புயல் மேல் புயல்!

தமிழகத்தில் "கஜா' புயல்

தமிழகத்தில் "கஜா' புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைச் சொல்லி மாளாது. இதுவரை 46 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. ஐந்து நாள்கள் கடந்த பிறகும் கூட, நிலைமை இன்னும் சீராகவில்லை என்பதிலிருந்தே, கஜா புயலினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு எத்தகையது என்பதை  உணர்ந்து கொள்ளலாம்.
ஏறத்தாழ இரண்டரை லட்சத்துக்கும் மேலானவர்கள் 500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், சமுக ஆர்வலர்களாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 400-க்கும் அதிகமான மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு, ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் "கஜா' புயலின் பாதிப்பால் குறைந்தது ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரங்களை அகற்றும் பணி அசுர வேகத்தில் நடைபெற்றாலும் கூட, போக்குவரத்து முழுமையாகச் செயல்படத் தொடங்கவில்லை. இவையெல்லாம் முழுமையாகச் சீர்செய்யப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகும் போலிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை 110 கி.மீ. வேகத்தில் "கஜா' புயல் கரையைக் கடந்தபோது, கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், ராமநாதபுரம் மட்டுமல்லாமல், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களும் பலத்த காற்றினாலும் கனமழையினாலும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன. பயிர் இழப்புகளுக்கும், சேதங்களுக்கும் மாநில அரசு நிவாரணம் வழங்கி, ஆறுதல் அளிக்க முற்பட்டிருக்கிறது என்றாலும், ஏற்பட்டிருக்கும் அழிவு வேளாண் குடிமக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் ரணத்துக்கு அவை ஆறுதலாக இருக்குமே தவிர, ஈடாகமாட்டா.
ஒருவகையில் பார்த்தால், "கஜா' புயலை எதிர்கொள்ள தமிழக அரசு ஓரளவுக்குத் தயாராகவே இருந்தது என்றுதான் கூறவேண்டும். புயல் அடிப்பதற்கு நான்கு ஐந்து நாள்கள் முன்பாகவே அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதிப்பை எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இல்லை. குறிப்பாக, பால் விநியோகம், குடிநீர் விநியோகம் இரண்டு குறித்தும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும்கூட, மிகப்பெரிய பாதிப்பு நேரிடும்போது அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடம்புரண்டுபோனதில் வியப்பொன்றுமில்லை.
நல்ல வேளையாக மீனவர்கள் எச்சரிக்கப்பட்டதால் கடலுக்குச் செல்லவில்லை. ஆனாலும் கூட, கடற்கரைப் பகுதியில் வசிப்பவர்கள் என்பதால் அவர்கள் வசிக்கும் வீடுகள் அதிவேக புயற்காற்றின் முழு தாக்கத்தையும் எதிர்கொண்டு இருக்குமிடம் தெரியாமல் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. மீனவர்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.  
ஒவ்வொரு முறை இயற்கைப் பேரிடர் ஏற்படும்போதும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அந்த இயற்கைப் பேரிடர் குறித்து ஆய்வு செய்யும். முடிவில் எடுக்கப்படாத நடவடிக்கைகள், முறையான நிவாரணம் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, போதிய நிதி ஒதுக்கப்படாமல் போவது, பேரிடர்களை எதிர்கொள்ளப் போடப்பட்டிருக்கும் திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பது, ஒதுக்கப்பட்டநிதி செலவிடப்படாமல் இருப்பது, முன்கூட்டியே முறையாகத் தகவல் தரப்படாதது உள்ளிட்ட காரணிகள் அறிக்கைகளின் பட்டியலில் இடம் பெறும். இவையெல்லாம் வெள்ளப் பெருக்கத்திற்கும், நிலநடுக்கத்திற்கும், அடைமழைக்கும் பொருந்தும். ஆனால், எல்லாவிதமான முச்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறியடித்துவிடும் இயற்கைச் சீற்றமான புயலால் ஏற்படும் பாதிப்புக்கு இவை எதுவுமே பொருந்தாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2011, டிசம்பர் 30-ஆம் தேதி "தானே' புயல்; 2016, டிசம்பர் 11-ஆம் தேதி "வர்தா' புயல்; 2017, நவம்பர் 29-30-ஆம் தேதி "ஒக்கி' புயல் வரிசையில் இப்போது 2018 நவம்பர் 16-ஆம் தேதி "கஜா' புயலும் சேர்ந்து கொண்டிருக்கிறது. அரசு என்னதான் திட்டமிட்டு முயன்றாலும் கூட, "கஜா' புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவிலிருந்து முழுமையாக  மீண்டுவிடவோ அல்லது குற்றங்குறை இல்லாமல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவிடவோ முடியாது என்பதும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை மிகக்குறுகிய கால அளவில் சீர் செய்வது நடைமுறை சாத்தியமல்ல என்பதும் அனைவருக்குமே தெரியும்.
விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயத்துக்காக இருக்கக் கூடாது. அதேபோல அரசும், முன்வைக்கப்படும் விமர்சனங்களை அரசியல் என்று ஒதுக்கிவிடாமல் ஆக்கபூர்வமான ஆலோசனையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டாக வேண்டும். கஜா பாதிப்பால் வாழ்வா
தாரம் இழந்து நிற்கும் மக்களின் துயரத்துக்கு ஒருங்கிணைந்து விடைகாண வேண்டிய நேரம் இது. அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் ஒருங்கிணைந்து களமிறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com