பதின் வயதில் தேவையான போஷாக்கு!

இந்நாட்களில் தாய்மார்களுக்கு இருக்கின்ற தலையாய பிரச்னை என்னவெனில்
பதின் வயதில் தேவையான போஷாக்கு!

இந்நாட்களில் தாய்மார்களுக்கு இருக்கின்ற தலையாய பிரச்னை என்னவெனில், குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்பதுதான். தாய்மார்களைக் கேட்டால், ‘என் குழந்தை எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை, வாயிலேயே வைத்துக் கொண்டு இருக்கிறான். ஸ்கூல் நாட்களில் முழுங்கு, முழுங்கு என அதட்டி அதட்டிதான் ஆகாரத்தை வயிற்றுக்குள் திணிக்க வேண்டியதாக இருக்கிறது’ என்று அங்கலாய்க்கிறார்கள்.

இந்தக் குறைகளுக்கு விளக்கம் தருகிறார், டாக்டர் வர்ஷா (Founder, chair, Indian Institute of Nutritional Sciences) ஆறு வயது முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளை டீன் ஏஜ் என்கிற பிரிவில் தான் வருகிறார்கள். அவர்களை ‘இமிடேடட் ஈட்டர்ஸ்’ என்று கூறுகிறோம். அதாவது பிறர் எப்படி சாப்பிடுகிரார்கள்? என்ன சாப்பிடுகிறார்கள்? என்பதை கூர்ந்து கவனித்து அதன்படி சாப்பிடும் வயதினர்கள் என்று கூறலாம். அதாவது வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களைப் பார்த்து உணவுப் பழக்கத்தைக் கொள்ளுவார்கள்.

இந்தப் பிராயத்திற்கு முந்தினவர்களை ‘ட்ரினிட்டி’ என்று குறிப்பிடுகிறோம். அவர்கள், ஒரு வாரம் நெய் சாதம் சாப்பிட்டால், எட்டாவது நாளிலிருந்து அதை தொடக்கூட மாட்டார்கள். அடுத்து வேறு வகை உணவை ஒரு வாரம் சாப்பிடுவார்கள்.

ஆறு வயது முதல் ஏழு வயது வரை உள்ள குழந்தைகளை உணவு விஷயத்தில் பெற்றோர் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் பிடிக்காது என்று சொல்லும் வஸ்துவை, ‘சாப்பிட்டுப் பார். உடம்பிற்கு நல்லது’ என்று அன்பு வார்த்தைகளைக் கூறி, சாப்பிடப் பழக வைக்க வேண்டும்.

எட்டு வயதில் இருக்கும் குழந்தைக்கு பசி அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவன் ‘அடலசண்ட் ஏஜ்’ எனும் பிரிவிற்கு நெருக்கமாக வருகின்றான். அவனுக்கு ‘இம்ப்ரசிவ் ஃபுட்’ மேல் தான் நாட்டம் அதிகம் இருக்கும். அதாவது அவனுக்கு நல்ல நிறமும் வாசனையும் உள்ள பதார்த்தஙக்ளின் மீது ஈர்ப்பு ஏற்படும். அவ்வகை உணவுகளைத் தான் சாப்பிடப் பிடிக்கும். ஒன்பது வயதில் ‘இம்ப்ரசிவ் ஃபுட்’ ஆக இருப்பதோடு எப்படி சமைக்கிறார்கள் என்பதிலும் நாட்டம் இருக்கும். இதில் ஏன் கடுகு போடுகிறார்கள், ஏன் அதில் போடவில்லை போன்ற கேள்விகளுடனேயே உட்கொள்ளும் பழக்கமும் சேர்ந்துவிடும்.

ஒவ்வொரு வருடமும் அவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல் பெற்றோர் அவர்களை சரியாக வழிநடத்த வேண்டும். இது ஒரு தாயின் முக்கியமான பொறுப்பான கடமையாகும்.

டீன் ஏஜ் என்று கூறப்படும் ஆறு முதல் ஒன்பது வயதிலான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டும். வீட்டிலிருப்பர்வர்களின் வழிகாட்டுதல்களோடு காலை சிற்றுண்டியை சாப்பிடத் தான் வேண்டும். நேரத்தோடு உணவை சாப்பிட வேண்டும் போன்ற அறிவுரைகளை கூற வேண்டும். குறைவாகவும் சாப்பிடக் கூடாது அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

பிறந்ததிலிருந்து பதினெட்டு வயது வரை உள்ளவர்களை ‘குழந்தை’ என்றுதான் குறிப்பிடுகிறோம் ஆனால் அந்தந்த பிராயத்துக்கு உண்டான பிரிவினர்கள் அவர்களுக்குத் தேவையான உணவினை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்>

அவர்கள் அரிசி சாப்பிடுகிறார்க்ளா, கேழ்வரகு சாப்பிடுகிறார்களா, கோதுமை சாப்பிடுகிறார்களா என்பது முக்கியமில்லை.

டீன் ஏஜ் பிராயத்தினர் ஒரு நாளைக்கு 200 கிராம் முதல் 250 கிராம் வரை, வயதினைப் பொறுத்து, தானியங்கள் சாப்பிட வேண்டும் (ஏற்கனவே சொன்னது போல் எது வேண்டுமானாலும் இருக்கலாம்) 30 கிராம் முதல் 70 கிராம் வரை துவரம் பருப்போ அல்லது பாசிப்பருப்போ உண்ண வேண்டும். முட்டை சாப்பிடுகிறவர்கள் 30 கிராம் பருப்புடன் ஒரு முட்டை (முப்பது கிராம்) சாப்பிட்டால் அதுவே 60 கிராம் கணக்கு வந்துவிடும்.

மேலும் 125 கிராம் காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதில் கீரைவகை 25 கிராம், ரூட் வெஜிடபிள் 15 கிராம் (காரட், வெங்காயம், முள்ளங்கி போன்றவை), மற்ற காய்கறிகள் 10 கிராம், நீர் பதார்த்தங்கள், வெள்ளரி, தக்காளி, செள செள 15 கிராம். உருளை, சேம்பு போன்றவை 10 கிராம். இது ஒரு சிறிய கணக்குதான். இவைகளுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

இவைகள் தவிர டீன் ஏஜ் குரூப்பிற்கு ஒரு நாளைக்கு அரைலிட்டர் முதல் ஒரு லிட்டர் பால் கொடுக்க வேண்டும். (வயதினைப் பொறுத்து). இந்த அட்டவணையை நானே சொல்வதாக நினைக்க வேண்டாம். இந்தியக் குழந்தைகளுக்காக ICMR (இண்டியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச்) பரிந்துரை செய்கிறது.

தினமும் உணவில் இந்த அளவு சேருதல் அவசியம். ‘அதை அதிகமாகக் கொடுத்ததினால் இதைக் குறைத்தேன்’ என்று நாமே நம்மை சமாதானம் செய்து கொள்ளக் கூடாது.அந்தந்த வயதிற்குண்டான உயரமும் எடையும் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஆறுவயது ஆண் குழந்தை 20.7 கிலோ எடை இருக்க வேண்டும். பெண் 19.5 எடை இருக்க (19.5) வேண்டும். ஒன்பது வயதில் ஆண் 28.1 கிலோ எடையில் இருக்க வேண்டும். பெண் 28.5 கிலோ எடை இருக்க வேண்டும்.

இந்த வகையில் பார்க்கும் போது, ஒன்பது வயதில் ஆணைவிட, பெண்ணே எடை கூடுதலாக இருப்பாள். இருபாலாருக்கும் கலோரியில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஆனால் டீன் ஏஜில் இப்படி இருந்தால்தான் அடலசன்ட் ஏஜ் குரூப்புக்கு வரும் சமயம் தகுந்த ஆரோக்கியம் இருக்கும் என்று ICMR பரிந்துரை செய்கிறது.

ஆகார வகைகளைத் தவிர, ஆறு முதல் எட்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகள் நெடுநேரம் சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. சிறுநீர் கழிக்கும் போது அவர்களுக்கு எரிச்சலோ, நமைச்சலோ இல்லாதிருப்பது அவசியம்.

பொதுவாக இந்த வயதுக் குழந்தைகள் சாதமோ, சப்பாத்தியோ, நூடுல்ஸோ எதை வேண்டுமானாலும் சாப்பிடட்டும். அவர்களுடைய உணவில் மேற்சொன்ன போஷாக்கு சேர்க்கபடுகிறதா என்று பெற்றோர்கள் பார்க்க வேண்டும்.’ என்று ஒரே மூச்சில் டாக்டர் வர்ஷா கூறி முடித்தார்.

பெற்றோர்களே, முக்கியமாகத் தாய்மார்களே, டாக்டரின் ஆலோசனையை படித்தீர்கள் அல்லவா? முடிந்தவரை முயன்று பாருங்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும், அவர்களுடைய குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமலா போய்விடும்?

தொகுப்பு – மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com