அடையாளக் குறைப்பு!

மிகவும் தாமதமாக


மிகவும் தாமதமாக விழித்துக்கொண்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2.50 குறைத்துள்ளது. அதேபோல, எல்லா மாநிலங்களும் தங்களது உள்ளூர் வரிகளை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மாநில வரியைக் குறைத்திருப்பதால் அந்த மாநிலங்களில் பெட்ரோலும் டீசலும் ரூ.5 குறைந்திருக்கிறது. 
இந்தியப் பொருளாதாரம் இரண்டு மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டு தள்ளாடுகிறது. ஒருபுறம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துவரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. 
உலகளவில் மிக அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நமது கச்சா எண்ணெய்க்கான தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றாற்போல நமது உற்பத்தியோ, ஏற்றுமதியோ அதிகரிக்கவில்லை. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. அதே நேரத்தில் நமது ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்காததால் பல்வேறு நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வரும் அவலத்தை இந்தியா எதிர்கொள்கிறது. 
சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை நரேந்திர மோடி அரசு பதவியேற்ற முதல் மூன்று ஆண்டுகளில் கடுமையாக சரிந்தபோது மக்களுக்கு வழங்கும் பெட்ரோல் டீசல் மீதான சில்லறை விற்பனை விலையை அதற்கேற்பக் குறைக்கவில்லை. கலால் வரியை அதிகரித்து கச்சா எண்ணெய் விலைக் குறைவை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. அதன் பயனாக பல்வேறு நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடிந்தது என்று மத்திய அரசு தெரிவிப்பதை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. ஆனால், அதுவே முழுமையான உண்மையல்ல. கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைத்த பயன் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்பட்டதை விட அதிகமாக அரசின் நிர்வாகச் செலவினங்களுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதுதான் உண்மை.
பெட்ரோல், டீசலின் விலை இந்தியாவின் பெருநகரங்களில் வரலாறு காணாத அளவில் ரூ.90-ஐ தொட்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் கணிசமான பகுதி மத்திய - மாநில அரசுகள் அதன் மீது தனித்தனியே விதிக்கும் வரிகள்தான். பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் போதெல்லாம் அதனால் கிடைக்கும் வரி வருவாயும் அதிகரிப்பதால் மாநில அரசுகள் தங்களது வருவாயை இழக்கத் தயாராக இல்லை. 
மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், டீசலுக்கு ரூ.15.33-ம் நாடுதழுவிய அளவில் கலால் வரியாக வசூலிக்கிறது. ஆனால், மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரிதான் அதைவிட அதிகம். மத்திய - மாநில வரிகளைக் கூட்டிப் பார்த்தால் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல், டீசலிலும் ஏறத்தாழ 60% வரியாக வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், விற்பனையாளர்களுக்குத் தரப்படும் கமிஷனையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
பெட்ரோல் மீது ஆந்திரம் 36%-ம், டீசல் மீது 28%-ம், கர்நாடகம் 30%, 21%-ம், மத்தியப் பிரதேசம் 36%, 23%-ம், மகாராஷ்டிரம் 39%, 25%-ம், தமிழ்நாடு 32%, 24%-ம், மேற்கு வங்கம் 45%, 38%-ம், பிகார் 55%, 48%-ம் விற்பனை வரியாக வருவாய் ஈட்டுகின்றன. இதுபோலத்தான் எல்லா மாநிலங்களும்.
இந்த நிலையில் இந்த வருவாயைக் குறைத்துக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தினாலும் அதை எல்லா  மாநில அரசுகளும் ஏற்குமா என்பது சந்தேகம்தான். அதற்குக் காரணம், ஜிஎஸ்டி விதிப்பு வந்த பிறகு மாநிலங்களுக்கு என்று தனியாக எந்த வருவாயும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த வரி வருவாயையும் ஜிஎஸ்டி மூலம் வசூலித்து அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்து கொடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால், மாநிலத்துக்கென்று கிடைக்கின்ற குறிப்பிடும்படியான வரி வருவாய் பெட்ரோல், டீசல் மீது மட்டுமே. இதையும் இழக்க மாநிலங்கள் தயங்குவதில் வியப்பில்லை.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருப்பது போல் பெட்ரோல், டீசல் மீது கலால் வரியை ரூ.2.50 குறைத்திருப்பதன் மூலம் பிரச்னைகள் தீர்ந்துவிடாது. மாநில அரசுகள் ஏற்கெனவே ரூ.2.50 பெயருக்குக் குறைத்து மக்களின் அதிருப்தியை சமாளிக்க முற்பட்டிருக்கின்றன. லிட்டருக்கு ரூ.90 பெட்ரோல் விலையிலிருந்து ரூ.5 குறைவதால் பெருமளவில் மக்கள் திருப்தி அடைவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைப்பார்களேயானால், அவர்கள் மக்களின் மனநிலையை அறியாதவர்கள் என்றுதான் கூற வேண்டும்.
அதேபோல பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது என்கிற ஆலோசனை ஆரம்பம் முதலே முன்வைக்கப்படுகிறது. "ஒரே நாடு, ஒரே வரி' என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டும் பெட்ரோல், டீசல் மட்டும் அந்த வரம்புக்குள் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் மாநில அரசுகளின் எதிர்ப்பு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 
மாநில அரசுகள் அன்றாட வருவாய் செலவினங்களை ஈடுகட்ட வரிவிதித்துக் கொள்ளும் உரிமையை ஜிஎஸ்டி பறித்துவிட்ட நிலையில், பெட்ரோல், டீசலில் இருந்து கிடைக்கும் வரிவருவாயையும் இழந்துவிட்டால் மாநில அரசுகள் முற்றிலுமாக செயலிழந்துவிடும் ஆபத்து காத்திருக்கிறது. 
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையாத வரை, நமது பெட்ரோல், டீசல் தேவைகள் முறைப்படுத்தப்படாத வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்புகள் அடையாளக் குறைப்புகளாக இருக்குமே தவிர, மக்களின் கொதிப்பை அடக்குவதாக இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com