மறந்துடாதீங்க... வயசானவங்களோட மூளை சுறுசுறுப்பா செயல்படனும்னா நிறையத் தண்ணீர் குடிக்கனும்.

மனித உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு அதாவது டிஹைட்ரேசன் ஏற்பட்டால் அத்தகையவர்களுக்கு உடற்பயிற்சியில் ஆர்வமிழப்பு ஏற்படுவதோடு மூளைச்செயல்திறனிலும் கணிசமான பாதிப்பு உண்டாவது கண்டறியப்பட்டது.
மறந்துடாதீங்க... வயசானவங்களோட மூளை சுறுசுறுப்பா செயல்படனும்னா நிறையத் தண்ணீர் குடிக்கனும்.

உடற்பயிற்சியில் ஆர்வமுடைய வயதானவர்கள் தினமும் தங்களது உடல் எடைக்குத் தக்க அதிக அளவில் நீர் அருந்தினால் மட்டுமே உடற்பயிற்சியினால் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய புலனுணர்வின் முழு பலனும் கிடைக்கும் என பாஸ்டனில் நடைபெற்ற சமீபத்திய மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சாண்டியாகோவில் அமைந்துள்ள அமெரிக்கன் பிசியாலஜிக்கல் சொஸைட்டியின் வருடாந்திரக் கூட்டத்தில் வயதான பெரியோர்களின் உடல்நிலையில் அவர்களது உடற்பயிற்சியின் விளைவாக ஏற்படும் மாற்றங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பின்பு என இரு நிலைகளில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிகழும் மாற்றங்கள் ஆராயப்பட்டன.

அப்போது மனித உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு அதாவது டிஹைட்ரேசன் ஏற்பட்டால் அத்தகையவர்களுக்கு உடற்பயிற்சியில் ஆர்வமிழப்பு ஏற்படுவதோடு மூளைச்செயல்திறனிலும் கணிசமான பாதிப்பு உண்டாவது கண்டறியப்பட்டது. இது முன்பே இளைஞர்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது தான் எனினும் வயதானவர்களிடையேயும் இதே விதமான மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நடுத்தரவயதுடையோர் மற்றும் வயதானவர்களிடையே அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் எனும் தாக உணர்வு ஏற்பட்டால் அவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு இருப்பதன் அறிகுறி அது என உணர வேண்டும். அப்போது தேவையான நீர் அருந்தாவிட்டால் தொடரும் தாக உணர்வு அவர்களது உடற்பயிற்சியினால் கிடைக்கவிருக்கிற நற்பலன்களைக் கூட குறைத்து விடும் என்கிறார்கள் பிராண்டன் யாட்ஸ் எனும் அமெரிக்க மருத்துவர்.

இந்த விவரங்களை வயதானவர்களிடையே தெளிவாக புரிய வைக்க மருத்துவக்குழுவினர் ஒரு புழுக்கமான நாளொன்றில் 55 வயதுக்குட்பட்டவர்களிடையே பொழுதுபோக்கு சைக்கிள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்தப் பயிற்சியின் போது சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பும், பின்பும் அவர்களது உடலில் நிகழும் மாற்றங்கள் குறித்து ஆராய அவர்களது சிறுநீர் சாம்பிள் ஆராய்ச்சிக்காகப் பெறப்பட்டது. அது மட்டுமல்ல அவர்கள் தங்களது சைக்கிள் பயிற்சியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எத்தனை விரைவாக முடிக்கிறார்கள் என்பதும் கணக்கிடப்பட்டது. நிகழ்வின் முடிவில் ஆய்வில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போட்டியில் கலந்து கொண்டவர்களின் உடல் மற்றும் மனநலனில் நிகழ்ந்த மாற்றங்கள் கணக்கிடப்பட்டன. அதனடிப்படையில் பார்க்கையில், அடிக்கடி நீர் அருந்த வேண்டும் எனும் தாக உணர்வைப் புறம் தள்ளி தங்களது சைக்கிள் பயிற்சியை விரைவாக முடித்தவர்களுக்கும், உரிய நேரத்தில் நீர் அருந்தி தங்களது தாகத்தை ஒத்திப் போடாதவர்களுக்கும் இடையே அவர்களுக்கு இடப்பட்ட டாஸ்கை முடிப்பதில் பெரிதாக வேறுபாடு இல்லையென்றாலும் உடற்பயிற்சியின் காரணமாக அவர்களுக்கு கிடைக்கவிருக்கிற புலனுணரும் திறனில் மிகப்பெரிய மந்தநிலை காணப்படுவது கண்டறியப்பட்டது. காரணம் அவர்களின் உடலின் தேவையை புறக்கணித்து அதன் நீர்ச்சத்துக் குறைப்பாட்டை தாங்களே வரவழைத்துக் கொண்டவர்களாகி விட்டார்கள். இவர்களால் பயிற்சியின் ஆரம்ப கட்டங்களில் நீர்ச்சத்துக் குறைபாடு இல்லாதவர்களுக்கு இணையாக செயல்பட முடியுமே தவிர நேரமாக ஆக நீர்ச்சத்துக் குறைவால் மூளை விரைவாகச் சோர்வடைந்து உற்சாகம் குன்றி மிகுந்த உடற்சோர்வுக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகி விட நேர்கிறது. இது அவர்களது ஆரோக்யத்தில் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. 

அது மட்டுமல்ல, உடற்பயிற்சி செய்வது எதற்காக? உடல் ஆரோக்யம் மேம்படத்தானே? அப்படியிருக்கையில் உடற்பயிற்சியின் போது சரியாக தண்ணீர் அருந்தாமல் இவர்கள் புறக்கணித்தால் என்ன பலன் கிடைக்கக் கூடும்?! வயதானவர்களில் பலருக்கு அவ்வப்போது நீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு இருந்தாலும் கூட பலரும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதாக இருக்கிறது என்பதற்காகவும் சில நேரங்களில் இதற்காகவும் பிறரது உதவியை நாட வேண்டியதாக இருக்கிறதே என்ற மனச்சங்கடத்தாலும் தாக உணர்வைத் தள்ளிப்போடுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. இளமையில் மட்டுமல்ல வயதான பின்னும் நமது உடலுக்குத்தேவையான நீர்ச்சத்து சரியான அளவில் பராமரிக்கப் பட்டால் தான் உடற்பயிற்சி செய்வதன் பலன் பூரணமாகக் கிடைக்கும். இல்லையேல் உடல் ஆரோக்யமாக இருப்பது போலத் தோன்றினாலும் மூளை உடலுடன் ஒத்துழைக்காது மந்த நிலை ஏற்பட்டு அது சிக்கம் தரும் தனிப்பிரச்னையாக மாறி விடும். பிறகு உடற்பயிற்சி செய்து பெற்று பலன் தான் என்ன? அது வீண் வேலை என்று இந்த மருத்துவ ஆய்வின் முடிவு தனது தரவுகளை முன் வைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com