காலம் தவறி இதைச் செய்யாதீர்கள்!

நீங்கள் தினமும் சாப்பிடும் நேரத்தை தள்ளிப் போடுபவரா? பசி எடுக்கும் போது அதைப்
காலம் தவறி இதைச் செய்யாதீர்கள்!

நீங்கள் தினமும் சாப்பிடும் நேரத்தை தள்ளிப் போடுபவரா? பசி எடுக்கும் போது அதைப் பொருட்படுத்தாமல் வேலையை முடித்துவிட்டு அப்புறம் சாப்பிடலாம் என்று நினைப்பவரா? சாப்பிடும் நேரத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தால் உங்கள் உடலுக்குள் இயங்கும் ஒரு கடிகாரம் குழம்பிவிடும், அதுவே உங்களின் ஆரோக்கியத்தை குலைக்கும் ஒரு பிரச்னையாகிவிடும் என்று தெரியுமா? இதைப் பற்றி தெரிந்து கொள்ளவே ஒரு ஆய்வினை மேற்கொண்டனர் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.

சிலருக்கு ஷிஃப்ட் வேலையின் காரணமாக தினமும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது. இன்னும் சிலருக்கு நீண்ட பயணம் அல்லது விமானப் பயணத்துக்குப் பின்னான ஜெட் லாக் பிரச்னைகளால் உணவு சாப்பிடும் நேரம் தவறலாம். ஆனால் இவை உடலில் சில பின் விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்திவிடும். பெரும்பாலான வியாதிகள் உருவாகக் காரணம் காலம் தவறி சாப்பிடுவதால் தான். தவிர உடலுக்கு ஒவ்வாத சிலவகை ஜன்க் உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டால் பசி மந்தமடைந்துவிடும், அதன் பின் சாப்பிடும் எண்ணம் தோன்றாது. எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் மட்டுமே சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

மனித உடல் 24 மணி நேர கணக்குக்கு உட்பட்டு இயங்குகிறது. அந்த உடல் கடிகாரம் மிகத் துல்லியமாக இயங்கும். இதில் நம் மூளைக்குள் ஒரு மாஸ்டர் க்ளாக் ஒன்று உண்டு. அதுவே எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும், இப்போது தூங்கும் நேரம், இது விழிக்கும் பொழுது, இப்போது சாப்பிடும் நேரம், தண்ணீர் அருந்தும் நேரம், உள்ளுறுப்புக்கள் ஒவ்வொன்றும் இயங்கும் நேரம் என்னென்ன என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரத்தை வடிவமைத்துள்ளது. நம் கண்களுக்குத் தெரியாமல் மூளைக்குள் இயங்கும் இந்த கடிகாரத்துக்குத்தான் ’பயாலஜிகல் க்ளாக்’ என்று பெயரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

உடல் நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் உள்ளே இயங்கும் அந்த கடிகாரத்தின் சத்தத்தை நாம் சரியாக கவனித்து அதற்கேற்றபடி நம் பழக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து மணி நேர தாமதமாக உணவு சாப்பிட்டால் அது உள் உறுப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல் சோர்வடைந்துவிடும். தொடர்ந்து ஷிப்ட் நேரம் அல்லது ஜெட் லாக் போன்ற விஷயங்களால் தாறுமாறான நேரத்தில் உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தால் நிச்சயம் உடலின் மெட்டாபாலிஸம் கெட்டுவிடும் என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளரான ஜொனாதன் ஜான்ஸன்.
 
தினமும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவது நல்லது. உடல் அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஆனால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு உணவையும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் அது சர்க்கரை வியாதி, அல்சர், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றுக்கு வழி அமைத்துவிடும் என்கிறார் ஜான்ஸன்.

இந்த ஆய்வுக்கு நல்ல ஆரோக்கியமான இளைஞர்களை அழைத்து 13 நாட்கள் அவர்களை சோதனைக்கு உட்படுத்தினார். ஐந்து மணி நேர இடைவெளியில் மூன்று வேளை உணவு அவர்களுக்குத் தரப்பட்டது. வேளாவேளைக்கு அவர்களுக்கு சாப்பிடக் குடுத்து அவர்கள் ரத்த சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு போன்றவற்றை பரிசோதித்தனர். நல்ல தூக்கம், சரியான இடைவெளியில் உணவு சாப்பிட்டவர்களின் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. அவரிகளின் உடலில் இருந்த மெட்டாபாலிசம் சரியான ஒத்திசைவுடன் செயல்பட்டதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com