வரம்பு மீறல் தகுமோ?

காவல் துறையினர்

காவல் துறையினர் குறித்து அன்றாடம் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் திருச்சி அருகேயுள்ள துவாக்குடியில்  வாகனச் சோதனையில் காவல் ஆய்வாளர் உதைத்து, கர்ப்பிணிப் பெண் உஷா மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையை அடுத்த தாம்பரத்தில் தாம்ஸன் என்கிற காவல் ஆய்வாளர், 72 வயதான முத்தையா என்பவரின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் காசோலையை வாங்கிச் சென்றிருக்கிறார். காவல் ஆய்வாளர் தாம்ஸன் மீது ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவில் பல குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

சென்னை திருவொற்றியூரில் கடந்த சனிக்கிழமை மணிகண்டன் என்கிற 22 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். "எனக்கு நேர்ந்த இந்த கதி வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது' என்று மரண வாக்குமூலம் எழுதி வைத்திருக்கும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பது என்னவோ உண்மை. தன் குற்றப் பின்னணியில் இருந்து திருந்தி வாழ அவர் முற்பட்டும் கூட, தொடர்ந்து காவல் துறை அவருக்குத் தந்த மன உளைச்சல், அவரைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது என்பது மணிகண்டனின் பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு. 

கொருக்குப்பேட்டையில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த புருஷோத்தமன் என்பவரின் ஆட்டோ ரிக்ஷாவை முருகேசன் என்கிற காவல் ஆய்வாளர் சேதப்படுத்தியது அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து புகார் அளிப்பதற்குக் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு இரண்டு நாள் அலைந்தும் கூட, காவல் ஆய்வாளரை சந்திக்க முடியாமல் போன புருஷோத்தமனுக்கு சமூக வளைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவிய,  ஆட்டோவை காவல் ஆய்வாளர் முருகேசன் தேசப்படுத்தும் காட்சி அதிர்ச்சி அளித்தது.  சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்திருக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன்.

இதுபோல காவல் துறையினர் பொதுமக்கள் மீது நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்றால், வடமாநிலங்களில் இதுவே கொடூரமாக மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையினரால் நிகழ்த்தப்படும்  கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல்கள்  இப்போது தேசிய அளவில் ஆத்திரத்தையும், விவாதத்தையும் எழுப்பியிருக்கின்றன. 

ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் விவேக் திவாரி என்கிற 38 வயது விற்பனைப் பிரதிநிதி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு லக்னெளவில் தன்னுடைய சக ஊழியர் ஒருவருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  வாகன சோதனைக்காக வண்டியை நிறுத்தாமல் விரைந்தார் என்பதற்காகக் காவலர் ஒருவர் அவரைத் தொடர்ந்து சென்று சுட்டுக் கொன்றிருக்கிறார். விவேக் திவாரியை, தற்காப்புக்காகச் சுட்டதாகக் காவலர் பிரசாந்த் செளத்ரி தெரிவிப்பதாகவும், அதனால் இதை என்கவுன்ட்டர் கொலையாகக் கருதக் கூடாது என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  நியாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.

விவேக் திவாரியின் கொலை என்பது ஏதோ தவறி நடந்துவிட்ட ஒரு சம்பவம் என்று கருதி ஒதுக்கிவிட முடியவில்லை. யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 2017-இல் பதவியேற்றுக் கொண்டது முதல் இதுவரை 2,300 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், 60-க்கும் அதிகமான என்கவுன்ட்டர் மரணங்களும் அந்த மாநிலத்தில் நடந்திருக்கின்றன. 

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு  முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்படுவதில்லை. சில நிகழ்வுகளில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் குடும்பத்தினருக்குத் தரப்படுவதில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது, உத்தரப் பிரதேச முதல்வரும், அமைச்சர்களும் அதுகுறித்து விசாரிப்பதைக் கூட  தவிர்த்திருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. "தவறு செய்தால் அவர்களை என்கவுன்ட்டரில் சுடுவதில் என்ன தவறு?' என்று அமைச்சர்கள் சிலர் பொது வெளியில் பேசியிருப்பதும், "சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் அவசியம்' என்று மூத்த காவல் துறை அதிகாரிகள் வாதிடுவதும்  உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமும் நீதியும் எந்த அளவுக்குக் கேலிப் பொருளாகியிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

காவல் துறையினரின் அத்துமீறல்கள் ஒருபுறம் தொடரும் அதே வேளையில், இன்னொரு புறம் காவல் துறையினர் மத்தியில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும். பணிச் சுமையின் காரணமாகவும், மன அழுத்தத்தின் காரணமாகவும் காவலர்களும் கீழ்நிலை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

காவல் துறையினரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு, அவர்கள் மத்தியில் காணப்படும் மனநிலை பாதிப்பு காரணமாக இருக்கக்கூடும். ஐ.நா. சபை பரிந்துரைத்திருக்கும் எண்ணிக்கையை விட மிகமிகக் குறைந்த அளவில் இந்தியாவில் காவலர்களின் எண்ணிக்கைக் காணப்படுகிறது. அனுமதிக்கப்பட்டிருக்கும் காவலர்களின் எண்ணிக்கைகூட முழுமையாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இதன் விளைவாக ஏற்படும் பணிச்சுமை அவர்கள் பொறுப்புடன் செயல்படாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம்.
அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காகக் காவல் துறையினர் வரம்பு மீறி செயல்படுவது விபரீதத்துக்கு வழிகோலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com