கொலையல்ல, தண்டனை! 

அந்தமான் - நிகோபர் தீவுகளின் ஓர் அங்கமான வடக்கு சென்டினல் தீவுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஆலன் சாவ் கொல்லப்பட்டது

அந்தமான் - நிகோபர் தீவுகளின் ஓர் அங்கமான வடக்கு சென்டினல் தீவுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஆலன் சாவ் கொல்லப்பட்டது வியப்பை ஏற்படுத்தவில்லை. சென்டினல் என்கிற பழங்குடியினர் வாழும் இந்தத் தீவு, பாதுகாக்கப்பட்ட தீவாகவும், வெளியுலக மக்களின் நடமாட்டம் தடை செய்யப்பட்ட தீவாகவும் இருந்து வருகிறது. அந்தப் பழங்குடியினரின் அமைதியைக் குலைக்க முற்படுபவர்களை அவர்கள் உயிர்ப்பலி வாங்குவது கொலையாகக் கருதப்படக் கூடாது. தண்டனை என்றுதான் சொல்ல வேண்டும். 
வடக்கு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினருக்கு, வெளியுலகத் தொடர்பில்லாமல் ஒதுங்கி வாழும் உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவது என்பது மன்னிக்கவே முடியாத குற்றம். அதனால் மதபோதகர் ஜான் ஆலன் சாவை கொன்றதற்கு, சென்டினல் தீவில் உள்ள பழங்குடியினரைத் தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
வடக்கு சென்டினல் தீவுகளில் நுழைந்து சென்டினல் பழங்குடியினரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன் சாவ் முயற்சித்தது இது முதன் முறை அல்ல. முதன்முறையாக அவர் நுழைய முற்பட்டபோது அவரை அடித்துத் துன்புறுத்தவோ, பிடித்து வைக்கவோ சென்டினல் ஆதிவாசிகள் முற்படவில்லை. அவரை எச்சரித்து வெளியேற்றி இருக்கிறார்கள். இன்னொரு முறை தங்களது தீவில் நுழைய முற்படக்கூடாது என்கிற கடுமையான எச்சரிக்கையுடன் திருப்பி அனுப்பப்பட்டார் சாவ். அப்படியிருந்தும்கூட, அடுத்த இரண்டாவது நாளே அந்தத் தீவுக்குள் ரகசியமாக அவர் நுழைய முற்பட்டார் எனும்போது, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, அவரே வலியப்போய் பெற்றுக்கொண்டது என்றுதான் கொள்ள வேண்டும். 
ஜான் ஆலன் சாவ் ஒரு சீனர். சீனாவில் கலாசாரப் புரட்சி நடந்தபோது அவரது தந்தை சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்தார். அங்கே அந்தக் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது. புதிதாக மதம் மாறும் கிறிஸ்தவர்களிடம் காணப்படும் இயல்பான, மற்றவர்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றும் தீவிரத்துவம் ஜான் ஆலன் சாவ்விடமும் காணப்பட்டதில் வியப்பில்லை. 
ஜான் ஆலன் சாவ்வின் நாள்குறிப்புகள் அவரது தாயாரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. சாவ்வின் குறிப்புகளில் காணப்படும் செய்திகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன. அவர் வடக்கு சென்டினல் தீவை, சாத்தானின் கடைசிப் புகலிடம் என்று குறிப்பிட்டு அந்தப் பழங்குடியினரை மதம் மாற்றி அங்கே மாதா கோயிலை உருவாக்க, தான் உறுதி பூண்டிருப்பதாக அந்த குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகின் மிகப் பழைமையான, அழிவை எதிர்கொள்ளும் சில பழங்குடியினரின் இருப்பிடமாக இருந்து வருகிறது அந்தமான் - நிகோபர் தீவுகள். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் அந்தமான் - நிகோபர் தீவுகளில் அடங்கிய பல்வேறு தீவுகளில் வாழ்ந்து வந்த பல பழங்குடியினர் மதமாற்றம் செய்யப்பட்டனர். மதமாற்றத்திற்கு உட்படாமல் காடுகளில் பழங்குடிகளாகத் தொடர்ந்தவர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர். அதனால் பழங்குடியினரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இந்தத் தீவுகளில் வாழும் ஜாரவாஸ் என்கிற ஆதி பழங்குடிகள் பிரிட்டிஷாரின் ஊடுருவலால் அநேகமாக அழிந்துவிட்டனர். 
வடக்கு சென்டினல் தீவுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட பகுதி. இந்தத் தீவைச் சுற்றிக் கடலில் வளைய வருவதற்குக்கூட அனுமதி தேவை. சென்டினலீஸ் என்பவர்கள் வெளியுலகில் இருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் சமுதாயத்தினர். வெளியுலகினர் யாருக்கும் அவர்களுடைய மொழி தெரியாது, புரியாது. தங்களுடைய தீவில் வெளியுலக மனிதர்கள் நுழையாமல் இன்றுவரை பாதுகாக்கின்றனர். அந்தத் தீவு வழியாக அரசு விமானம் தாழ்வாகப் பறந்தால்கூட அதன் மீது அம்பு எய்வார்கள். 
இவையெல்லாம் மத போதகர் சாவ்வுக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு மட்டுமல்ல, அவரை வடக்கு சென்டினல் தீவுக்கு அழைத்துச் சென்ற ஐந்து மீனவர்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கும் தெரியும். அவர்களுக்குப் பெரும் பணம் கொடுத்து இந்த முயற்சியில் மூன்றாவது முறையாக இறங்கினார் மத போதகர் சாவ். 
மத்திய உள்துறை அமைச்சகம் சில கேள்விகளுக்கு பதில் அளித்தாக வேண்டும். அந்தமான் - நிகோபர் தீவிலுள்ள 29 தீவுகளில் வடக்கு சென்டினல் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட தீவுகளில் பழங்குடியினர் வாழ்கிறார்கள் என்பதும், பழங்குடியினர் சட்டத்தின் அடிப்படையில் எந்தவித சுற்றுலாப் பணியோ, வளர்ச்சிப் பணியோ மேற்கொள்ள முடியாது என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, கடந்த ஜூன் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம், வெளிநாட்டினர் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைவதற்கான அனுமதி பெறும் விதிமுறையைத் தளர்த்தியது ஏன்? 
பழங்குடியினர் மற்றும் வன சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்றாக வேண்டும் என்கிற விதிமுறை இருந்தும்கூட, பாதுகாப்பு அமைப்புகளின் அனுமதி பெறாமல், அவர்களுக்கு தெரியாமல் மத போதகர் சாவ் வடக்கு சென்டினல் தீவில் அத்துமீறி நுழைய முற்பட்டது எப்படி? 
சாவின் குறிப்புகள் இல்லாமல் போனால் அவரது மரணத்தின் பின்னணி தெரியாமலே போயிருக்கும். மதத்தை பின்பற்றுவதற்கும், மத போதனைக்கும் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், அந்நிய நாட்டினரும் மிஷனரிகளும் நேரடியாகவும், பண உதவியாலும், வற்புறுத்தலாலும் ஜான் ஆலன் சாவ் போன்றவர்கள் மூலம் நடத்தும் மத மாற்ற நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்வது? இந்துத்துவா கோஷம் வலுப்பெறாமல் என்ன செய்யும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com