வாட்டி வதைக்கும் வெயிலைச் சமாளிக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!

               சுட்டெரிக்கும் வெயில், தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சம், புதிது புதிதாக தலைதூக்கும்
வாட்டி வதைக்கும் வெயிலைச் சமாளிக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!

               
சுட்டெரிக்கும் வெயில், தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சம், புதிது புதிதாக தலைதூக்கும் நோய்கள். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? 

இதைப்பற்றி நம்மிடம் கூறுகிறார், Dr.வர்ஷா, (நியூட்ரீஷியன் எக்ஸ்பர்ட்). 

'ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. உஷ்ணமும், ஈரப்பதமும் எழுபது முதல் எண்பது சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. இனிவரும் நாட்களில் கத்திரி வெயில் எல்லாரையும் ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் அடங்கப்போகிறது. அப்படி இருக்கையில் நம்முடைய தேக ஆரோக்கியத்தில், நாம் அதீதமான அக்கறை செலுத்த வேண்டும். 

இப்பொழுது சிறார்களுக்கு விடுமுறை சமயமாக இருப்பதால், அவர்களுக்கும் சரி, பெற்றவர்களுக்கும் சரி அன்றாட ரொட்டீன்களிலிருந்து சற்று ரிலாக்ஸ்டாக செயல்படுவார்கள். இதனால் உணவு உட்கொள்ளும் நேரம், உறங்கப்போகும் நேரம் எல்லாமே மாறுபடும். இதன் விளைவாக உடல் எடை கூடவும் கூடலாம். எடை குறையவும் குறையலாம். 

மாறுபடும் நேரத்தினால், பசிக்கவில்லை என்று கூறிக்கொண்டு, ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, கண்ட நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆகாரம் உட்கொள்ளும் சமயத்தில், இதைத்தான் உண்ண வேண்டும் என்கிற தீர்மானத்தை மனதில் கொண்டு, ஆரோக்கியமான, பலவிதமான உணவினை உட்கொள்ள வேண்டும். 

சாப்பிடும் சமயத்தில், குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்பதால், டி. வி. நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம். 

உண்ணும் உணவில், தானிய வகைகள், காய்கறிகள், கால்சியம், புரோட்டீன் நிறைந்த உணவுப்பொருட்களை உண்ண வேண்டும். 

சர்க்கரை அதிகம் சேர்த்த பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து,  சமையலில்,  ஒரே  வகை எண்ணெய் உபயோகிப்பதை விடுத்து, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எண்ணெய்யை மாற்றி உபயோகப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு எண்ணெய்யிலும் ஒவ்வொரு சத்துப் பொருள் உள்ளது. இதனால் நம் உடலுக்குத் தேவையான அனைத்து தாதுக்களும் நமக்குக் கிடைக்கும். 

வெளியிடங்களுக்கு, வண்டியில் பிரயாணம் மேற்கொள்பவர்கள், பெரிய மால்களில் என்ன சாமான்கள் வாங்கலாம் என்கிற லிஸ்ட் எடுத்துச் செல்வதைத் தவிர்த்து, என்ன உணவு வகைகளை எடுத்துச் செல்லாம் என்று பட்டியலிட்டுக் கொள்ளலாம். 

வெளியில் வாங்கி சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டு, பேபி காரட், உலர்ந்த பழங்கள், பச்சையாக உண்ணக்கூடிய சிவரிக் கீரை வகைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். 

வெயிலில் போய்விட்டு வந்தாலே ஜில்லென்று ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டும் என்று தான் தோன்றும். நம் உடல், சீரான உஷ்ண நிலையைக் கொண்டது. ஐஸ் வாட்டர் என்பது அதிகமான குளுமையைக் கொண்டது. அதனால் உடலில் எலக்ட்ரோலைட் ( மின்பகுளிகள்) பாலன்சிங் உண்டாவதில் சிரமம் ஏற்படும். ஐஸ் தண்ணி என்றல்லை. சாதாரண தண்ணியைக்கூட வெயிலிலிருந்து வீட்டிற்குள் வந்ததும் குடிக்கக்கூடாது. ரூம் டெம்பரேச்சருக்கு வந்த பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். 

உடலை, குளுமையாக வைத்துக் கொள்ள, மோர், லஸ்ஸி, ரய்தா, பழங்கள் சேர்த்த தயிர் ஆகியவைகளை சாப்பிடலாம். 

இளநீர் ஒரு அருமையான பானம். உடலுக்குத் சர்க்கரைச் சத்து, தேவையான தாது உப்புகள், மின்பகுளிகள் அனைத்தும் கிடைக்கின்றன. புற்று நோய்கள் வராமல் தடுக்க எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கிறது. இயற்கையில், லேசான சர்க்கரைச் சத்துடன் இன்சுலினும் இருப்பதால், நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் உகந்தது. 

நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரி சாப்பிடுவதால் குளுமையாக வைப்பதுடன், மலச்சிக்கல் வராமல் தடுக்கும். 

புதினா, பசியைத்தூண்டும், புத்துணர்ச்சியுடன் வைக்கும். 

சிகப்பு வெங்காயத்தில், 'Quercetin' என்கிற பொருள் இருப்பதால், அலர்ஜி உண்டாவதைத் தடுப்பதோடு, சன் ஸ்ட்ரோக் வராமலும் பாதுகாக்கிறது. 

சிறிது சர்க்கரையும், சிறிது உப்பும், கலந்த எலுமிச்சை சாறு பருகுவதால் உஷ்ணம் குறைவதுடன் புத்துணர்வும் உண்டாகிறது. 

நீர்ச்சத்து நிறைந்த, குளுமை தரக்கூடிய பழங்களான தர்பூசணி,  முலாம் பழம், கிருணிப்பழம் ஆகியவற்றை நறுக்கி விற்பதை வாங்காமல், வீட்டிற்குக் கொண்டு வந்து நறுக்கி சாப்பிட வேண்டும். 

முடிந்தவரை, அதிகமாக சமைக்காமல், பச்சைக்காய்கறிகளைச் சாப்பிட்டால், அவைகளில் இருக்கும் நீர்ச்சத்து உடலில் சேரும்.

மேற்கூறியவற்றை முறையாகக் கடைபிடித்தால் போதும். கோடை உஷ்ணத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.'

என்ன தினமணி டாட் காம் வாசகர்களே, டாக்டரம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டு, தகிக்கும் வெயிலுக்குத் தடா போட்டு விடலாமா? 

நேர்காணல் - மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com