உடலுக்கு ஊட்டம் தரும் பழம் எது?

இன்றைய பரபரப்பான அலுவல்களுக்கிடையே ஒவ்வொருவரும் அவரவர் ஆரோக்கியத்திற்கு
உடலுக்கு ஊட்டம் தரும் பழம் எது?

இன்றைய பரபரப்பான அலுவல்களுக்கிடையே ஒவ்வொருவரும் அவரவர் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து, தங்களை கவனித்துக் கொள்வது என்பதே பெரிய சவாலாகி விட்டது. சில குப்பை உணவுகள் உடலுக்குக் கெடுதல் என்கிற விழிப்புணர்வு அவர்களிடம் இருப்பதால், அவற்றை உண்பதை தவிர்த்து விடுகிறார்கள் என்பது என்னவோ உண்மை. அதற்காக உடலுக்குப் பயன் தரக் கூடிய நல்ல பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. இயந்திர வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டு, எதைக் கேட்டாலும் 'எனக்கு டைம் இல்லை' என்று பொதுவான ஒரு பதிலாக பலர் கூறி வருகிறார்கள். 

அட, சமைத்து சாப்பிடும் படியாக அல்லாமல், இயற்கையாக கிடைக்கக் கூடிய பழங்கள் இருக்கின்றனவே. அவற்றை உண்ணலாமே! எத்தனையோ வித பழங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும்  சிறப்பான மருத்துவ குணங்கள் உள்ளன. விநாயக சதுர்த்தி சமயத்தில், விளாம்பழம் நிறைய கிடைக்கும். பிள்ளையார் சதுர்த்தி பூஜையில் கூட நைவேத்தியப் பழங்களில் ஒன்றாக இப்பழம் காணப்படும். இப்பழம் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரைதான் கிடைக்கும். அதற்குப்பின் சீசன் முடிந்து விடும். மிகக் குறைவான நாட்களே கிடைக்கும் இப்பழத்தின் மருத்துவக் குணங்களை நிறைய பேர் அறிய வாய்ப்பில்லை. இப்பழத்தில், புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ சத்து,  சி சத்து ஆகியவைகள் காணப்படுகின்றன. சிலருக்கு இளம் வயதிலேயே தோலில் சுருக்கங்கள் காணப்படும். விளாம்பழத்தை இந்த சீசனில் தினமும்  சாப்பிட்டு வந்தால் சுருக்கங்கள் மட்டுப்படும். 

வெயிலில் அலைந்து விட்டு வந்த பின், முகம் டல்லாக காணப்படுகிறதா? முகம் பொலிவாக விளங்க வேண்டுமா? இரண்டு ஸ்பூன் பசும்பாலில், இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், இரண்டு ஸ்பூன் விளாம்பழத்தினைக் கலந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, முகத்தில் பூசிக்கொண்டு காய்ந்த பின்னர் குளிர்ந்த  நீரால் முகத்தைக் கழுவுங்கள். முகம் பிரகாசிப்பதைக் கண்டு நீங்களே மகிழ்ந்து போவீர்கள். 

கூந்தல் பட்டுப்போல இருக்க வேண்டுமா? விளாம்பழ ஓட்டினை காயவைத்து, பௌடராக்கிக் கொள்ளுங்கள். ஒரு பங்கு ஒடு பௌடருக்கு, இரண்டு பங்கு சீயக்காய் பொடி, இரண்டு பங்கு வெந்தயப் பொடி, இரண்டு பங்கு காய்ந்த  பஷ்பங்களின்  பொடி என்கிற விகிதத்தில் கலந்து, தலைக்குத் தேய்த்து வந்தால் கேசம் மிருதுவாக இருக்கும். 

விளாங்காயாக இருந்தால், ஓடு நீக்கி,  சதையுடன்   தயிர் சேர்த்து, பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால், அல்சர் மற்றும் வாய்ப்புண்ணிற்கு டாட்டா சொல்லி விடலாம். இந்தப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி குணமாகும் என்று கூறப்படுகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. சிறியவர்களுக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

எலும்புக்கு வலுவினைத் தருவதுடன், ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை எதிர்க்கும் சக்தியும் இப்பழத்திற்கு உண்டு. பழத்திற்கு மட்டுமல்ல. இந்த மரத்தின் இலைகளுக்கும், பட்டைகளுக்கும் கூட மருத்துவ குணங்கள் உண்டு. விளாமர இலையுடன், சமபங்கு செம்பருத்தி இலையை எடுத்து, அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வர தலைமுடி பளபளவென்று பிசுக்கு இல்லாமல் இருக்கும். இந்த மரத்தின் பட்டையை, கொதிக்க வைத்து, வடிகட்டி, சிறிது பனங்கற்கண்டு, சிறிது நெய் சேர்த்து குடித்தால் வறட்டு இருமல் கட்டுப்படும். 

விளாம்பழத்தில் இத்தனை மருத்துவக் குணங்கள் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? இனி விளாம்பழத்தினை அலட்சியப்படுத்தாதீர்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை உதாசீனப்படுத்தாமல், உண்டு ஆரோக்கிய வாழ்வினை வலிமைப்படுத்துங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com