நடுத்தர வயதில் நடுங்கச் செய்யும் மெனோபாஸ் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம்?

சில பேருக்கு சுதந்திரத்தையும், சில பேருக்கு பிரச்னையையும் பலருக்கு தொல்லையையும் தருகிறது இந்த மெனோபாஸ்.
நடுத்தர வயதில் நடுங்கச் செய்யும் மெனோபாஸ் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம்?

சில பேருக்கு சுதந்திரத்தையும், சில பேருக்கு பிரச்னையையும் பலருக்கு தொல்லையையும் தருகிறது இந்த மெனோபாஸ். மெனோபாஸ் என்றால் என்ன என்றும் அது குறித்த அச்சங்களையும் தீர்வுகளையும் விரிவாகப் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால்.

Dr. சாந்தி விஜய்பால்
Dr. சாந்தி விஜய்பால்

ஆயுர்வேதத்துல மெனோபாஸ் என்பதை ரஜோ நிவ்ருத்தி காலம் என்று கூறுவார்கள்.  இது நான்கு வகைப்படும். 

சுபாவிகா - இயல்பாக மாதவிடாய் ஒரு பெண்ணுக்கு 45 - 50 வயதில் நின்றுபோவது
சாரீரிகா - உடல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டு நின்று போவது
மானஸிகா - இது மனம் சம்பந்தப்பட்டது. திடீர் அதிர்ச்சி அல்லது அதிக துயர் போன்ற காரணங்களால் நிற்பது
ஆகன்துஜா - எதாவது விபத்து, அறுவை சிகிச்சை போன்றவற்றால் பீரியட்ஸ் நின்று போவது

எளிமையாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், மாதா மாதம் ஏற்படும் மாதவிடாய் நின்றுபோகும் நிலையே மெனோபால். இது ஒரு வியாதியல்ல. மிகவும் இயற்கையான ஒன்று. இளமையும் ஆரோக்கியமும் இருக்கும் போது ஒரு பெண் கருவுருவாள். ஆனால் வயதாக ஆக, அவளது உடலில் இருக்கும் கருமுட்டை அதாவது சினைப்பையில் உள்ள கருமுட்டை தீர்ந்துவிடும். எப்போது கடைசி கருமுட்டை தீர்ந்து போகிறதோ, அதன்பின் மாதவிடாய் வரவே வராது. இதுதான் மெனோபாஸ். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும். ஆனால் எல்லா பெண்களுக்கும் கட்டாயம் வந்தே தீரும். 45 வயதிலிருந்து 54 வயது வரை எப்போது வேண்டுமானால் மெனோபாஸ் வரலாம்.

எவை எல்லாம் மெனோபாஸை நிர்ணயிக்கிறது?

பிறக்கும் போதே குறிப்பிட்ட அளவு சினை முட்டைகளுடன் தான் ஒரு பெண் பிறப்பாள். அது வளர்ச்சி அடையாத சின்ன சினைமுட்டைகளாக இருக்கும்.
வளர் இளம் பருவத்தில், வயதுக்கு வந்தபின், ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு சினை முட்டை உருவாகத் தொடங்கும். நிறைய பேருக்கு அதைப் பொருத்து தான் மெனோபாஸ் காலகட்டம் அமையும். அம்மாவுக்கு எந்த வயதில் மாதவிடாய் நிற்கிறதோ மகளுக்கும் அதே வயதில் நிற்கலாம். ஒன்றிரண்டு வருடம் வித்யாசம் இருக்கலாம்.  மெனோபாஸ் மூன்று வகைப்படும், அவை

ப்ரீ மெனோபாஸ்

கடைசி மாதவிடாய் எப்போது நிற்கிறதோ அதை ப்ரீ மெனோபாஸ் வருடம் என்று சொல்வோம். இது ஏதோ குறுகிய காலம் கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக மாதவிடாய் வருவது தாமதப்படும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் வரும் மாதவிடாய் அதன் பின் 40 நாளுக்கு ஒரு மூறை, 60 நாளுக்கு ஒரு தடவை, மூன்று மாதங்களில் ஒரு தடவை என்று விட்டு விட்டு வரும். எப்போது ஒரு வருடம் வரை வராமல் இருக்கிறதோ அது பெரி மெனோபாஸ் என்று சொல்வோம். ஒரு வருடம் தாண்டிவிட்டால் போஸ்ட் மெனோபாஸ் என்று சொல்வோம்.

எர்லி மெனோபாஸ்

சில பேருக்கு எர்லி மெனோபாஸ் ஏற்படலாம். சீக்கிரம் வயதுக்கு வந்துவிட்டவர்கள், ஹார்மோன் பிரச்னை இருப்பவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்துவிடும். இதுதான் எர்லி மெனோபாஸ்

சர்ஜிகல் மெனோபாஸ்

கர்ப்பப்பை எடுத்துவிட்டவர்களுக்கு அது ஒரு மெனோபாஸ் போலத்தான்.. கர்ப்ப்பை மற்றும் சினைப்பை எடுத்துவிட்டால் அதன் வேலை இருக்காது. இது மெனோபாஸ் போலத்தானே? இதை சர்ஜிகல் மெனோபாஸ் என்போம்.

மெனோபாஸின் அறிகுறிகள் என்ன?

நமக்கு மெனோபாஸ் வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? இதற்கான அறிகுறிகளைப் பார்க்கலாம்.
 
உடல் சம்பந்தப்பட்ட அறிகுறி (Physical Symptoms)

  • இரவில் தூக்கத்தில் சில்லென்று வியர்வை உருவாகி எழுந்திடுவார்கள். தூக்கம் சரியாக வராது.
  • எப்போதும் அமைதியின் வடிவமாக இருப்பவர்கள் கூட கோபமாக இருப்பவர்கள். அடிக்கடி எரிச்சல் அடைவார்கள். 
  • மாதவிடாய் வருவதற்கு முன்னால் கால் வீக்கம் அடையும். சூடு பரவும், மெனோபாஸ் காலகட்டம் நெருங்க நெருங்க, இல்லற வாழ்க்கையில் ஆர்வம் குறையும். இது கணவருக்கு எரிச்சல் தரும். பிரச்னை பெண்களிடத்தில் இல்லை, மெனோபாஸால் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மனம் சம்பந்தப்பட்ட அறிகுறி (Mental Symptoms)

பெண்ணுக்கே உரித்தான ஒரு விஷயம் கருவுறுதல். அது இனி இல்லை எனும்போது அவர்களுக்கே தெரியாமல் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதனால்  இதனால் ஏதோ ஒருவிதமான பாதுகாப்பற்ற உணர்வுநிலையும் ஏற்படும். அதன் காரணமாக சிலருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகி, மனத்துக்குள் பாதிப்படைவார்கள். தேவையில்லாத பதற்றம், எரிச்சல், கோபம் உள்ளிட்ட உணர்வு அழுத்தங்கள் ஏற்பட்டு பலவீனமாக காணப்படுவார்கள். ஹிட்டன் ஸ்ட்ரெஸ் (மறைவாக மனத்தின் அடியாழத்திலுள்ள மன அழுத்தம்) ஏற்படும்.

எம்டினெஸ்ட் சிண்ட்ரோம் (Emptyness Syndrome)

வீட்டில் உள்ளவர் அவரவர் வேலை படிப்பு என மிகவும் பரபரப்பாக இருக்கையில், நடுத்தர வயதுப் பெண்கள் திடீரென தங்கள் வாழ்க்கை வெறுமையாகிவிட்டதாக உணர்கிறார்கள். இப்படி தனக்கு யாரும் இல்லை என்ற நினைப்பே அவர்களை சுய பச்சாதம் கொள்ளச் செய்துவிடும். அதனை தொடர்ந்து கடுமையான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். எரிச்சல், சுய பரிதாபம், தற்கொலை எண்ணம் போன்றவை உருவாகும். சிறிய விஷயங்களையும் பெண்கள் பூதாகராகமாக புரிந்து கொள்வார்கள். ஹார்மோன் சுரப்பு இல்லாததால் பிறப்புறுப்பு ஈரத்தன்மை இழந்து வறண்டுவிடும். இதனால் கிருமித் தொற்று ஏற்படும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றுப் பிரச்னை ஏற்படும். 

மேற்சொன்ன அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை உங்களுக்கு ஏற்பட்டால் அது மெனோபாஸ் எனப் புரிந்து கொள்ளலாம். மேலும் மெனோபாஸ் வியாதி கிடையாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். 

மெனோபாஸ் பெரும்பாலான பெண்களுக்கு பிரச்னையாக இருந்தாலும், சமச்சீரான உணவு, உடற்பயிற்சி செய்வோருக்கு இது அதிகளவு பிரச்னைகள் தருவதில்லை. 100 பேரில் 90 பேருக்கு, இக்காலகட்டத்தில் உடலில் சூடாக வெப்பம் பரவுவது போலிருக்கும் அல்லது சில்லென்று வியர்ப்பது போலிருக்கும். மீதமிருக்கும் பத்து சதவிகிதத்திக்கு இது ஏற்படாது. அதிக உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன், இரவு வெகு நேரம் கண் விழிப்பவர்கள், மாதவிடாய் தள்ளிப் போக மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்களுக்கு மெனோபாஸ் பிரச்னையாக இருக்கும்.

இது உடல் பிரச்னை மட்டுமல்ல. இது மனத்தையும் சேர்த்து பாதிக்கும். அம்மாவுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு இது இருந்தால் அவர்கள் மனத்துக்கு நீங்கள் ஆறுதலாக இருக்க வேண்டும். நிறைய ஆண்களுக்கு இது தெரியாது. 'எப்படி நடந்துக்கறா பண்றா பாரு’ என்று சொல்லி திட்டுவார்கள். பெண்கள் வேண்டும் என்றே இப்படி செய்வதில்லை. இது ஹார்மோன் பிரச்னை என புரிந்து கொண்டு அதற்கேற்ப நீங்கள் நடந்து கொண்டால் பெண்கள் எளிதாக இதிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். 

தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்படுமா?

மெனோபாஸ் காலகட்டத்தில் உடலுறவு இருந்தால் கருவுற்று விடுவோமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது. உடலுறவே இனி தேவை இல்லை என்ற முடிவுக்கும் சிலர் வந்துவிடுவார்கள். இந்த இரண்டும் தேவை இல்லை. மெனோபாஸ் வந்துவிட்டதால் கருவுருதல் முற்றுப்புள்ளி பெற்றுவிடும். எனவே பயப்படத் தேவையில்லை. தாம்பத்திய உடலுறவு என்பது கணவன் மனைவி இருவரின் அன்பின் வெளிப்பாடு எனவே இதற்கு மெனோபாஸ் தடையில்லை. பிறப்புறுப்பு வறண்டு இருப்பதால் பெண்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு உறவு கொள்வதில் பிரச்னை இருக்கலாம். இதற்கு சரியான தீர்வு தேங்காய் எண்ணெய். சிறிதளவு அதைத் தடவினால் போதும்.

மெனோபாஸ் பிரச்னைக்கு என்ன சிகிச்சை?

ஆயுர்வேத்தத்தில் பொதுவாக இதற்கான சிகிச்சை என்னவென்று பார்ககலாம்

புத்துணர்வு தெரபி (Rejunuvation Therapy)

ப்ரீ மெனோபாஸ் காலகட்டத்தில் மாதவிடாய் ஏற்படும் போது ஹார்மோன்கள் சமச்சீரின்றி இருக்கும், இதனால் மாதவிடாய் ஒழங்கற்று இருக்கும். இச்சமயங்களில் சரியான சமச்சீர் உணவு பரிந்துரைக்கப்படும். உணவுப் பரிந்துரை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாக உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய சிலருக்கு டானிக்குகளும் பரிந்துரைப்போம்.

உணவுப் பரிந்துரைகள்

அதிகமாக கருவாடு, புளிப்பு உப்பு அதிகமான உணவுப் பொருட்கள் சேர்த்த மீன் குழம்பு, ஊறுகாய் சாப்பிட்டால் ஹாட் ப்ளஷ் எனப்படும் பிரச்னை அதிகரிக்கும். சிலருக்கு திட உணவு சாப்பிட்டால் வேலை செய்ய முடியாது என்ற காரணத்தால், அடிக்கடி, காபி, டீ குடிப்பார்கள். ஆனால் மெனோபாஸ் காலகட்டத்தில் சர்க்கரை அதிகம் பயன்படுத்துவது, குளிர்பானம் குடிப்பது உடலுக்கு நல்லது அல்ல. காரணம் அவை எலும்புகளை வலுவிழக்கச் செய்துவிடும். இது போன்ற பழக்கங்களால் ஒரு வருடம் முன்னதாகவே மெனோபாஸ் வந்துவிடும். போலவே அதிகளவு கஃபைனுள்ள காபி குடிப்பதால், பாஸ்போரிக் அமிலம் உள்ள பானங்களை குடிப்பதாலும் எலும்பில் பிரச்னைகள் ஏற்படும். எலும்பு பலவீனமடையும். சிலர் நடக்கும் போது கீழே விழுந்துவிடுவார்கள். அதனால் எலும்பு முறிவு ஏற்படுவதும் உண்டு. 

சிலருக்கு மைதாவில் செய்த உணவு வகைகளை சாப்பிடப் பிடிக்கும். ஆனால் நல்ல சுவையான உணவெல்லாம் மைதாவில் இருந்தாலும், அதை தவிர்ப்பதே நல்லது. மைதாவில் சமைக்கப்படும் உணவு வகைகளை சாப்பிடும்போது ஹார்மோன் பிரச்னைகள் அல்லது ஒவ்வாமை ஏற்படும். காரணம் மைதாவை சமையலுக்கு ஏற்றவாறு லகுவாகவும் மென்மையாகவும் மாற்ற அலக்ஸான் எனும் வேதிப்பொருளை சேர்ப்பார்கள். தவிர, நிறைய புரதம் சேர்ப்பார்கள், வெண்மையாக்க ப்ளீச் செய்வார்கள். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மைதாவை பிரதானப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை இன்ஃப்ளாமெட்டரி ஃபுட் எனப்படும். அது ஹார்மோன் சுழற்றியை பாதிக்கும், தூக்கமின்மை ஏற்படுத்தும், தைராய்ட் பிரச்னைகள் உருவாக்கும் இப்படி பல பக்க விளைவுகளுக்கும் காரணி மைதா எனும் போது மெனோபாஸ் காலகட்டத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் அதைத் தவிர்ப்பது நல்லது.

பெண்கள் இரவில் தாமதமாக தூங்குவார்கள். ஆனால் காலையில் எழுந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் தைராய்ட் உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தைராய்ட் வந்தாலே அதனைத் தொடர்ந்து ஓவேரியன் ஹார்மோன் பிரச்னைகள் ஏற்படும். இதனால் மாதவிடாய் அதிகரிக்கும்.

45 - 55 வயதில் பிரச்னையில்லாமல், எலும்பு உடையாமல் சாதாரணமாக மெனோபாஸ் முடிய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், 35 வயதிலிருந்தே அதற்கான ஹோம் வொர்க்கை தொடங்கிவிட வேண்டும்.

காலையில் சூரிய உதயமாகி ஒரு மணி நேரத்துக்குப் பின் உங்களுக்காக தினமும் 15 நிமிடம் செலவழிக்க வேண்டும். எவ்வித சாக்கு போக்கும் சொல்லாமல், அந்தக் காலை வெயில் படும்படி நடக்க வேண்டும். அதுவும் வேக வேகமாக நடக்க வேண்டும். நன்றாக வியர்க்க வேண்டும். இந்த நடைப்பயிற்சி உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு பலவிதமான நன்மைகளைத் தரும். 

15 நாட்களுக்கு ஒரு முறை ஆயில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனால் தசைகள் பளபளப்பாகும். மெனோபாஸால் பொதுவாக தோல் வறண்டு போய் அடிக்கடி அரிப்பு ஏற்படும். ஆயில் மசாஜ் செய்து கொள்வதால் தோல் வறட்சி நீங்குவதுடன் சருமத்தில் புத்துணர்வு ஏற்படும். மேலும் நன்றாகப் பசிக்கும். சரியாக ஜீரணம் ஆகும். தலைக்கு மசாஜ் செய்தால் மன அழுத்தம் குறைந்து, இரவில் தூக்கம் நன்றாக வரும். தூக்கம் சரியில்லை எனில் ஹார்மோன் பிரச்னை அதிகரிக்கும் என்பதால் நன்றாக தூங்கிவிட வேண்டும்.

இரவு சாப்பாடு சீக்கிரம் முடித்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை 7.30 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். அதற்கு பின் பாலில் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து குடிப்பது நல்லது. பீட்ரூட் ஜூஸ் வாரம் ஒரு முறை குடிக்க வேண்டும். நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம். கற்றாழைச் சாறை குடிக்கலாம்.

இரவில் பாதாம் பருப்பு 5 ஊற வைத்து, காலையில் தோல் உரித்து 2 மிளகு, 2 ஏலம், அரிசி விதை எல்லாம் சேர்த்து அரைத்து - பாலோடு சேர்த்து (சர்க்கை சேர்க்காமல்) வெதுவெதுப்பாக இருக்கும் போது தேன் சேர்த்து குடித்துவிடுங்கள் இது எல்லாப் பிரச்னைக்கும் தீர்வாகும்.

அதிமதுரம் மிகவும் நல்லது. மாதவிடாய் பிரச்னையிலிருந்து எளிதாக வெளியில் வர வைத்துவிடும். தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து சாப்பிடலாம். அல்லது சூரணமாகவும் சாப்பிடலாம்.

சிலர் மெனோபாஸ் பிரச்னைக்காக ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபிக்கு செல்வார்கள். அது குறிப்பிட்ட கால அளவுக்குத் தான் செயல்படும். அதன்பின் மீண்டும் பிரச்னை தொடரும். அந்த தெரபியில் செயற்கையாக தரப்படும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை இயற்கையாக ஆயுர்வேத வைத்தியத்தில். அவை உணவின் வழி ஃபைட்டோனாஸ்ட் ஈஸ்ட்ரோஜன் என்ற வடிவில் கிடைக்கும். எள் மற்றும் பப்பாளியில் இது அதிகளவு உள்ளது.  

அடுத்து உளுந்தம் களி,  ராகி களி, எள் உருண்டை, வேக வைத்த முட்டை சோயா போன்ற உணவுகளில் இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜன் உள்ளது. சோயாவில் அதிகளவு இயற்கையான ஈஸ்ட்ரோஜன் உள்ளது. பலர் சோயா பால் குடிப்பார்கள். ஆனால் அது செயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் அதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் சோயா விதைகளை வாங்கி ஊற வைத்தபின் நன்றாக காய வைத்து அரைத்து அதன்பின் சப்பாத்தி மாவுடன் சேர்த்து சமைக்கலாம், இல்லையெனில் சோயாவை வேக வைத்து வெங்காயம் தக்காளி சேர்த்து சாப்பிடமால் ஆண்களுக்கு சோயா நிறைய தரக் கூடாது. காரணம் பெண்களுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் இதிலுள்ளதால் இது ஆண்களுக்கானதல்ல. மேலும் ஆண்மை குறைய வாய்ப்பு உள்ளது என்கிறது ஒரு ஆய்வு.

பப்பாளி, எள் உருண்டை தினமும் சாப்பிட வேண்டும். மெனோபாஸ் காலகட்டத்தை அதிக வலிகள் மற்றும் பிரச்னைகள் இல்லாமல் எளிதாக கடந்து செல்ல ஆயுர்வேதத்தில் நிறைய மருந்துகள் மற்றும் தீர்வு உண்டு. ஆனால் அதற்குரிய சரியான மருத்துவரை நாடுங்கள், சுய மருத்துவமுறையில் நீங்களே மருந்து வாங்கி சாப்பிடாதீர்கள். அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவரை நாடி உங்களுக்கு ஏற்ற மருந்துகளை அறிந்து சாப்பிடுங்கள். அவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி மற்றும் உணவின் வழியே இதனை சரி செய்து விடலாம். அல்லது மெனோபாஸ் காலகட்டத்தை அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்.

டாக்டர் சாந்தி விஜய்பால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com