பிறகுதான் அவர் பதவி ஓய்வு பெற்றார். 2009-இல் நஜிப் ரசாக்கை பிரதமராக்குவதற்குப் பரிந்துரைத்ததும் மகாதிர் முகமதுதான்.
மலேசியப் பிரதமரான நஜிப் ரசாக், மகாதிர் முகமதின் அடிச்சுவட்டில் தன்னை பலப்படுத்திக் கொண்டார் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகவே அவரது ஆட்சியில் லஞ்ச ஊழல் அதிகரித்திருப்பதாகப் பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. பூமி புத்திரர்கள் என்று அழைக்கப்படும் 70% மலாய் முஸ்லிம் மக்களின் ஆதரவு நஜிப் ரசாக்குக்கு இருந்தது. மலேசிய அரசு அவர்களுக்குக் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளித்து வந்தது. அது சிறுபான்மை சீனர்களுக்கும், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் நஜிப் ரசாக் அரசின்மீது வெறுப்பை வளர்த்திருந்தது.
தேர்தலில் தோல்வி அடைந்திருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் அரசு நிதியில் 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) காணாமல் போனது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் 600 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 4,000 கோடி) நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பது வெளியில் வந்தபோது அது மிகப்பெரிய ஊழலாக வெடித்தது. போதாக்குறைக்கு நஜிப் ரசாக் அரசு கொண்டுவந்த சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி.) மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும் அரசுக்கு எதிரான மனோநிலையையும் ஏற்படுத்தி இருந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் இனியும் தான் பேசாமல் இருக்க முடியாது என்று தான் வளர்த்த ஐக்கிய மலாய் தேசியக் கட்சிக்கு எதிராக மகாதிர் முகமது 'பகதான் ஹரப்பன்' என்கிற எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் இறங்கினார். 
தேர்தலில் தனக்கு எதிரான மனோநிலை காணப்படுவதைப் புரிந்துகொண்ட நஜிப் ரசாக் தனக்கு சாதகமான தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய முற்பட்டார். வாக்கெடுப்பு தினத்தை விடுமுறை நாளில் வைக்காததும்கூட வாக்குப்பதிவு குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். குறைந்த வாக்குப்பதிவு தனக்கு சாதகமாக இருக்கும் என்று நஜிப் ரசாக் போட்ட திட்டத்தை முறியடிக்கும் விதமாக மக்கள் பெருமளவில் வாக்குப்பதிவில் கலந்து கொண்டதுதான் ஆட்சி மாற்றத்துக்கு மிக முக்கியமான காரணம். 
நடந்து முடிந்த தேர்தலில் ஓர் அரசியல் விசித்திரம் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பு மகாதிர் முகமது பிரதமராக இருந்தபோது அவரது எதிரியாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அன்வர் இப்ராஹிம் இப்போது மகாதிர் முகமது தலைமை தாங்கும் கூட்டணியில் இருக்கிறார். சிறை தண்டனை அனுபவிக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு அளித்து, அவர் விடுதலையானதும் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க திட்டமிட்டிருக்கிறார் பிரதமராகி இருக்கும் மகாதிர். மற்றொரு புறம் மகாதிரால் அடையாளம் காணப்பட்டு பிரதமரான நஜிப் ரசாக் இப்போது அவரது அரசியல் எதிரியாக மாறியிருக்கிறார்.
அமெரிக்காவுடனும், மேலைநாடுகளுடனுமான உறவில் முன்பு ஆட்சியில் இருந்துபோது மகாதிர் முகமது கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்தார். மேலை நாட்டு, தனி நபர் வாழ்க்கை முறையைவிட ஆசியாவின் கூட்டுக்குடும்ப முறைதான் சிறந்தது என்றும், சர்வதேச அரசியலில் யூதர்களின் முக்கியத்துவத்துக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தவர் மகாதிர். இப்போது மீண்டும் பிரதமராகி இருக்கும் நிலையில், அவருடைய கண்ணோட்டமும் நிலைப்பாடும் எப்படி இருக்கப்போகிறது என்பதை சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். 
'பகதான் ஹரப்பன்' என்றால் நம்பிக்கை கூட்டணி என்று பொருள். 115 இடங்களை மகாதிர் முகமது தலைமையிலான பகதான் ஹரப்பனும், வெறும் 79 இடங்களை மட்டுமே மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை பதவியில் இருந்த ஐக்கிய மலேசிய தேசியக் கட்சியும் வென்றிருக்கின்றன. 92 வயதான மகாதிர் முகமதின் செல்வாக்கு மலேசியாவில் இன்னும் கொடிகட்டிப் பறக்கிறது என்பதை அவரது அரசியல் மறுபிரவேசம் நிருபிக்கிறது.
சிறுபான்மை சீனர்களின், தமிழர்களின் ஆதரவுடன் இப்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் மகாதிர் முகமதின் வெற்றி மலேசியாவில் மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு வலுசேர்க்கக்கூடும். மலேசியாவைத் தொடர்ந்து இன்னும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதன் அறிகுறியாக மகாதிரின் வெற்றியைக் கருதலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com