புதையல் 21

கணித / தர்க்க அறிவை வளர்ப்பது எப்படி, அதன் மூலம் தனி மனித வாழ்வியல் பிரச்சனைகளைத்
புதையல் 21

விழிப்புடன் இருந்தால் உயிப்புடன் வாழலாம்!

(கணித / தர்க்க அறிவை வளர்ப்பது எப்படி, அதன் மூலம் தனி மனித வாழ்வியல் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று சந்தோஷ், கார்த்திக்,மற்றும் விஷ்ணுவுக்கு விளக்கிய அறிவொளி அடுத்து இடம் சார்ந்த காட்சித் திறன் பற்றி விளக்க ஆரம்பித்தார். )

அறிவொளி:  என் பழைய மாணவன் ஒருவன் மகேஷ்னு பேரு, பார்க்குறதையெல்லாம் ரொம்ப அழகா வரைஞ்சிடுவான். மேடை அலங்காரம் பண்ணனும்னா முதல்ல அவனைத்தான் தேடுவோம்.செஸ் விளையாட்டுக்குப் போனா எப்பவும் அவன் தான் ஜெயிப்பான். அவனுக்கு இருக்கும் அறிவுத்திறன் என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

கார்த்திக்:  ஓவியத்திறனும் விளையாட்டுத்திறனும் தானே சார்?

அறிவொளி:  சாதாரணமா சொல்லும் போது அப்படித்தான் சொல்லுவோம் கார்த்திக். கார்ட்னரோட எட்டு விதமான அறிவுத்திறனைப் பொறுத்தவரை இதை விஸுவோ ஸ்பேசியல் இன்டெலிஜென்ஸ் அதாவது காட்சி மற்றும் கற்பனைத் திறன் அல்லது காட்சி வெளி சார்ந்த கற்பனைத்திறன்  என்றும் சொல்லலாம். நம்மைச் சுற்றியிருக்கும் உயிருள்ள , உயிரற்றப் பொருட்களின் வடிவம், தன்மை, நிறம் எல்லாத்தையும் புறக்கண்களால் உள்வாங்கி அகக்கண்களால் அனுபவித்து உணர்ந்து, மறுபடியும் அதைக் கலை வடிவில் வெளிக்கொணர்ந்து நம் வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் இது.

சந்தோஷ்:  ரொம்ப சரியா சொன்னீங்க சார். மொழியைக் கண்டு பிடிக்குறதுக்கு முன்னாடியே மனுஷன் தான் நினைப்பதை மத்தவங்களுக்குப் புரிய வைக்க ஓவியக்கலையைத் தானே பயன் படுத்தினான்.. குகை ஓவியங்கள் மூலமா பழங்கால மனிதர்களோட வாழ்க்கை முறை, பழக்கவழக்கமெல்லாம்  நம்மால தெரிஞ்சுக்க முடியுதே.

அறிவொளி:  ஆமா சந்தோஷ், வெளிநாட்டு உளவியலாளர்களான நான்சி, மைக் சாமுவேல் என்பவர்கள் எழுதிய 'மனக்கண்ணால் காணுதல்' என்ற புத்தகத்தில் மனித மனம் தன புறக்கண்களால் காணும் எதையுமே ஒரு ஸ்லைடு ப்ரொஜெக்டரில் இருக்கும் படங்கள் போல உருவங்களாகவே தன்னோட நினைவில் பதிக்கும் . அதனால தான்  ஆண்டுகளுக்கு முன்னால பார்த்தவங்களோட உருவத்தை நினைச்ச உடனே நம்மால ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுதுன்னு சொல்லியிருக்காங்க.

கார்த்திக்:  அப்படின்னா, நாம பாக்குறதையெல்லாம் படமா நினைவில் பதிய வெச்சு தேவையான போது ஞாபகப் படுத்த உதவுற இந்தத் திறன் இல்லைனா எல்லோரும் கஜினிப்பட ஹீரோ மாதிரி காமிராவும் கையுமா தான் அலையனும் இல்லையா சார்?

அறிவொளி:  ( சிரித்தவாறே...) நீ சொல்றது ஒரு விதத்துல சரி தான் கார்த்திக். நம் அனுபவங்கள் மூலமா ஒவ்வொரு வினாடியும் நம் நினைவில் பதிக்கப்படும் காட்சிகள் தான் நாம் யார்? நம்மைச்  சுற்றியுள்ள உலகம் எப்படிப்பட்டது ? என நமக்குப் புரிய வைக்குது. இதுக்கு நம் வலது பக்க மூளையோட செயல்பாடு தான் காரணம்.

சந்தோஷ்:  சின்ன வயசுல மேகங்களுக்குள் பல உருவங்களைக் கற்பனை செய்து கதை சொல்லியதும் , திருடன் போலீஸ் விளையாட்டில் தன்னைப் போலீசாகவோ அல்லது திருடனாகவோ கற்பனை செய்து கொண்டு விளையாடியதும் , டீச்சர் விளையாட்டில் எதிரில் இல்லாத குழந்தைக்குத் தன்னை டீச்சராக நினைத்துக் கொண்டு வீட்டுப்பாடம் செய்யாதக் குழந்தைகளை அடிக்கிறேன் என தரையில் அடித்து விளையாடுவது எல்லாம் கூட நமக்குள் இருக்கும் கற்பனைத் திறனின் வெளிப்பாடுதான். ஆனா வளர வளர இந்தக் கற்பனையான விளையாட்டுக்கள் எல்லாம் குழந்தைகளுக்குதான்னு பெரியவங்களால சொல்லப்பட்டதாலோ என்னவோ இத்திறனை நாம வளர்த்துக்காம அப்படியே உறங்கிப் போக விட்டுட்டோம்.

விஷ்ணு: அப்படி உறங்கிப்போன திறனை உசுப்பி எழுப்ப என்ன செய்யணும் சார் ?

(அறிவொளி தன் அலமாரியிலிருந்து மூன்று தாள்களை எடுத்து மூவரிடமும் கொடுத்தார்.அதில் பென்சில் கொண்டு முழுத்தாளிலும் கிறுக்கி இருந்தது.)

அறிவொளி:   மேகத்துக்குள் உருவங்களைக் கண்டுபிடிப்பது போல இந்தக் கிறுக்களிலிருந்தும் உருவங்களைக் கண்டுபிடிக்கணும். பிறகு கலர் பென்சில் அல்லது க்ரையான்ஸ் கொண்டு அந்த உருவங்களுக்கு கலர் பண்ணனும்.

(மூவரும் கலர் பென்சிலைக் கொண்டு தாம் கண்டு பிடித்த உருவங்களுக்கு வண்ணம் தீட்டிவிட்டு அதை அறிவொளியிடம் கொடுத்தனர்.கார்த்திக்கின் தாளில் மனித உடலும் நாயின் முகமும் கொண்ட உருவம் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து குரைப்பது போல இருந்தது.விஷ்ணுவின் தாளில் ஓர் எரியும் வீட்டுக்குள்ளே ஆணும் பெண்ணும் பேசுவது போல் இருந்தது.சந்தோஷின் தாளில் தலைப்பாகையுடன் கூடிய ஒருவர் கரும்பலகைப்பக்கத்தில் இருப்பது போலவும் அம்மனிதர் சந்தோஷின் சாயலை ஒத்தது போலவும் இருந்தது.)

அறிவொளி:   மூணு பேருக்கும் ஒரே பேப்பரோட ஜெராக்ஸ் காப்பியை தான் கொடுத்தேன். ஆனா மூணு பேரும் இந்தக் கிறுக்கல்களுக்குள்ளே வேறவேற உருவங்களைக் கண்டுபிடுச்சு வரைஞ்சிருக்கீங்க. சந்தோஷ் நீங்க என்ன வரைஞ்சிருக்கீங்க ?

சந்தோஷ்: டாக்டர் ராதாகிருஷ்ணன் பசங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்குறார் சார்.

அறிவொளி:  தலைப்பாகை டாக்டர் ராதாகிருஷ்ணனோடது மாதிரி தான் இருக்கு. ஆனா முகஜாடை உங்களை மாதிரியே இருக்கே !

சந்தோஷ்:  அட ஆமா சார் ! நானே இப்பதான் கவனிக்கிறேன்.

அறிவொளி:  டாக்டர் ராதாகிருஷ்ணன் மாதிரி ஒரு மிகச் சிறந்த ஆசிரியரா விளங்கணும்னு ஆசைப்படுறீங்க. வாழ்த்துக்கள்.

சந்தோஷ்:  நன்றி சார்.

அறிவொளி:  கார்த்திக் நீ வரைஞ்ச உருவம் விநோதமா இருக்கே !  என்ன அர்த்தம் இதுக்கு ? 

கார்த்திக்:  எதையும் நினைச்சு நான் வரையலை . ஆனா இப்ப நீங்க கேட்ட பிறகு ஒரு வேளை ராஜாராம் சார் மாதிரி பசங்களை எப்பவும் திட்டிக்கிட்டேயிருக்க டீச்சராயிருக்கலாம்னு தோணுது சார்.

விஷ்ணு: அடப்பாவி ! ஹெட்மாஸ்டர்க்கிட்டயே ஒரு சாரைப் பத்தி இப்படி சொல்றியே, ரொம்ப தைரியம்டா உனக்கு.

கார்த்திக்:  சும்மா இருந்தவன் கையில பேப்பரைக்குடுத்து வரைய சொல்லி கேட்டா , என் மனசுல என்ன தோணுச்சோ அதை சொன்னேன் தப்பா !

அறிவொளி:  உன் தப்பு இல்லை கார்த்திக், உன் மனசுல இப்படி ஒரு உருவம் தோன்ற காரணமாயிருந்த ஆசிரியரோட தப்பு. சரி விஷ்ணு நீ என்ன வரைஞ்சுருக்கே?

விஷ்ணு: ஒரு ஆளும் , ஒரு பொம்பளையும் சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க சார்.

அறிவொளி: சரி வீடு ஏன் எரியுது ?

சந்தோஷ்: எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அந்த வீடு ஒரு நரகம் தானே சார் !

அறிவொளி:  உங்க வீட்ல அப்பவும் அம்மாவும் ரொம்ப சண்டை போடுவார்களா ?

விஷ்ணு:  ஆமா சார். தினம் குடிச்சிட்டு வந்து காசு கேட்டு அம்மாவை அடிப்பார். நான் தடுத்தா என்னையும் அடிப்பார். நரகம் சார் அந்த வீடு. சரி உங்களுக்கு எப்படி சார் எங்க அப்பா அம்மா சண்டை போடுவாங்கன்னு தெரியும்?

அறிவொளி:  உங்க மனசுல எல்லாம் என்ன இருக்குன்றதைத்  தான் நீங்க வரைஞ்ச படங்களே சொல்லிடுச்சே.

இந்த உருவங்களை கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் நம் ஆழ்மனதில் பதிந்துள்ள எண்ணங்கள், அதன் விளைவுகள் தான் உருவங்களா வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். நமக்குள் என்ன மாற்றம் தேவைன்றதையும் உணர முடியும். மனநல ஆலோசகர்களை இதை சிகிச்சைக்கான உத்தியா கூடப் பயன்படுத்துறாங்க.

சந்தோஷ்: எங்க மனசில் என்ன இருக்குன்னு எங்களுக்கே புரிய வைச்சதுக்கு நன்றி சார்.

கார்த்திக்: சார் நானும் இனிமே டீச்சருங்களை பத்திக்  குறைசொல்லாம அவங்க எதுக்காக என்னைத் திட்டுறாங்களோ அதை மாத்திக்க முயற்சி பண்றேன் சார். ஒழுங்கா படிக்க மாட்டேங்குறேன்னு தான் திட்டுவாங்க. என்னா தான் படிச்சாலும் ஞாபகத்துல வைக்கவே முடியல. நான் என்ன தான் பண்றது சார்?

அறிவொளி: கவனம் சிதறாம, படிக்கறதோட அர்த்தம் புரிஞ்சு படிச்சா மறக்காது கார்த்திக். அதோட படிப்பதைக் காட்சிகளா மனதில் பதிய வைச்சாலும் மறக்காது.உதாரணமா அசோகர் கலிங்க தேசத்து  மேல படையெடுத்துப் போனதைப் பாடமா வெறும் தகவலா படிக்கிறதைவிட உன்னையே அசோகரா நினைச்சிக்கோ. நீ யாரோட போர் செய்யுற, போர் முடிவு என்ன ஆகுது, எல்லாத்தையும் சினிமா மாதிரி கற்பனை செய்து மனக்கண்ணில் படமா ஓட்டிப்பாரு. சினிமா படம் எப்படி மறப்பதில்லையோ அதே மாதிரி இதுவும் படம் மாதிரி பார்க்கறதாலே மறக்காது. இதே போல தேர்வு நேரத்தில் ஏதாவது கேள்விக்கு பதில்  மறந்துட்டா அந்த பதிலை நீ படித்த சூழ்நிலையை மனதில் கொண்டு வரணும். படிக்கும் அறையில் நீ உட்கார்ந்திருந்த விதம் , எந்தப் பாடத்தில் அந்தக் கேள்வி இருக்கு , அந்த பதிலில் உள்ள முக்கியத் தலைப்பு , துணைத் தலைப்புகள் , படங்கள் என ஒவ்வொரு கட்சியாக மனக்கண் முன் கொண்டு வந்தால் கண்டிப்பா படித்த பதிலும் நினைவுக்கு வந்துவிடும்.

சந்தோஷ்:  இன்றையகாலத்தில் பிள்ளைகளுக்கு கவனமும் , உற்று நோக்கும் திறனும் ரொம்ப குறைவா இருக்குறதும் மறதிக்கு முக்கிய காரணம் சார்.

கார்த்திக்:  எப்படி சார் சொல்றீங்க?

சந்தோஷ்: எப்படியா , நீ சுவத்துப்பக்கம் திரும்பு சொல்றேன்.

(சந்தோஷ் கார்த்திக்கை சுவற்றின் பக்கம் திரும்பி நிற்க வைத்தார்)

இப்ப சொல்லு, விஷ்ணு என்ன கலர் சட்டை போட்டிருந்தான்.

 (தலையை சொரிந்த கார்த்திக் .....)

கார்த்திக்:  அச்சச்சோ ! அதை நான் இவ்ளோ நேரம் பார்க்கவே இல்லையே சார்.

சந்தோஷ்: சரி பரவாயில்லை உங்க வீட்ல கடிகாரம் இருக்கா ?

கார்த்திக்:  ஒ! இருக்கே .

சந்தோஷ்: அது என்ன கம்பெனி கடிகாரம் ?

கார்த்திக்:  அது யாருக்குத் தெரியும். இதுவரைக்கும் கடிகாரத்துல நேரம் தான் பார்த்திருக்கேன், எந்த கம்பெனி தயாரிச்சதுன்னு பார்த்ததே இல்லையே ! 

சந்தோஷ்:  பாத்தியா இவ்ளோநேரம் உன் கூட இருந்த உன் நண்பன் என்ன கலர் சட்டை போட்டிருக்கான்னும் தெரியலை. இத்தனை வருஷமா உங்க வீட்டு சுவர்ல இருக்க கடிகாரத்துல மணி பார்க்குற . அதுக்குள்ள கம்பெனி பேர் கண்டிப்பா போட்டிருக்கும் அதையும் நீ இது வரை கவனிக்கலை.இதைத்தான் உற்று நோக்கும் திறன் குறைவுன்னு சொன்னேன். இதை நான் மட்டும் சொல்லலை, ஜோஷுவா பெல் என்ற அமெரிக்கர் ஆதாரவப்பூர்வமாவே நிருபிச்சிருக்கார். 

விஷ்ணு:  அப்படியா அவர் யார் என்ன செய்தார் சார் ?

சந்தோஷ்: அவர் ரொம்ப புகழ் பெற்ற அமெரிக்க நாட்டு வயலின் இசைக்கலைஞர். அவரோட  இசைக் கச்சேரிகளின் நுழைவுக் கட்டணம் எவ்வளவு டாலர் என்றாலும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.அவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்தது. மக்கள் எந்த சூழலிலும் தன்னோட இசையை ரசிப்பார்களானு  தெரிஞ்சுக்க ஆசைப்பட்டார். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக் கூடிய ஒரு சுரங்க நடை பாதையில் நின்னு வயலின் வாசிக்க ஆரம்பிச்சார். வெளிநாட்டுல அதுமாதிரி இடங்கள்ல பிச்சைக்காரங்க இசைக்கருவிகளை வாசிப்பதும் அதை ரசிக்கும் மக்கள் பணம் போட்டுட்டு போவதும் வழக்கம். ஆயிரக்கணக்கான மக்கள் போவதும் வருவதுமா  இருந்தாலும் மணிக்கணக்கா வாசிக்கப்பட்ட அந்த இசையை ஆறு பேர் தான் கொஞ்ச நேரம் நின்னு கேட்டாங்க. அதிலும் ஒரே ஒரே பெண் தான் அவரை அடையாளம் கண்டுபிடிச்சாங்க. அதே இசையை இரண்டு நாள் கழித்து வாஷிங்டன் டிசி நகரத்தில்   அறிவிப்பு செய்துவிட்டு வாசிச்சப்ப  அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கேட்டு ரசிச்சாங்க. உண்மையிலேயே விழிப்புணர்வுள்ள மக்களா இருந்திருந்தா சுரங்க நடைபாதையில வாசிச்சப்பவும் அவரையும் அவரோட இசையையும் அடையாளம் கண்டிருப்பாங்க. ஆனா தினசரி வாழ்க்கையில எப்பவும் இறந்தகாலத்தைப்  பத்தியோ எதிர்காலத்தைப் பத்தியோ யோசிச்சுகிட்டு இருக்குறதால நிகழ்காலத்துல  நம்மை சுத்தி யார் இருக்காங்க, என்ன நடக்குது என்ற எந்த உணர்வும் இல்லாம இயந்திரத்தனமா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. நிகழ்காலத்துல வாழறவங்க மட்டும் தான் தன்னை சுத்தி நடப்பதை ஐம்புலன்களால்  உள்வாங்கி  வாழ்க்கையை முழுமையா ரசிச்சு வாழ்வாங்க.

விஷ்ணு:  அறிவொளி சார் நம்ம ஸ்கூலுக்கு வந்த முதல் நாள் அசெம்பிளியில 'இங்கே இப்போதே'னு ஒரு மந்திரம் சொல்லிக் குடுத்தாரே அதுவும் இதுக்காகத் தானே சார்?

சந்தோஷ்:  ரொம்ப சரி விஷ்ணு. அது நிகழ்காலத்தில் உயிர்ப்போட வாழறதுக்கான மந்திரம்தான். அதை நடைமுறைப் படுத்துறதுக்கு சில பயிற்சிகள் இருக்கு.

கார்த்திக்:  அது என்ன பயிற்சி சார்?

சந்தோஷ்:  சொல்றேன்ப்பா. உங்க ஆர்வம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

(நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் வாழ உதவும் பயிற்சியைத் தெரிந்துகொள்ள நாமும் காத்திருப்போம். )

தொடரும்...

-பிரியசகி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com