சந்தர்ப்பவாதம்!

ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்ட முறை விவாதப் பொருளாகியிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்ட முறை விவாதப் பொருளாகியிருக்கிறது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து மெஹபூபா முஃப்தியின் தலைமையில் அமைந்த ஆட்சி கவிழ்ந்தபோது, ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. அப்போதே தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு வழிகோல வேண்டுமென கூறினார். இப்போது ஆளுநர் சத்தியபால் மாலிக் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையைக் கலைத்திருப்பதன் பின்னணியில் அரசியல் தெரிகிறதே தவிர, நடுநிலைமையான பார்வை தென்படவில்லை. 
ஜம்மு - காஷ்மீர் மாநில வரலாற்றில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கை சார்ந்த கட்சிகளின் கூட்டணிகள்தான் பெரும்பாலும் ஆட்சி அமைத்தன. அப்படி அமைந்த கூட்டணிகளில் உச்சக்கட்ட சந்தர்ப்பவாதம், மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் கடந்த தேர்தலுக்குப் பிறகு இணைந்து ஏற்படுத்திய கூட்டணிதான். எதிர்ப்பார்த்தது போலவே, அந்தக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 
தற்போது ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையைக் கலைத்ததற்கு ஆளுநர் சத்யபால் மாலிக் முன்வைத்திருக்கும் காரணங்கள் விசித்திரமானவை. முதலாவது காரணம், அரசியல் கட்சிகள் குதிரைப் பேரத்தில் ஈடுபடும் ஆபத்து காணப்படுகிறது என்பது. இரண்டாவது, ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்க முற்படும் கூட்டணி ஆட்சி, நிலையான ஆட்சியாக இருக்காது என்பது. 
இந்த இரண்டு காரணங்களுமே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கும், ஒரு கூட்டணி அரசை ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி மறுப்பதற்கும் ஏற்புடையதல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பது ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆலோசகர்களால் எடுத்துரைக்கப்படாமலும் இருந்திருக்காது. 
திடீரென்று விழித்துக்கொண்டு ஆளுநர் சத்யபால் மாலிக் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையைக் கலைத்துவிடவில்லை. கடந்த சில மாதங்களாக மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோனே முன்னிறுத்தி, மக்கள் ஜனநாயகக் கட்சியில் பிளவை ஏற்படுத்தி பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு எதிராக சில உறுப்பினர்கள் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர். சொல்லப்போனால், மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களை இழுப்பதற்குக் குதிரைப் பேரம் சஜத் லோனேயால் முன்னெடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. 
தனது கட்சியை உடைத்து பாஜக தலைமையில் ஆட்சியமைக்க முயற்சிகள் நடைபெறுவதை உணர்ந்துகொண்டதன் விளைவாக மெஹபூபா முஃப்தி, தனது அரசியல் எதிரிகளான தேசிய மாநாட்டுக் கட்சியுடனும், காங்கிரஸுடனும் இணைந்து பெரும்பான்மை பலத்துடனான கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளித்தார். இந்த முயற்சி வலுப்பெறத் தொடங்கியபோது அதைத் தடுத்து நிறுத்துவதற்காகதான் சட்டப்பேரவை இப்போது கலைக்கப்பட்டது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
குதிரைப் பேரம் நடைபெறும் என்கிற யூகத்தின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்துடன் கூட்டணி அமைவதை ஆளுநர் நிராகரிக்க முடியாது. இரண்டாவதாக, ஒன்றுக்கொன்று கொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதையும் நிராகரிக்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அமையும் அனைத்துக் கூட்டணி ஆட்சிகளும் முரண்பட்ட கொள்கைகளுடனான கட்சிகளின் கூட்டணிதான் என்பது வரலாற்று உண்மை. 
தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 370, 35ஏ, காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளில் ஒத்த கருத்தை உடையவை. இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த பாஜகவும், மக்கள் ஜனநாயகக் கட்சியும்தான் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டவை. 
ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டப்பேரவையைக் கலைத்ததும், அதற்கு முன்னர் ஆளுநர் மாளிகை நடந்து கொண்ட விதமும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானவை. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர், தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்திருப்பதைக் குறிப்பிட்டு தனக்கு பெரும்பான்மை பலத்தைவிட 11 உறுப்பினர்கள் அதிகமாக ஆதரவு தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்று கூறியிருப்பது, ஆளுநர் மாளிகையின் கெளரவத்தையே குலைப்பதாக இருக்கிறது. ஆளுநர் மாளிகையில் தொலைநகல் இயந்திரம் வேலை செய்யவில்லை என்று காரணம் கூறியிருப்பது அதைவிடக் கண்டனத்துக்குரியது. 
கடந்தமுறை ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோதே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சியை அமைத்தது தவறு என்று தினமணி கண்டித்திருந்தது. மெஹபூபா முஃப்தி ஆட்சி கவிழ்ந்தபோது சட்டப்பேரவை கலைக்கப்பட்டு மறு தேர்தலுக்கு வழிகோல வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. ஆனால், இப்போது சட்டப்பேரவை கலைக்கப்பட்ட விதமும், ஆளுநர் நடந்துகொண்ட முறையும் அரசியல் சாசனத்துக்கு முரண்பாடானது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறது. அதேநேரத்தில், தேர்தலுக்கான நேரம் இதுவல்ல என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com