புதையல் 18

அறிவொளி: மனிதர்களுக்கு எட்டு விதமான அறிவுத்திறன் இருக்கு கார்த்திக். ஒவ்வொருவருக்கும்
புதையல் 18

மனிதனை முழுமையாக்கும் மொழி!

அறிவொளி: மனிதர்களுக்கு எட்டு விதமான அறிவுத்திறன் இருக்கு கார்த்திக். ஒவ்வொருவருக்கும் இதில் ஏதாவது இரண்டோ அல்லது மூன்றோ திறன்கள் கண்டிப்பா இருக்கும். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் தன்னிடம் இயல்பாக இருக்கும் திறனை இன்னும் மெருகேற்றிக் கொள்ளவும் முடியும், இல்லாத திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

கார்த்திக்: அது என்ன சார் எட்டு விதமான அறிவுத்திறன்?

அறிவொளி: மொழித்திறன், கணிதத்திறன், இடம் சார்ந்த காட்சித் திறன், உடல் இயக்கத் திறன், இசைத் திறன், பிறருடன் கலந்து பழகும் திறன், தன்னைத்தான் அறியும் திறன், இயற்கையோடு ஒன்றியிருக்கும் திறன் என்று எட்டு வகை இருக்குப்பா. இதில் முதலில் இருப்பது மொழித் திறன்.

சந்தோஷ்: ஆமா சார்! மனிதனோட பரிணாம வளர்ச்சியில் அடித்தளமா இருப்பது மனிதக் கண்டுபிடிப்புகளிலேயே மிக முக்கியமான மொழி தானே! சைகைகள், குகை ஓவியங்கள் மூலமா தான்  நினைப்பதை மத்தவங்களுக்கு புரிய வைச்சுக்கிட்டிருந்த மனுஷன் மொழியைக் கண்டுபிடிச்ச பிறகுதான் விலங்குகளிலிருந்து வேறுபட்டு அறிவு சார்ந்த நிலையில் முன்னேறத் தொடங்கினான் இல்லையா?

அறிவொளி: அதுமட்டுமில்லை சந்தோஷ், தான் நினைப்பதை அடையக் கூடிய வல்லமையை மனிதருக்குக் கொடுத்ததும் மொழிதான்.

விஷ்ணு: சார், நீங்க இரண்டு பேரும்  ஏதோ பெரிய லெவல்ல பேசுறீங்க. எனக்கு எதுவும் புரியலை.

அறிவொளி: ஓ! சாரி விஷ்ணு, உனக்குப் புரியும்படி சொல்றேன். எப்பவும் நாம எதைப்பத்தி பேசிக்கிட்டு, நினைச்சுக்கிட்டு, எழுதிக்கிட்டு இருக்கோமோ அதை நம்மால உருவாக்க முடியும். உதாரணமாக நமக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்குப் பல ஆண்டுகள் முன்னாடியே

‘ஆடுவோமே பள்ளு படுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிடோமென்று’

என்று பாடியவர் நம் பாரதியார். அவருடைய சுதந்திரக் கனவு நினைவேறிவிட்டது இல்லையா!

சந்தோஷ்: வார்த்தைகளின் வலிமைக்கு இன்னொரு புகழ் பெற்ற உதாரணம் உண்டு. 1960-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி ஒரு பொதுக்கூட்டத்தில், 'இன்னும் பத்தாண்டுகளுக்குள் நாம் நிலவில் கால் பதித்து விடுவோம்', என்றார். 1969 ஆம் ஆண்டு ஜூலை 16-ல் அந்த வார்த்தைகள் வடிவம் பெற்று செயலானது. மனிதன் நிலவில் கால் பதித்தான். இந்த நிகழ்ச்சி எதிர் காலத்தில் நடக்கும் என உணர்த்த பாரதி பல ஆண்டுகளுக்கு முன்பே

‘வானையளப்போம் கடல் மீனையளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று தீர்க்கதரிசனம் கூறினார்.

கார்த்திக்: நம்ம அப்துல் கலாம் ஐயா கூட 2020-ல் இந்தியா வல்லரசாகும்னு சொன்னாரே. அது நடக்குமா சார்.

சந்தோஷ்: சார் சொன்ன மாதிரி இந்தியர்கள் எல்லோரும் அதைப்பத்தியே நினைச்சிக்கிட்டு, பேசிக்கிட்டு, அதற்கான முயற்சிகள் செய்துகிட்டிருந்தா கண்டிப்பா நடக்கும். ஆனா எங்கே, நமக்குத்தான் நாளுக்கொரு பிரச்சனை நிமிஷத்துக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ்ன்னு பொழுது போய்க்கிட்டிருக்கே.

அறிவொளி: உன் மொழி அறிவை வளர்த்துக் கொள்ள நிறைய புத்தகங்கள் படி. புத்தகங்கள் நம்மை குறுகிய வட்டத்திலிருந்து வெளிக்கொண்டுவந்து விசாலமான உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்தும். தான் படித்ததை மற்றவர்களோடு கலந்து பேசுவதாலும், விவாதிப்பதாலும், தனி மனித, சமுதாய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.

விஷ்ணு: புத்தகம் படிப்பதைத் தவிர மொழி அறிவை வேறு எப்படி வளர்த்துக்க முடியும் சார்?

அறிவொளி: நம்ம மூளையை இடது வலது என இரண்டு சம பாகமா பிரிச்சா இடது பக்க மூளைதான் மொழியறிவுக்கான இடம் விஷ்ணு. விடுகதை, கவிதை, நகைச்சுவை, கதை சொல்வது, கதை எழுதுவது, இலக்கணம், இலக்கியம், சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவது, பட்டிமன்றத்தில் கலந்து விவாதிப்பது போன்ற செயல்கள் எல்லாமே நம் இடப்புற மூளையைத் தூண்டி மொழியறிவை வளர்க்க உதவும். சரி நான் ஒரு விடுகதை கேக்குறேன் பதில் சொல்றீங்களா பார்ப்போம்.

கார்த்திக்: ஓ! நான் ரெடி சார்.

அறிவொளி: உலகிலேயே மிக வேகமானதும், மெதுவாகச் செல்பவனும் நான்தான். மிக நீளமானதும், மிகக் குறுக்கியவனும் நான்தான். அதிகத் தேவையிருந்தும் மக்களால் அதிகம் வீணாக்கப்படுபவனும் நான்தான். நான் யார்?

கார்த்திக்: ரயில் பெட்டியா...? இல்லையே!

விஷ்ணு: நாக்கு... வார்த்தையா சார்? தெரியலை நீங்களே சொல்லிடுங்க சார்.

கார்த்திக்: சார். நான் கண்டு பிடிச்சிட்டேன். அதிகத் தேவையிருந்தும் அதிகமா வீணாக்கப்படுவது நேரம் தான். கரெக்ட்டா சார்?

அறிவொளி: ரொம்ப சரியா சொல்லிட்டே கார்த்திக். நண்பர்கள் நீங்க ஒண்ணா சேர்ந்து பேசும் போதோ, வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்திலோ வெட்டி கதை பேசி நேரத்தை வீணாக்குவதை விட இது போல விடுகதைகளை சொல்லி விளையாடினா நேரமும் வீணாகாது, மொழியறிவும் வளரும்.

சந்தோஷ்: நானும் வகுப்புல ஒரு சில மொழி சார்ந்த விளையாட்டுக்களை விளையாட வைப்பதுண்டு சார்.

அறிவொளி:என்னன்னு சொன்னா எங்களுக்கும் பயன்படும் சந்தோஷ்.

சந்தோஷ்: பசங்களை செய்தித்தாள் கொண்டு வரச் சொல்வேன். அதில் இரண்டு அரசியல்வாதிகளோடப் படம் இருந்தா அவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு பசங்களை கற்பனையா பேச சொல்வேன். நாம நினைச்சே பார்க்காத அளவு ரொம்ப நகைச்சுவையாகவும் சில நேரம், அடடா! உண்மையிலேயே இப்படி பேசியிருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்னு நாம் யோசிக்கிற மாதிரியும் ரொம்ப நல்லா பேசுவாங்க. சின்னச் சின்ன கதை புத்தகங்களைக் கொடுத்து பாதி வரை படிக்க சொல்லிட்டு அடுத்து என்ன நடக்கும்னு பசங்களை மீதி கதை சொல்ல சொல்வேன். உண்மையில் அவங்க சொல்ற கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.

கார்த்திக்: சூப்பர் சார். இதே மாதிரி நாங்களும் சில விளையாட்டுக்கள் விளையாடுவோம். பத்து பேர் இருந்தா இரு குழுக்களா பிரிச்சுக்கிட்டு குழுவுக்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக்குவோம். ஏதேனும் ஒரு எழுத்தைத் ஆரம்ப எழுத்தாகக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு வாக்கியத்தை சொல்லணும். உதாரணமா,

1) அடிமை வாழ்வை ஒழித்திடுவோம்.

2) அன்னை பூமியைப் பாதுகாப்போம்.

இது போல மாற்றி மாற்றி சொல்லணும்.யாரு சொல்லையோ அவங்க அவுட்.

விஷ்ணு: இதே மாதிரி இங்கிலீஷ்லயும் விளையாடுவோம். முதல் ஆள் ‘teacher I can't come to school today.because I've got allergies’ என்று சொன்னால் அடுத்தடுத்த ஆட்கள் லீவுக்கான காரணத்தை அகர வரிசையில் சொல்லிக்கிட்டே வரணும். உதாரணமா இரண்டாவது ஆள் Allergies, backpainனு சொல்லணும். மூணாவது ஆள் allergies. backpain, and coughனு சொல்லணும். இப்படியே Z வரை சொல்லணும்.யாருக்குத் தெரியலையோ அவங்க அவுட்.

சந்தோஷ்: வெரிகுட் விஷ்ணு இதே மாதிரி பத்திரிகைகளில் வரும் குறுக்கு புதிர் போட்டிகளை எழுதிப் பார்க்கலாம்.வகுப்புக்குள்ளேயே கையெழுத்துப் பிரதி நடத்தலாம். அகராதியில் ஏதேனும் ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து அதன் பொருள் என்ன, அதை எப்படி உச்சரிக்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டு சிறிது நேரத் தயாரிப்புக்குப் பின் அவ்வார்த்தையை தலைப்பாகக் கொண்டு பேச வேண்டும்.அடிக்கடி இப்பயிற்சியில் ஈடுபட நினைத்த நேரத்தில் எதைப்பற்றியும் பேச வல்லவர்களாகிவிடுவோம். 

ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் விவாதிக்கலாம். உண்மை எதுவாக இருந்தாலும் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட தலைப்பு தான் சரியென பிறர் நினைக்கும் வகையில் விவாதிக்க வேண்டும்.உதாரணமாக டாக்டர் அப்துல் கலாம் விஞ்ஞானியாயிருந்ததை விட ஜனாதிபதி ஆனதால் தான் இந்தியா அதிகப் பயனடைந்தது என ஒருவரும் அவர் விஞ்ஞானியாகவே இருந்திருந்தால் இந்தியா இன்னும் அதிகம் பயன் அடைந்திருக்கும் என மற்றொருவரும் விவாதிக்க வேண்டும்.

அறிவொளி: இதுவும் நல்ல வழிதான். பிள்ளைகளை அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு பொருளையும் 6S ஆக (sight,smell, sound, sense, size, speciality) வர்ணிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அதாவது ஒரு வாழைப்பழத்தை சாப்பிடக் கையில் எடுத்தால் அது பார்க்க எப்படி உள்ளது? அதைத் தட்டினால் என்ன விதமான ஒலி உண்டாகிறது? என்ன மணம் கொண்டுள்ளது? தொட்டுப் பார்த்தால் மென்மையாக உள்ளதா? கடினமாக உள்ளதா? எவ்வளவு பெரிதாக உள்ளது? கனமாக உள்ளதா?  அதன் முக்கியத்துவம் என்ன? அதை உண்பதால் என்னென்ன நமைகள் உண்டாகும்? என்ற கேள்விகளை எழுப்ப வேண்டும். 6s க்கு என ஒரு நோட்டு புத்தகம் வைத்து, பார்க்கும் பொருட்களையெல்லாம் வர்ணிக்க ஆரம்பித்தால் நாளடைவில் கவிஞர்களாகிவிடுவோம்.

சந்தோஷ்: நல்ல ஐடியா சார் இது.  இதே மாதிரி ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக்கொண்டு

1. இது ஐம்பது மடங்கு பெரிதாக இருந்தால் அதை எதற்குப் பயன் படுத்தலாம்?

2. ஐம்பது  மடங்கு சிறியதாக இருந்தால் எதற்குப் பயன்படுத்தலாம்?

3. இதனுடைய பாகங்களை இடம் மாற்றினால் வேறு எதாவது உருவாக்க முடியுமா?

4. வேறு என்னென்ன  விதத்தில் இப்பொருளைப் பயன் படுத்த முடியும்?

ஒவ்வொரு பொருளுக்கும் இத்தகைய கேள்வி எழுப்புவதன் மூலம் புதிய ஆக்கப் பூர்வ சிந்தனைகள் உருவாகும். பார்வையின் புதிய கோணங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும்.

பிள்ளைகளை இருபொருள் தரும் சொற்கள் என்னென்ன என்று அகராதியில் கண்டுபிடித்து வரச் சொல்லலாம்.அந்த காலத்தில் காளமேகப்  புலவர் சிலேடைச் சொற்களாலேயே பாடல் இயற்றுவதில் வல்லவராக இருந்தார் இல்லையா. அதே போல முன் பின் எப்படி படித்தாலும் ஒரே அர்த்தம் தரக் கூடிய வார்த்தைகளை கண்டுபிடித்து வரச் சொல்லலாம்.

கார்த்திக்: விகடகவி மாதிரி தானே சார் சொல்றீங்க. இது மாதிரியான வார்த்தைகளை வைத்து ஒரு பாட்டு முழுவதையும் நம்ம கவிஞர் வைரமுத்துவோடப் பையன் மதன் கார்க்கி எழுதியிருக்காரே! ரொம்ப யோசிச்சு எழுதியிருக்கார்.

சந்தோஷ்: பரவாயில்லையே கார்த்திக், இது மாதிரி தகவலெல்லாம் விரல் நுனியில் வெச்சிருக்கியே !

கார்த்திக்; சினிமா பாட்டெல்லாம் ரெண்டு வாட்டி கேட்டாலே மனப்பாடம் ஆகிடும் சார். பாடம் படிக்குறது தான் பிரச்சனையே.  

விஷ்ணு: சார் கார்த்திக் டங் ட்விஸ்ட்டர் ( tongue twister ) எல்லாம் சூப்பரா சொல்வான் கேளுங்க.

அறிவொளி: அப்படியா எங்க சொல்லு பார்க்கலாம் கார்த்திக். 

(வெட்கம் கலந்த புன்னகையுடன்  கார்த்திக் மடமடவென சொல்ல ஆரம்பித்தான்.)

1. She sells sea shells on the sea shore.

2. Betty bought some butter,

    The butter was so bitter,

    So Betty bought some better butter,

    to make the bitter butter better.

3.  Road roller lorry

4.  யார் தைத்த சட்டை,

     இது எங்க தாத்தா தைத்த சட்டை.

5.  ஏழைச்  சிறுவன் வாழைப்  பழத் தோலால் வழுக்கி விழுந்தான்.

(சிறிதும் தடுமாற்றமின்றி தெளிவான உச்சரிப்புடன் கார்த்திக் சொல்லும் அழகில் பிரமித்து மற்ற மூவரும் கைகளைத் தட்டிப்  பாராட்டினர்.

அறிவொளி: வெரி குட் கார்த்திக், எல்லோராலும் செய்ய முடியாததை நீ எவ்வளவு சுலபமா செய்ற பார்த்தியா! நீ முயற்சி  செய்தா உன்னால முடியாத அல்லது உனக்கு பிடிக்காத பாடத்தை, வேலையை , ஆட்களையெல்லாம் கூட உனக்குப் பிடிச்சதா மாத்திக்க முடியும்.

கார்த்திக்: அப்படியா அது எப்படின்னு சொல்லுங்க சார்.

(கார்த்திக், விஷ்ணு, சந்தோஷ் மூவருக்கும் நான்கு வெள்ளை தாள்களும் பேனாவும் கொடுத்து கண்களை மூடி தியானிக்க சொன்னார் அறிவொளி.)

அறிவொளி: உங்களுக்கு பிடிக்காத (செயல்கள், நபர்கள், சம்பவங்கள், பொருட்கள், நம்பிக்கைகள் பிறர் மீது கொண்ட எண்ணங்கள் )பத்து விஷயங்களை உங்கள் கையில் இருக்கும் முதல் பேப்பரில் எழுதுங்க.

இப்ப எழுதினத்துக்கு நேர் எதிரான உங்களுக்கு பிடித்த பத்து விஷயங்களை இரண்டாவது பேப்பரில் எழுதுங்க.

இப்ப மூன்றாவது பேப்பரை எடுத்து முதல் பேப்பரில் எழுதப்பட்ட ஒவ்வொன்றையும் எப்படி மாத்தினா அது உங்களுக்குப்  பிடிச்சதா மாறும்னு எழுதுங்க. 

இப்ப முதல் பேப்பரை கிழிச்சுப்  போட்டுருங்க. கிழிக்கும் சமயத்தில் அந்த பத்து எதிர் மறையான விஷயங்களும் உங்களை விட்டுப் போனதாகவும் அதே நேரம் உங்களுக்குப்  பிடிக்காததையெல்லாம் பிடிச்சதாக்கும் புதிய பாதையில் நீங்கள் பயணிப்பதாகவும் கற்பனை செய்துக்கணும்.

மூன்றாவது பேப்பரில் எழுதி இருப்பதில் மாற்றுவதற்கு மிக எளிதான ஒரு செயலை முதலில் தேர்ந்தெடுத்து அதை நான்காவது பேப்பரில் எழுதுங்க.

கண்களை மூடி உங்க வாழ்க்கையில் எந்த இடத்தை ரொம்ப அதிகமா விருப்புவீங்களோ அங்கு நீங்க இருப்பதா கற்பனை செய்துக்கோங்க. நீங்க தேர்தெடுத்த அந்த பிடிக்காத காரியம் பிடிச்சதா மாற என்னென்ன மாற்றங்கள் தேவையோ அதெல்லாம் இப்ப உங்களுக்குள்ளே நடந்துக்கிட்டிருப்பதாக உங்க ஆழ்மனதுக்கு கட்டளையை அனுப்புங்க. இந்த கட்டளை உங்க உடலில் ஒவ்வொரு செல்லிலும் பாய்ந்து பரவுவதாக உணருங்கள். முழுமையான மாற்றம் உங்களுக்குள் ஏற்பட்டு விட்டதாக நீங்கள் உணரும் வரை இந்த கட்டளையை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருங்கள். 

(அப்படியே அமைதியான சூழலில் ஓரிரு நிமிடங்கள் அவர்களை தியானித்திருக்க செய்து விட்டு பின் மூன்று முறை உள்ளங்கைகளைத் தேய்த்து கண்கள் மீது தேய்த்த பிறகு மெதுவாக கண்களைத் திறக்கச் சொன்னார் அறிவொளி.)

இப்ப எப்படி பீல் பண்றீங்க.

கார்த்திக்: சார் நிஜமாவே ரொம்ப பிரெஷ்ஷா உணர முடியுது. எனக்குள்ளே இருந்த நெகட்டிவான விஷயமெல்லாம் போய்ட்டதாகவும் என் உடம்புக்குள்ளே ஏதோ மாற்றம் வந்த மாதிரியும் தோணுது சார்.

விஷ்ணு: சார் எனக்கு எங்க பாட்டி வீட்டுக்குப்  போறது   ரொம்ப பிடிக்கும். நீங்க பிடிச்ச இடத்தில இருக்கிறதா நினச்சிக்க சொன்னப்ப நிஜமாவே எங்க பாட்டி வீட்டு தோட்டத்துல உட்கார்த்திருந்த மாதிரியே இருந்துச்சு சார். இதே மாதிரி நமக்கு பிடிக்காத விஷயங்கள் பிடிச்சதா மாறிடுச்சின்னு நாம நினைக்க நினைக்க அது நிஜமாவே மாறிடும், அப்படித் தானே சார்.

அறிவொளி: ஆமா விஷ்ணு இதே மாதிரி நீ எழுதின மற்ற பிடிக்காத விஷயங்களும் பிடிச்சதா  மாறும் வரைக்கும் தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து  செய்யணும் சரியா.

கார்த்திக்: நிச்சயம் செய்றோம் சார். 

சந்தோஷ்: நமக்குள்ளே மாற்றங்கள் தொடர்ந்து ஏற்படும் போது நம்மைச்  சுற்றி உள்ள உலகம் எவ்வளவு உன்னதமானதுன்னு உணர முடியுது. இந்த நல்ல அனுபவத்தைக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார்.

அறிவொளி: இதுக்கே நன்றி சொல்லி முடுச்சுடாதீங்க சந்தோஷ் இன்னும் நிறைய இருக்கே !

[‘மனிதன் கருவிகளை உபயோகப்படுத்தும் ஒரு மிருகம் அவனது முக்கிய கருவி மொழி இக்கருவி மூலம் மனிதனின் வாழ்க்கையையே மாற்றி அமைக்க முடியும். மனிதன் மொழியை உருவாக்கினான்.மொழி மனிதனை ஒரு முழுமையான மனிதனாக்குகிறது’ - லேயர்ட்  ]

தொடரும்... 

பிரியசகி 

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com