தடம் மாறலாகாது!

கடந்த செவ்வாய்க்கிழமை

கடந்த செவ்வாய்க்கிழமை, ஐ.நா. பொதுச்சபையின் 73-ஆவது கூட்டத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன நிகழ்த்திய உரை, இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது இலங்கை விவகாரத்தை இலங்கையே தீர்த்துக்கொள்ளும் என்று சர்வதேச மாமன்றத்தில் அவர் விடுத்திருக்கும் கோரிக்கைதான் இலங்கைவாழ் தமிழ் மக்களின் ஏமாற்றத்திற்குக் காரணம்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பதவிக்கு வந்தவுடன் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும்போது, இலங்கை ராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகளையும் மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதில் சர்வதேச ஈடுபாடு  இருக்கும் என்று அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். 2015, 2017-ஆம் ஆண்டுகளில் இதுதொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களுக்கும் இலங்கை அரசு ஆதரவு தெரிவித்திருந்தது.
அதிபர் சிறீசேனவின் ஐ.நா. உரை, உள்நாட்டுப் போரை நியாயப்படுத்துவதாகவும், மனித உரிமை மீறல் பிரச்னையில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து அரசை விடுவிப்பதாகவும் இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவ அமைச்சராக இருந்து அதை நிறைவுக்குக் கொண்டு வந்தது தான்தான் என்பதை அவர் நினைவுபடுத்தியிருக்கிறார். இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க ராணுவம் மேற்கொண்ட பணியை சரி என்று அறிவித்து, இறைமையுள்ள இலங்கையில் சர்வதேசத் தலையீடுகளுக்கு அவசியம் இல்லை என்று அவர் வலியுறுத்தியிருப்பது ஒரு மிகப்பெரிய கொள்கை மாற்றம் என்றுதான் கூற வேண்டும்.
கடந்த 2015, ஜனவரி 5-ஆம் தேதி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலிலும், அதே ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இன்றைய ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றதற்கு இலங்கைவாழ் சிறுபான்மைத் தமிழர்களும், அவர்களின் குரலாக ஒலிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும்தான் காரணம் என்கிற பின்னணியில் அதிபர் சிறீசேனவின் கொள்கை ரீதியிலான தடம் மாற்றம் வியப்பளிக்கிறது.  போர் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்த விசாரணை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணமும், பொது மக்களிடமிருந்து அபகறிக்கப்பட்ட காணிகளை திருப்பித் தருதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற்றுதல் போன்றவை கடந்த அதிபர் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள். 
ஆரம்பத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதும், தவறுகளுக்கான பொறுப்பு கூறுதலை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானத்துக்கு மைத்ரிபால அரசு அணுசரனை வழங்கியதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவதுபோல, இலங்கையின் நடுவண் அரசு தனது வாக்குறுதிகளில் பின்வாங்குவது அடுத்தாற்போல வரவிருக்கும் அதிபர் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கக்கூடும் என்கிற அச்சம் பரலவாகக் காணப்படுகிறது.
இலங்கை அரசின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்ட ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை பேரவையால் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகால அவகாசம் 2019 மார்ச் மாதத்துடன் முடிய இருக்கிறது. ஆனால், இன்னும் ஆறு மாதங்களுக்குள் அதற்கான விசாரணை நடைமுறை எதையும் உருவாக்குவதற்கான சாத்தியங்கள் இல்லை எனும்போது அடுத்தக்கட்ட நீக்கம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 
வடகிழக்கு மாகாண கவுன்சிலின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 25-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் அமைக்கப்பட்ட முதல்வர் விக்னேஷ்வரன் தலைமையிலான அரசு பெரிய அளவில் எந்தவிதப் பிரச்னைக்கும் முடிவுகாணவில்லை. எதிர்பார்த்ததுபோல, அரசமைப்புச் சட்டத்தின் 13-ஆவது பிரிவின்படி மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வை இலங்கையின் நடுவண் அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை அனைத்து மாகாணங்களும் முன் வைக்கின்றன. அதிகாரமில்லாத ஆட்சியாக வடகிழக்கு மாகாண கவுன்சில் செயல்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதன் விளைவாக, மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்திருக்கின்றன.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிபர் மைத்ரிபால 
சிறீசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிடாததால் பின்னடைவை எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழல்தான் அதிபர் சிறீசேனவின் கொள்கை மாற்றத்திற்குக் காரணம் என்று தோன்றுகிறது. அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தென்னிலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சயிடம் இழந்து விடுவோமோ என்கிற அச்சம்தான் இந்த கொள்கை மாற்றத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும். அவரது அச்சம் நியாயமானதும்கூட. அதேநேரத்தில், வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலு இழப்பதும், இலங்கையின் சிறுபான்மை தமிழ் மக்கள் இன்றைய நடுவண் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழப்பதும் அதிபர் சிறீசேனவிற்கு அதைவிடப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. கடந்த அதிபர் தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்ததால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. அதை நினைவில் நிறுத்தி இலங்கையில் சிறுபான்மையினர் குறித்த நல்லெண்ணத்தை பெருபான்மையினர் வளர்ப்பதும், சிறுபான்மையினர் 
மத்தியில் நடுவண் அரசின் மீதும் பெரும்பான்மை சிங்களர்கள் மீதுமான அச்ச உணர்வை அகற்றுவதும்தான் அதிபர் சிறீசேனவின் கரங்களுக்கு வலு சேர்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com