நூறு வருடம் நோய் நொடியில்லாமல் வாழ ஆசையா? இது உங்களுக்குத்தான்!

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நம் முன்னோர்கள் கூறியிருப்பதை நாம் ஏதோ சாதாரண
நூறு வருடம் நோய் நொடியில்லாமல் வாழ ஆசையா? இது உங்களுக்குத்தான்!

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நம் முன்னோர்கள் கூறியிருப்பதை நாம் ஏதோ சாதாரண ஒரு வாக்கியமாக கடந்து வந்திருப்போம். ஆனால் அது அப்படி கடந்து வரக் கூடிய ஒரு சொற்தொடர் அல்ல. முற்காலத்தில் மனிதர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்தார்கள். சுவைகளை அறு வகையாகப் பிரித்து உண்ணும் பழக்கத்தையும் அவர்கள் கடைபிடித்தனர்.

இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு இவையே அந்த ஆறு சுவைகள். இந்த சுவைகளை உள்ளடக்கி சமைக்கப்படும் உணவுகளை அறுசுவை உணவு என்று கூறினார்கள். 

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’

என்று திருமூலர் திருமந்திரத்தில் உடம்பை போற்றிப் பாதுகாக்க சொல்கிறார். உடம்பை வளர்ப்பதன் மூலம் உயிரை வளர்க்க முடியும் என்கிறார். நாம் உயிருடன் இருக்க உடல் தேவை. தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்கள் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க நல்லுணவு தேவை. அந்த நல்லுணவு அறுசுவைகளில் கிடைக்கப் பெறுகிறது.

ஒரு சுவை அதிகமாகவும் இன்னொரு சுவை குறைந்தும் இருந்தால் சமன் தன்மை குறைந்து உடலுக்கு சத்துக் குறைபாடு ஏற்படுகிறது அல்லது அதிகப்படியான ஒரு சுவையால் அதிக சத்துக்கள் உடலுக்குக் கிடைத்துவிடுகிறது. இந்த சுவைகளில் சமச்சீர் இருந்தால்தான் உடல் நலத்துடன் இருக்க முடியும். இல்லையெனில் வாதம், பித்தம், கபம் போன்ற பிரச்னைகளை விளைவித்துவிடும். நாள்பட அதுவே நோய்களுக்கான மூல காரணமாகிவிடுகிறது. 

பிரபஞ்சம் என்பது இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தி. அதனுள் ஒடுங்கியிருப்பதே இயற்கை மற்றும் மனித உயிர்கள். இயற்கை சக்திகளான பஞ்சபூதங்களுக்கும் அறுசுவைக்கும் சங்கிலித் தொடர்பு உண்டு. பஞ்ச பூதங்களில் இரண்டு இரண்டு பூதங்கள் இணைந்து ஒரு சுவையை உருவாக்கும்.

மண்ணும் நீரும் சேர்ந்தது இனிப்புச் சுவை. மண்ணும் தீயும் இணைவது புளிப்புச் சுவை. நீரும் தீயும் சேர்ந்தால் உவர்ப்புச் சுவை. காற்றும் வெளியும் சேர்வது கசப்புச் சுவை, காற்றும் தீயும் சேர்வதால் உருவாகிறது கார்ப்புச் சுவை. மண்ணும் காற்றும் இணைவது துவர்ப்புச் சுவையாகும்.

புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய மூன்று சுவைகளிலும் நெருப்பு இருப்பதால் வெப்பம் தருவன. அது உடல் சூட்டுக்கு காரணியாக விளங்குகிறது. மற்ற மூன்று சுவைகளும் உடல் குளிர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். உடலில் தேவையான அளவு வெப்பமும், தேவையான அளவு குளிர்ச்சியும் இருக்க வேண்டும். இதில் எதுவொன்று அதிகரித்தாலும் பிரச்னைதான். குறைந்தாலும் வியாதிதான்.

புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகளால் ஏற்படும் பலன்கள் - வாதம் சீராகும், கபம் நீங்கும். நா வறட்சியைப் போக்கும். உடல் நலிவைத் குணமாக்கும். ஜீரண சக்தி மேம்படும். வியர்வைச் சுழற்சியை சீராக்கும். உடலின் செயல்திறனை அதிகரிக்கும்.

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் மன மகிழ்ச்சியை தரும். ஆயுளை அதிகரிக்கும். தாம்பத்திய உறவை சிறக்கச் செய்யும். பித்தத்தை போக்கும்.

ஒவ்வொரு சுவையிலும் என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்?

இனிப்பு - பழவகைகள் எல்லாவற்றிலும் இனிப்புச் சுவை உள்ளது. தேன், கரும்பு போன்றவற்றில் மிகச் சுத்தமான இனிப்புச் சுவை கிடைக்கும். அளவாக இனிப்புச் சுவையை உட்கொள்ள வேண்டும். அதிகமாகிவிட்டால் சர்க்கரை நோய், சிறுநீர்ப் பிரச்னைகள் ஏற்படும். 

புளிப்பு - புளி, எலுமிச்சை, மாங்காய், மதுபானம், இறைச்சி போன்றவற்றில் புளிப்புச் சுவை இருக்கும். தேவைக்கு அதிகமாக இந்த சுவை எடுத்துக் கொண்டால் உடல் உறுதியை குலைத்துவிடும். தலைச்சுற்றல் வாந்தி ஏற்படும். சருமத்தில் பிரச்னைகள் ஏற்படும்.

உவர்ப்பு - உப்பு, வெள்ளரிப் பிஞ்சு, இளநீர் போன்றவற்றில் உவர்ப்பு சுவை உள்ளது. அதிகம் உட்கொண்டால் தலைமுடி உதிரும். நா வறட்சி ஏற்படும். அக்கி, குஷ்டம் போன்ற சரும பிரச்னைகளை உருவாக்கும். ரத்தம் கெட்டு, உடலின் அழகை சீர்குலைக்கும். 

கசப்பு - பாகற்காய், அதலக்காய், வேப்பங் காய், பூ, கடுகு, எள் போன்றவற்றில் கசப்புச் சுவை உள்ளது. அதிகம் உட்கொண்டால் உடல் உறுப்புக்கள் பழுதடையும், சோர்வு ஏற்படும், உடல் வலி ஏற்படும்.

கார்ப்பு - மிளகாய், வெங்காயம், கரிலாங்கண்ணி கீரை, இளநீர், மிளகு போன்றவற்றில் இந்தச் சத்து நிறைந்துள்ளது. இயற்கையான வகையில் கிடைக்கும் காரம் உடலுக்கு நல்லது. கார்ப்பை பயன்படுத்தியும் பதப்படுத்தியும் தயாரிக்கப்படும் உணவுகள் கேன்சர் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

துவர்ப்பு - வாழைப்பூ, நெல்லிக்காய், கொட்டைப் பாக்கு, போன்றவற்றில் துவர்ப்பு உள்ளது. அதிகம் உட்கொண்டால் ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதய நோய்கள் வருவதற்கும் சாத்தியத்தை உருவாக்கிவிடும்.

ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மை வாய்ந்தது. ஒருவருக்கு சேரும் உணவு சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கும். அடிப்படையில் ஏன் பிரச்னை ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதனை சீர் செய்துவிட்டாலே வியாதிகள் இன்றி வாழலாம்.

நம்முடைய உடல் ஒரு கடிகார நியதிக்கு உட்பட்டு இயங்குகிறது. சரியான நேரத்தில், சரியான சத்துள்ள சமச்சீர் உணவுகளை மிகச் சரியான அளவு சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு உறங்கி மீண்டும் காலை சரியான நேரத்துக்கு விழித்து எழுந்து இன்னொரு நாளை மற்றொரு நாளை மீண்டும் மீண்டும் வரும் வாழ்நாளின் மொத்த நாட்களையும் இம்முறையில் எதிர்கொண்டால் நீங்கள்  மிகச் சரியாக வாழ்ந்துள்ளீர்கள் என்று அர்த்தம். சரியாக வாழ்பவர்கள் நோய் நொடியின்றி நெடு நாட்கள் வாழ முடியும். சரிதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com