புதையல் 14

கற்றல் குறைபாடு இருந்தும் பல தடைகளைத் தாண்டி வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ள வெங்கடேஷ் பட்
புதையல் 14

முயற்சி திருவினையாக்கும்

(கற்றல் குறைபாடு இருந்தும் பல தடைகளைத் தாண்டி வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ள வெங்கடேஷ் பட், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் ஆகியோரைப் பற்றி அறிவொளி கூறுவதையெல்லாம் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கும் விஷ்ணுவும் மேற்கொண்டு அவர் யாரைப் பற்றிக் கூறப்போகிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தனர்.)

அறிவொளி : இவங்க ரெண்டு பேர் மட்டுமில்ல தம்பிகளா படிப்பு வரலைன்னு சோர்ந்து போகாமல் விடாமுயற்சியோட போராடிய பல இளைஞர்கள் பல்வேறு துறைகளில் இன்னைக்கு சாதிச்சுக்கிட்டிருக்காங்க. அதில் சமீபத்தில் நான் சந்திச்ச அருண் பெர்னாண்டஸ்  என்ற இளைஞரைப் பத்தி சொன்னா உங்களுக்கு இன்னும் கொஞ்சம் டானிக் குடிச்ச மாதிரி ஆகிடும்.

கார்த்திக் : யார் சார் அவர்? என்ன பண்றார்?

அறிவொளி : கார்த்திக் இன்னைக்கு இவர் தன் சொந்த நிறுவனத்தை வெற்றிகரமா நடத்தி கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபர். நீயாவது பத்தாவது வரைக்கும் இந்த பள்ளிக்கூடத்தில் படிச்சிக்கிட்டிருக்க, ஆனா இவர் எட்டாவதுக்கு மேல சாதாரண பள்ளிக்கூடத்துல  தாக்குப்  பிடிக்க முடியாம சிறப்பு பள்ளியில சேர்ந்து படிச்சாராம்.   எட்டாவது வரைக்கும் ஒன்பது பள்ளிக்கூடம் மாறிட்டார்.

கார்த்திக் : எட்டாவதுக்குள்ள ஒன்பது ஸ்கூல்லா, அப்ப நான் பரவாயில்ல போல இருக்கே. பழைய ஸ்கூல்ல படிக்கலைன்னு அனுப்பின பையனை புது ஸ்கூல்ல எப்படி சேத்துக்கிட்டாங்க  சார்?

அறிவொளி : கல்வியும் இப்பெல்லாம் வியாபாரமாத்தானே இருக்கு. இவரோட அப்பா பெரிய தொழிலதிபர் என்பதால் அவரோட செல்வாக்கு ஒரு காரணமாய் இருக்கலாம். ஒவ்வொரு தேர்விலும் அத்தனைப் பாடத்திலும் பெயிலாகும் இவரிடம் ஒரு டீச்சர், 'நீ ஒவ்வொரு வருஷமும் பாஸாகுறேன்னா அதுக்கு ஒரே காரணம் உங்கம்மாதான். அவங்க முகத்துக்காகத்தான் உன்னை பெயிலாக்காம இருக்கேன்' அப்படின்னு சொன்னாங்களாம். ஏன்னா இவரோட எல்லா டீச்சர்களோடேயும் அவங்கம்மா நல்லா பேசி ப்ரெண்டாயிடுவாங்க. இன்னொரு காரணம் இவரோட உடலியக்கத்திறன் (Bodily kinesthetic Intelligence) பள்ளி நாட்களில் இவர் ரொம்ப நல்லா டென்னிஸ் விளையாடுவாராம். அதோட சிறந்த தடகள வீரரும் கூட. எந்த போட்டிக்குப் போனாலும் பரிசோடத்தான் வருவார் இவர்.

விஷ்ணு :  அப்ப இவர் ஸ்போர்ட்ஸ்ல சூப்பர் ஸ்டார்னு சொல்லுங்க.

அறிவொளி : ஆமா, ஆனா ஜூலை, ஆகஸ்ட் மாதம் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ்டே முடியும் வரைக்கும் சூப்பர் ஸ்டாரா இருக்கவன் அதுக்கப்புறம் பவர்ஸ்டாரா ஆகிடுவேன்னு அவரே ஒரு பேட்டியில சொல்லியிருக்கார். அவங்கப்பாவே அவரோட நண்பர்கள் கிட்ட இவரைப் பற்றிப் பேசும் போது எம்புள்ள டென்னிஸ் சூப்பரா ஆடுவான், நல்லா ஓடுவான் ஆனா படிப்பைப் பத்தி மட்டும் கேக்கக் கூடாது, சுத்த வேஸ்டுன்னு தான் சொல்வாராம். 

கார்த்திக் :  சே ரொம்ப மோசம், வீட்லயே அவருக்கு சப்போர்ட் இல்லையா?

அறிவொளி : அப்பா மட்டும்தான் அப்படி, அவரோட அம்மா எப்பவும் அவருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்களாம். ஒரு படத்துல சரண்யா சொல்லுவாங்களே 'ஆடி போயி ஆவணி வந்தா எம்மகன் டாப்ல வந்துருவான்னு' அதே மாதிரி  'நீ கண்டிப்பா பெரிய ஆளா வருவேடா', அப்படின்னு அவங்கம்மா எப்பவும் சொல்லிகிட்டே இருப்பங்களாம். அவங்களோட இந்த வார்த்தைகள் சோர்ந்து போன நேரத்தில் எல்லாம் தனக்கு ரொம்ப பெரிய ஊக்கமா இருந்ததா அருண் சொல்றார்.

விஷ்ணு : நந்தகுமார் சாருக்கு டாக்டர் வீட்ல நடந்த அவமானம் திருப்புமுனையா இருந்த மாதிரி இவருக்கு ஏதாவது இருக்கா சார்?

அறிவொளி : பத்தாவது பாஸ் பண்ணதே திருப்புமுனைதான்னு இவர் சொல்றார். 'ஏன்னா நான் படித்த மெட்ரிகுலேஷன் பள்ளியில தமிழ் I, தமிழ் II, ஆங்கிலம்I, ஆங்கிலம் II, கணக்கு I,  கணக்கு II அப்படின்னு மொத்தம் பன்னிரெண்டு பாடங்கள் இருக்கும். மாதந்திரத் தேர்வுகள், காலாண்டு,  அரையாண்டு, வகுப்புத் தேர்வுகள் இது தவிர வகுப்புத் தேர்வுகள்னு  ஒரு வருஷத்துக்கு குறைந்தது நூறு தடவையாவது தேர்வு எழுதினாலும் அத்தனை முறையும் சிங்கள் டிஜிட் மார்க்தான் எடுத்திருக்கேன். ஒவ்வொரு முறையும் பேப்பரை கையில் வாங்கும் போதும் கிண்டல், கேலி, அவமானம்னு நிறைய அழுதிருக்கேன்.  எட்டாவது வரைக்கும் என்னோட விளையாட்டுத் திறமைக்காக ஸ்கூல்ல வச்சிக்கிட்டிருந்தவங்க பத்தாவதுல  ஸ்கூல் ரிசல்ட் என்னால போயிடக் கூடாதுன்னு ஒன்பதாவதுலயே பள்ளியை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் டிஸ்லெக்சியா இருக்கும் பிள்ளைகளுக்கான ஸ்பெஷல் ஸ்கூல்ல படிச்சதுனால அரசு கொடுத்த சலுகைகள் உதவியோட 85% மார்க் எடுத்து பத்தாவது பாஸ் பண்ணிட்டேன். என்னாலயும் பாஸ் பண்ண முடியும் என்ற நம்பிக்கையே எனக்கு அப்பத்தான் வந்துச்சு. என்னை நான் நம்பவும், மத்தவங்க என்னை நம்பவும் அது தான் காரணமா இருந்துச்சு. அதுக்கப்புறம் பன்னிரெண்டாவதுல காமர்ஸ் குரூப் எடுத்து அதுல 65% மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டேன்', அப்படின்னு சொல்றார்.

கார்த்திக் : அதென்ன சார் அரசாங்க சலுகைகள்னு ஏதோ சொன்னீங்களே?

அறிவொளி : ஆமா, டிஸ்லெக்சியா இருக்கின்ற மாணவர்களுக்கு அவர்களோட  குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து அரசு பொதுத் தேர்வுல சில சலுகைகள் உண்டு. ஒருமணி நேரம் அதிகம் குடுப்பாங்க. கால்குலேட்டர் பயன்படுத்தலாம். தமிழ் மீடியம் படிக்கறவங்க ஆங்கிலம் எழுதத் தேவையில்லை. அதே போல ஆங்கில மீடியம் படிக்கறவங்க தமிழ் எழுதத் தேவையில்லை. எழுத்துப் பிழை, இலக்கண பிழைக்கெல்லாம் மார்க் குறைக்க மாட்டாங்க. பாதிப்பு ரொம்ப அதிகமா இருக்குறவங்களுக்கு ஸ்க்ரைப் (scribe) கொடுப்பாங்க.

விஷ்ணு :   அதென்ன சார் ஸ்க்ரைப்?

அறிவொளி :  எப்படி கண் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுகளில் அவங்க சொல்லச் சொல்ல இன்னொருத்தர் எழுதுவாங்களோ அதே மாதிரி இவர்களுக்கும் அந்த சலுகை உண்டு.

கார்த்திக் : அடடா! இந்த சலுகையெல்லாம் கிடைச்சா நான்கூட எல்லாத்துலயும் என்பது தொண்ணூறு மார்க் வாங்கிடுவேனே, எழுதுறதுதானே  எனக்குப் பிரச்சனையே !

அறிவொளி : உனக்கு டிஸ்லெக்சியா இருக்குன்னு அரசு மருத்துவர்கள் யாராவது சர்டிபிகேட் குடுத்தாதான்  இந்த சலுகைகள் கிடைக்கும்.  சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல படிக்குறவங்க  டாக்டர் சர்டிபிகேட் வாங்கத் தேவையில்லை. ஆர்.சி ஐ  (Rehabilitation council of India)  நம்பர் வெச்சிருக்க  சிறப்பு ஆசிரியர் யார்கிட்டயாவது  வாங்கினாப்போதும். தமிழக அரசும் சமச்சீர் கல்விமுறையில் படிக்கும் பிள்ளைகளுக்கு  இந்த சலுகையை கொடுத்தா நிறைய பேருக்குப்   பயன்படும். ஆனா அரசாங்கம் என்னதான் சலுகை கொடுத்தாலும், சர்டிபிகேட்ல டிஸ்லெக்ஸியானு சீல் குத்திடுவாங்கன்ற ஒரே காரணத்துக்காக, எந்த சலுகையும் வேணாம், எம்புள்ளை பெயில் ஆனாலும் பரவாயில்லைன்னு நினைக்குற பெற்றோர்களும் உண்டு. 

கார்த்திக் :   ஓ! சர்டிபிகேட்ல சீல் போட்டுடுவாங்களா?

அறிவொளி : ஆமா கார்த்திக். ஆனா அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. உண்மையை ஒத்துக்குறதில் என்ன தயக்கம்? அருணும் இதையே தான் சொல்றார். 'நான் டிஸ்லெக்ஸியா உள்ளவன்னு சொன்னாதான் மத்தவங்களுக்கு என் சிரமம் புரியும். சலுகைகள் கிடைச்சாதான் என்னால பாஸ் பண்ண முடியும். பாஸ் பண்ணாதான் மேற்கொண்டு முன்னேற முடியும்.  நான் மத்தவங்களை விட  வித்யாசமானவன்னு சொல்லறதுல எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.  மத்தவங்க எழுதிப் பாஸ் பண்ணா நான் வாயால சொல்லிப் பாஸ் பண்றேன். மத்தவங்க அசைன்மென்ட்  எல்லாம் கையால எழுதினா நான் கம்ப்யூட்டர்ல டைப் பண்ணிக் கொடுப்பேன். ஏன்னா அதில் ஸ்பெல்லிங் செக் பண்ணிக்கலாம். நான் வித்தியாசமானவன், மத்தவங்ககிட்ட இல்லாத நிறைய திறமைகள் என்கிட்டே இருக்கு என்பதில் எனக்குப் பெருமை உண்டு' என்று சொல்றார்.

விஷ்ணு :  காலேஜ் அட்மிஷன்ல இவருக்கு பிரச்னையில்லையா  சார்.

அறிவொளி : இருந்துச்சு. ரெகுலர் ஸ்கூல்ல படிச்சு  ஆயிரம் மார்க்குக்கு மேல எடுத்தவங்களுக்கே நல்ல காலேஜ்ல பி.காம்  சீட் கிடைக்கிறது சிரமம். இவரு ஒன்பது ஸ்கூல்ல  படிச்சிட்டு சென்னையிலேயே பெஸ்ட் காலேஜ்ல தான்  பி.காம்  படிப்பேன்னு அடம் பிடிச்சா எப்படி ஈசியா  சீட்  கிடைக்கும். 

கார்த்திக் : ஏன் சார் அப்படி அடம்  பிடிச்சார்?

அறிவொளி : அவரோட அப்பாவுக்கு தன் மகன் ஸ்பெஷல் ஸ்கூல்ல படிக்கிறான்னு சொல்றதுக்கு ரொம்ப கௌரவப் பிரச்சனையா இருந்துச்சாம். அதனால காலேஜாவது  தன் அப்பா பெருமைப்படற மாதிரி நல்ல காலேஜ்ல, நல்ல குரூப் எடுத்துப்  படிக்கணும்னு ஆசைபட்டாராம். 

கார்த்திக் : ஆசைப்பட்டது நடந்துச்சா?

அறிவொளி : அவ்வளவு ஈஸியா நடக்கல, ஆனா  அது நடக்கற வரைக்கும் இவரும் விடலை .

விஷ்ணு : என்னப்  பண்ணார் சார்?

அறிவொளி : இந்த மார்க்குக்கு பி.காம்  சீட்டெல்லாம் குடுக்க முடியாதுன்னு துரத்தின அந்த காலேஜ் ப்ரின்சிபால்  வீட்டுக்கு தினமும் காலையில ஆறு மணிக்கெல்லாம் போய்டுவாராம். அவர் எங்கெல்லாம் போறாரோ அங்கெல்லாம் போய் அவர் கண்ல படுற இடத்துல நிற்பாராம். ஒரு வாரம்  தொடர்ந்து இப்படியே செய்யவே தொல்லை தாங்க முடியாம அவர் இவரைக் கூப்பிட்டு உனக்கு என்னதான்டா வேணும்னு கேட்டாராம். பி.காம்  சீட்தான்  வேணும்னு அப்பவும் இவரு உறுதியா இருக்கறதை பார்த்திட்டு, சரி முதல் செமஸ்டர் வரைக்கும் பார்ப்பேன். நீ எல்லாத்துலயும் பாஸ் ஆகலேன்னா வேற குரூப்ல மாத்திடுவேன்னு சொல்லி ஒரு வழியா சீட்  குடுத்துட்டாராம்.

விஷ்ணு : முயற்சி திருவினையாக்கும்னு இதைத்தான்  சொல்லுவாங்க போலருக்கு.  சொன்ன மாதிரி எல்லாத்துலயும் பாஸ் பண்ணாரா?

அறிவொளி : போராட்டம்தான். மத்த எல்லாத்துலயும் பாஸ் பண்ணாலும் அக்கவுண்ட்ஸ் பேப்பர்ல  பெயில் ஆயிடுவாராம். ஒரு ப்ரொபசர் எப்பவுமே, 'நீ எல்லாம் ஏன்டா  இந்த  குரூப் எடுத்து எங்க உயிர வாங்குற, சோசியாலஜி மாதிரி எதாவது  ஈஸியான  குரூப்பா எடுக்க வேண்டியதுதானே.'  அப்படின்னு திட்டுவாராம்.  ஒரு வழியா நாலஞ்சு டியூஷன் வச்சு எல்லா பேப்பரும் பாஸ் பண்ணி கடைசியில அந்த காலேஜ்லயே லெக்ச்சரர்  வேலைக்கும்   சேந்துட்டாராம். முதல் நாள் ஸ்டாப் ரூம்ல இவர் உட்கார்ந்திருப்பதைப்  பார்த்துட்டு அதே ப்ரொபசர் இவரிடம் வந்து, 'ஸ்டூடென்ட்ஸ் எல்லாம் உள்ளேயே வரக்கூடாது, நீ  என்ன இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கே'.  என்று கேட்டாராம்.  இவர்  ரொம்ப அமைதியா, 'இல்லை  சார் நானும் இங்க இப்போ லெக்ச்சரர்தான்'   என சொன்னாராம். 

கார்த்திக் : ஆஹா! சூப்பர் சார், அப்ப அவர் முகத்தை பார்த்திருக்கணுமே! 

அறிவொளி : ஆமா  கார்த்திக், அருண் தன்னோட பேட்டியில் கடைசியா சொல்லியிருக்குறது, 'நம்மை பார்த்து யாராவது ஏளனமா சிரிச்சா, அவங்க மேல கோவப்படாம நம்மை பார்த்து ஆச்சர்யப்படுறமாதிரி வாழ்க்கைல உயர்ந்து காட்டணும். முடியலன்னு சோர்ந்து போய் எங்கேயும் நின்னுடக் கூடாது. ஒரு வழி இல்லன்னா பல வழிகள்ல முயற்சிக்கணும். ஜெயிக்கிறதுதான் முக்கியமே தவிர எந்த வழியில போய் ஜெயிக்கிறோம்ங்றது முக்கியம் இல்ல. அந்த வழியும் எல்லோரும் போகிற வழியாத்தான் இருக்கணுமென்பது அவசியம் இல்ல. யாரும் போகாத புது வழியை  நாமே கூட உருவாக்கலாம். அந்த வழி மத்தவங்களுக்குப் பயன்படக் கூடியதா இருக்கட்டுமே,' என்கிறார். இதைத் தான் ஆங்கிலத்தில் லேட்டரல் திங்கிங் (lateral thinking) என்று சொல்றோம்.  

கார்த்திக் : சூப்பர் சார், சரி வெறுமனே ஒரு காலேஜ் லெக்ச்சரரா இருந்தா நீங்க இவ்ளோ பெருசா சொல்ல மாட்டீங்களே! இவர் வேற ஏதாவது முக்கியமா சமுதாயத்துக்குப் பயன்படுறா மாதிரி செய்துக்கிட்டிருக்காரோ சார்?

அறிவொளி : ரொம்ப சரியா சொல்லிட்ட கார்த்திக். இவர் இப்ப செய்துக்கிட்டிருப்பதைப் பத்திக்  கேட்டா ரொம்ப ஆச்சர்யப்படுவீங்க!

விஷ்ணு : அப்படியா! சொல்லுங்க சார்.

(அவர் சொல்லப் போவதைக் கேட்க ஆர்வத்துடன் காத்திருந்தனர் கார்த்திக்கும் விஷ்ணுவும். நாமும் காத்திருப்போமா?)

பிரியசகி 

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com