இது புதிதல்ல...

ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவி ஏற்றிருக்கிறார். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவையில், 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று,

ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவி ஏற்றிருக்கிறார். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவையில், 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று, தனிப்பெரும் கட்சியாக பாஜக இருக்கும் நிலையில், அந்தக் கட்சியை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்திருப்பதில் அரசியல் சாசன முரண் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது, கால அவகாசத்தைக் குறைப்பதற்குத்தானே தவிர, இது ஜனநாயக முரண் என்கிற தார்மிக நிலைப்பாட்டிற்காக அல்ல.
தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது மரபல்ல. 1989-இல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக மக்களவையில் வெற்றிபெற்றும் கூட, ஆளுங்கட்சி தனிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதால், ராஜீவ் காந்தி ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்பதை இங்கே நினைவுகூர வேண்டும்.
அதேபோல, மதச்சார்பற்ற ஜனதாதளம் 100க்கும் அதிகமான இடங்களில் வைப்புத் தொகையை இழந்து 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைமையில் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைவது என்பதும் ஜனநாயக முரண்தான். அப்படி இருக்கும்போது, பாஜக சிறுபான்மை அரசை அமைக்க முற்பட்டிருப்பதை ஜனநாயக விரோதம் என்று வர்ணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநர் நான்கு விதமான முடிவுகளை எடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்திருக்கிறது. 
தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றிபெற்ற கூட்டணிக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அடுத்ததாகத் தேர்தலில் அதிக எண்ணிக்கையுடன் வெற்றி பெற்றிருக்கும் கட்சிக்குத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். கூட்டணி ஆட்சியில் பங்குபெற ஒப்புக்கொள்ளும் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படும் கூட்டணிக்கு மூன்றாவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். நான்காவதாக, மேலே குறிப்பிட்ட மூன்று வாய்ப்புகளும் இல்லாமல் போகும்போது, தேர்தலுக்குப் பின்னால் பல்வேறு கட்சிகள் இணைந்து ஆட்சியில் பங்குபெற்றும் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தும் அமைக்கும் கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ அழைக்கலாம்.
இதில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பதில் குடியரசுத் தலைவருக்கோ ஆளுநருக்கோ முழு உரிமையும் வழங்கப்படுகிறது. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத சூழல் முதன்முதலில் அன்றைய சென்னை ராஜதானியில் 1952-லேயே ஏற்பட்டது. அப்போது ஆளுநராக இருந்த 
ஸ்ரீபிரகாசா, சட்டப் பேரவையில் உறுப்பினராகக் கூட இல்லாத ராஜாஜியை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உழவர் உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்திக் கொண்டது. 
பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலேயே கூட 2006-இல் திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமலிருந்தும் தேர்தலுக்கு முந்தைய திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றிருந்ததால் சிறுபான்மை அரசு பதவி ஏற்றது. 
1996 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தபோது வெறும் 161 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றிருந்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 140 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி எதுவும் இருக்கவில்லை என்பதாலும், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்திருந்ததாலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 
தனது பெரும்பான்மையை நிரூபிக்க பிரதமர் வாஜ்பாய்க்கு 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. பாஜகவால் பெரும்பான்மைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை பெறமுடியவில்லை என்பதால் 13-ஆவது நாளே பிரதமர் வாஜ்பாய் பதவி விலகி, காங்கிரஸ் வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி அமைய வழிகோலினார்.
அன்றைய பிரதமர் வாஜ்பாயின் நிலையில் இன்றைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா இல்லை. ஆளுநரின் ஆதரவும், மத்திய அரசின் பலமும் இருக்கும் நிலையில் அவர் 15 நாள் அவகாசத்தில் காங்கிரஸிலிருந்தும் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்தும் உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்தோ, தங்கள் பதவியைத் துறக்கச் செய்தோ தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பு அதிகம். ரெட்டி சகோதரர்களின் உதவியுடன் குதிரைபேரம் நடக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். அதிக இடங்களில் வெற்றிபெற்ற கட்சியாக காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற ஜனதாதளம் இருந்திருந்தால், அவர்களும் அதையேதான் செய்வார்கள் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.
மக்களாட்சித் தத்துவம் உருவான பிரான்ஸ் நாட்டிலும், அது முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட அமெரிக்காவிலுமே ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவில் தார்மிக அரசியல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. 2017-இல் கூவத்தூர், 2018-இல் பெங்களூரு. மாநிலத்துக்கு மாநிலம் ஆட்சிகள்தான் மாறுகின்றனவே தவிர, காட்சிகள் மாறுவதில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com