புதையல் 13

மாலை தன் வீட்டுக்கு வந்தால் இன்னும் நிறைய சாதனை இளைஞர்களைப் பற்றிக் கூறுகிறேன்
புதையல் 13

தடைகள் தாண்டுவதற்கே!

(மாலை தன் வீட்டுக்கு வந்தால் இன்னும் நிறைய சாதனை இளைஞர்களைப் பற்றிக் கூறுகிறேன் என்று அறிவொளி கூறியிருந்ததால், எப்போது பள்ளி முடியுமெனக் காத்திருந்த  விஷ்ணுவும் கார்த்திக்கும் பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று புத்தகப்பையை வைத்துவிட்டு பெற்றோரிடம் தகவல் சொல்லிவிட்டு அறிவொளியின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களது ஆர்வத்தைக் கண்ட அறிவொளி மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார்.)

அறிவொளி :    வாங்க, தம்பிகளா, சொன்னபடியே கரெக்ட்டா வந்துடீங்களே !

கார்த்திக் :     ஆமா சார் நீங்க காலைல பேசுனதுலேர்ந்து எனக்கு ரொம்ப உற்சாகமாயிருக்கு சார். என்னைவிட படிப்புல மோசமாயிருந்த ஒருத்தர் இன்னைக்கு ரொம்ப பெரிய ஆளா இருக்கார்னா என்னாலயும் எதாவது  ஒரு விஷயத்தில பெரிய ஆளா ஆக முடியும்னு நம்பிக்கை வந்துடுச்சு. இவர் மட்டுமில்ல இன்னும் நிறைய பேர் இவரை மாதிரியே பெரிய ஆளா ஆகியிருக்காங்கன்னு சொன்னதுனால அவங்களை பத்தியும் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வத்துல விளையாடக் கூடப் போகாம இங்க வந்துட்டோம் சார். 

அறிவொளி :   வெரிகுட். வாழ்க்கையின்  முன்னேற்றத்துக்கு முதல்படியே இந்த ஆர்வம்தான். ஐம்புலன்களையும் விழிப்போட வச்சு உலகத்தில நடக்குறதையெல்லாம் உற்று கவனிச்சு, தனக்கான முன்னுதாரணங்களை மனதில் வச்சு உழைக்க ஆரம்பிச்சா வெற்றி நிச்சயம்.

விஷ்ணு :   சார் இன்னைக்கு தமிழ் ஐயா கூட முயற்சியைப் பத்தி  பாடம் நடத்தும்போது நந்தகுமார் அப்படிங்கறவரைப்  பத்தி சொன்னார். அவரும் படிப்பு ஏறலைன்னு ஸ்கூலை விட்டு நின்னு மெக்கானிக் கடைல எல்லாம் வேலை பார்த்து அப்புறம் பிரைவேட்டா எழுதி 10வது, 12வது பாஸ் பண்ணி அப்புறம் காலேஜ் எல்லாம் படிச்சு ஐ.ஏ.எஸ் தேர்வுல இந்தியாவுல முதல் ரேங்க் எடுத்து பாஸ் பண்ணாருன்னு கேட்டப்போ ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு சார்.

அறிவொளி :   ஆமா அவரோட வாழ்க்கை  உங்கள மாதிரி பசங்களுக்கெல்லாம் ரொம்ப பெரிய உந்து சக்தியா இருக்கும்.

விஷ்ணு :    படிப்பு வரலைன்னு ஆறாவதோட ஸ்கூல விட்டே நின்னவரு எப்படி சார் ஐ.ஏ.எஸ் ஆனார்.

அறிவொளி :   ஓவ்வொரு மனுசனுக்கும் வாழ்க்கையில ஏதாவது ஒரு நிகழ்ச்சி திருப்புமுனையா அமையும். அதுபோல, இவர் ஸ்கூலுக்குப் போகாம மெக்கானிக் கடையில வேலைக்குப் போனப்போ இவர் கூட படிச்ச பசங்க நல்லா அழகா யூனிபார்ம் போட்டுட்டு போகும் வழியில இவரோட அழுக்குப் படிஞ்ச கிழிஞ்ச டிரஸ்ஸைப் பார்த்துக் கிண்டல் பண்ணினாங்க அந்தப் பசங்களோட பெற்றோர் இவனோட சேர்ந்தா நீயும் இப்படித்தான் ஆயிடுவ என சொல்லி இவரோட பேச விடாம செய்ததும் அவர் மனசை ரொம்ப பாதிச்சிருக்கு. ஒருமுறை உடம்பு சரியில்லாம ஒரு டாக்டர் வீட்டுக்குப் போயிருக்கார். அந்த டாக்டரோட பையன் சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுக்கு தயாரிக்கிறவர் போல. பெருசு பெருசா நிறைய புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வச்சிருக்கிறதைப் பார்த்ததும் ஆசையா அதைக் கையில எடுத்துப் பார்த்திருக்கார். அப்ப அந்த வீட்ல இருந்த ஒருத்தர் அதைப் பார்த்துட்டு யாரை கேட்டு நீ புக்கை எடுத்தேன்னாராம். இவர் ஆசையா இருந்துச்சு சும்மா பார்க்கலாம்னு எடுத்துட்டேன், ஸாரின்னாராம். அவர் உடனே தரையில உப்பை போட்டு அது மேல முட்டி போட வைச்சாராம். 

கார்த்திக் :  அடப்பாவி புக்கை கையில எடுத்துப் பாத்ததுக்கு உப்பு மேல முட்டி போட வச்சானா அந்த ஆளு. நானா இருந்தா கையில கிடைக்கிறதை எடுத்து ஓங்கி ஒரு அடி போட்டுட்டு ஓடிப் போயிருப்பேன்.

அறிவொளி : அங்கதான் சாதாரணமானவங்களுக்கும் சாதனையாளர்களுக்கும் வித்தியாசம் இருக்கு கார்த்திக். அவர் உன்னை மாதிரி கோபப்படல.  அந்த அனுபவத்தை வைராக்கியமா மாத்திக்கிட்டார். எந்த படிப்புக்கான புக்கை என்னைத் தொடக்கூடாதுன்னு சொன்னாங்களோ அதைப்  படிச்சே ஆவேன்னு ஒரு வைராக்கியம்  அவர் மனசில தீப்பொறியா எரிய  ஆரம்பிச்சிது. அதுதான் அவர் வாழ்க்கைக்கே திருப்புமுனையாச்சு.

விஷ்ணு :  அப்புறம் என்னாச்சு சார்.

அறிவொளி :  அதுக்கு பிறகு 8வது,1 0வது, 12வது எல்லாம் பிரைவேட்டா படிச்சு எக்ஸாம் எழுதி பாஸானார். பிரைவேட்டா படிச்சதால அரசு கல்லூரியில தமிழ் அல்லது ஆங்கில இளங்கலை பட்டப்படிப்பு எடுத்து படிக்க மட்டும் வாய்ப்பிருந்தது.  தமிழ் இவருக்கு சுத்தமா வராதுங்கறதால வேற வழியில்லாம ஆங்கில இளங்கலைப் பிரிவுல சேர்ந்தாராம். ஒருவாக்கியம் கூட இங்கிலீஷ்ல ஒழுங்கா தப்பில்லாம வாசிக்கவோ, பேசவோ, எழுதவோ தெரியாததால இவரோட கல்லூரிப் பேராசிரியர் இவரைக் கூப்பிட்டு ஒன்னுமே தெரியாம நீயெல்லாம் எப்படி பாஸாகப்போற? பேசாம நீ ஏற்கனவே பாத்துக்கிட்டிருந்த வேலைக்கே போயிடு. உனக்கு மூணுவருஷம் வீணாகாமையாவது இருக்கும்னாராம். இதுமாதிரியான எந்த உதாசீனங்களுக்கோ, அவமதிப்புகளுக்கோ சோர்ந்து போயிடாம இருந்ததுனால தான் அவரால பிஏ, எம்ஏ முடிச்சு சிவில் சர்விஸ் எக்ஸாம்ல புவியியல்ல இந்தியாவிலேயே முதல் ஆளா வர முடிஞ்சுது. ஆனா அவரை புக்கை தொட்டதுக்காக முட்டிப்போடச் சொன்ன அந்த டாக்டரோடப் பையன் அப்பவும் சிவில் சர்விஸ் பாஸ் பண்ண முடியாம இவர் கிட்ட வந்து,  'நந்தகுமார் இத்தனை வருஷம் ஆகியும் என்னால எக்ஸாம் பாஸ் பண்ண  முடியல. நீ ஈஸியா பாஸ் பண்ணிட்டியே எப்புடி?  எனக்கு கொஞ்சம் சொல்லிக்குடு'ன்னு கேட்டாராம். 

கார்த்திக்:  சூப்பர் சார், கடவுள் இருக்காருன்னு இந்த மாதிரி சமயத்துலதான் நம்ப முடியுது.

விஷ்ணு : சார் அவருக்கு டிஸ்லெக்ஸியா என்ற கற்றல் குறைபாடு இருந்ததாகவும், இந்த குறைபாடு இருக்கவங்களுக்கு எழுத, படிக்கப் பிரச்சனைகள் இருக்கும், எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கும்னு எல்லாம் தமிழ் அய்யா சொன்னார். ஐஏஎஸ் எக்ஸாமுக்கெல்லாம் நிறைய படிக்க, எழுத வேண்டி இருந்திருக்குமே, எப்படி நந்தகுமார் சாரால்   முடிஞ்சுது?

அறிவொளி :    நீ சொல்றது போல டிஸ்லெக்ஸியா இருக்கறவங்களுக்கு இந்தப் பிரச்சனைகள் இருக்கும்தான் கார்த்திக். ஆனா அவங்களுக்கு அந்தக் குறைகளை ஈடுகட்டுவது போல வேற ஏதாவது திறமை இருக்கும். இவருக்கு நல்ல விஷுவோ ஸ்பேசியல் இன்டெலிஜென்ஸ் (Visuvo Spacial Intelligence) அதாவது பார்க்கும் பொருளை முப்பரிமாண தன்மையுடன் (Three dimensional effect) வரையக்கூடிய ஆற்றல் இருந்ததால் தேர்வுகள்ல பக்கம் பக்கமா விளக்க வேண்டிய கேள்விகளை ஒரு சில படங்கள் மூலமா அழகா விளக்கிடுவாராம். மெக்கானிக் கடையில் வேலை பார்த்த அனுபவமும்  தனக்கு படிக்கும் போது உதவியதா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார். 

கார்த்திக் :  மெக்கானிக் கடைக்கும் படிப்புக்கும் என்ன சார் சம்மந்தம்?

அறிவொளி :   இருக்குப்பா, ஒருமுறை, நந்தகுமார்  ரிப்பேரான ஒரு வண்டியைப்  பிரிக்கப் போகும் போது அவரோட முதலாளி முதல்ல வண்டியை ஸ்டார்ட் பண்ணி சத்தத்தை கவனிக்கச் சொன்னாராம். எதுக்கு அப்படி  சொல்றாருன்னு அவருக்குப் புரியாததால, வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஆக்சிலேட்டரை முடுக்கியதும் நல்ல வண்டியில இருந்து வர்ற சத்தத்துக்கும் ரிப்பேரான வண்டியில இருந்து வர்ற சத்தத்துக்கும்  உள்ள நுணுக்கமான வித்தியாசத்தை உற்று  நோக்கவும், அந்த சத்தத்தைக் கொண்டே வண்டியில் என்ன பிரச்சனையை என்பதைக் கண்டு பிடிக்கவும் சொல்லிக் கொடுத்தாராம். இந்தத் திறன் படிக்கும் போது எதையும் உற்று நோக்கி, ஆழ்ந்து கவனித்து, தெரிந்த விஷயத்தோடு  தெரியாததை தொடர்பு படுத்திக்  கற்றுக்கொள்ள, அர்த்தம் புரிந்து படிக்க உதவியதாம்.

தொழில் கற்றுக் கொடுத்த  அந்த முதலாளி மேல அவர் ரொம்ப மரியாதை வெச்சிருந்தார். படிக்கனும்னு  முடிவெடுத்தப் பிறகு வேலையை விட்டு நிக்கிறேன்னு சொன்னதும் அவர் முதலாளி, 'படிச்சி என்னத்தடா  கிழிக்கப்போறே, என் பாக்கெட்ல எவ்ளோ காசு இருக்குப்பாரு. என் கூடவே இருந்தா எனக்கப்புறம் உனக்கு தான் இந்த கடை', அப்படின்னு சொன்னாராம். ஆனா தான் என்னவாகனும் என்ற தன்னோட இலக்குல உறுதியா இருந்த நந்தகுமார் அந்தச் சின்ன மீனுக்கு ஆசைப்படாம இருந்ததால தான் இன்னைக்கு விண்மீனா பிரகாசிக்குறார்.

விஷ்ணு :  சார், முடிஞ்சா அவரை நம்ம ஸ்கூலுக்கு ஏதாவது ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிடுங்களேன் சார். அவரைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு.

அறிவொளி : கண்டிப்பா செய்யலாம் விஷ்ணு. பள்ளிகளுக்கு, அதுவும் நம்ம பள்ளி மாதிரி ஏழைப்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு வந்து மாணவர்களோடப் பேச   அவர் ரொம்ப விரும்புவார். அவர் படிக்குற காலத்துல யாரோடையும் ரொம்ப பேசவே மாட்டாராம். லாட்டரி சீட்டு விக்கும் வேலை பாத்தபோது தான் ஒவ்வொரு  ஆளையும்  ஒரு சீட்டு வாங்க வைக்க நிறைய பேசிப்பேசி தன்  பேச்சுக்கலையை வளர்த்துக்கிட்டாராம். இன்னைக்கு அவர் ஒரு நண்பன் போல சாதாரண பேச்சுநடைல தன்  வாழ்க்கையைப் பற்றி நகைச்சுவையா சொல்லி, 'ஸ்கூலுக்கே போகாத மக்கு நானே இந்த நிலைக்கு வந்துட்டேன், உங்களால முடியாதா'னு கேக்கும் போது மாணவர்களுக்கு சுயமதிப்பும், தன்னம்பிக்கையும் அதிகமாகுது. ஐஏஎஸ் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இவர் பயிற்சி கொடுக்குறார். நிறைய தடவை எழுதியும் பாஸ் பண்ண முடியாம சோர்ந்து போன பலர் இவரோட பயிற்சிக்குப் பிறகு சிவில் சர்விஸ் பாஸ் பண்ணி இன்னைக்கு  நல்ல நிலைல இருக்காங்க. 

கார்த்திக் : நான் கஷ்டப்பட்டேன், இன்னைக்கு நல்லா இருக்கேன்னு கம்முனு இருக்காம  எங்களை மாதிரி பசங்களைத் தேடி வந்து பயிற்சி கொடுக்குறாரே, ரொம்ப பெரிய மனசு சார் அவருக்கு!  இவங்களைப் பத்தியெல்லாம் கேட்டபிறகு தான் எனக்கே எம்மேல ஒரு நம்பிக்கை வருது சார்.

அறிவொளி :  இன்னொருத்தரைப் பத்தி தெரிஞ்சா நீ இன்னும் சந்தோஷப்படுவே கார்த்திக்.

கார்த்திக் :  அப்படியா! யார்  அவர், சொல்லுங்க சார்.

(யாரென்று தெரிந்துகொள்ள  கார்த்திக்கும் விஷ்ணுவும் ஆர்வமாய் காத்திருந்தனர். நாமும் காத்திருப்போமா!)

தொடரும்...

பிரியசகி 

priyasahi20673@gmail.com

Related Article

புதையல் 12

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com