எப்போது சாப்பிடலாம்?

நாம் அன்றாடம் நமது வேலைகளைச் செய்வதற்கு அதாவது இயங்குவதற்கு உடலுக்கு
எப்போது சாப்பிடலாம்?

நாம் அன்றாடம் நமது வேலைகளைச் செய்வதற்கு அதாவது இயங்குவதற்கு உடலுக்கு சக்தி தேவை. எந்த உழைப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தாலும் உடலில் உள்ள உள் உறுப்புக்கள் இயங்குவடஹ்ற்கும் சக்தி தேவை.

இந்த சக்தியை உணவிலிருந்து ஊட்டச் சத்துக்களாகப் பெறுகிறோம். ஜீரணத்தின் இறுதியில் உணவிலிருந்து பெறப்பட்ட ஊட்டச் சத்துகள் ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் கலந்து உடல் முழுக்க சுற்றி உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் சென்றடைகிறது. இதன் மூலம் செல்கள் அனைத்தும் சக்தி பெற்று உடலானது இயங்குத் தன்மையை பெறுகிறது.

நமது அன்றாட வேலைகள் மற்றும் இயக்கங்களின் போது இந்த சக்தி செலவாகிறது. ஒரு கட்டத்தில் சக்தி குறையும் போது உடலின் இயக்கம் குறைகிறது. ஒவ்வொரு செல்களுக்குள்ளும் இயக்க சக்தி குறைகிறது. இதன் காரணமாக நாம் சோர்வடைகிறோம். மீண்டும் இயக்க சக்தி முழுமை அடையச் செய்ய ஊட்டச் சத்துக்கள் தேவை. இந்தத் தேவையை நிறைவு செய்வதற்காகத் தான் உடலில் பசி உணர்வு ஏற்படுகிறது. பசி மூலம் உடலானது உணவைப் பெறுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் உடம்புக்கு சக்தி தேவை. அதற்காக சாப்பிடுகிறோம். சக்தி குறைந்து போய்விட்டால் இயக்கம் குறையும் ஆரோக்கியமும் கெடும். எனவே உடம்பானது பசி மூலமாக உணவைக் கேட்கிறது. அப்படியானால் இந்த உடம்புக்கு என்ன தெரிகிறது? கேட்கத் தெரிகிறது. இந்த உடம்புக்கு என்ன தேவையோ, எது குறைகிறதோ அதைக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளத் தெரிகிறது.

இயக்க சக்தி குறைந்து போனால் பசி மூலமாக உணவை கேட்கிறது. தண்ணீர் வேண்டுமானால் தாகம் மூலமாக தண்ணீரை கேட்கிறது.

உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தேவையென்றால் தூக்கத்தின் மூலமாக உடல் அந்தத் தேவையை நிறைவேற்றுகிறது. உடல் வாழ்வதற்கு, உடல் இயங்குவதற்கு, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, என்ன தேவையோ, எப்போது தேவையோ, அதை பசி மூலமாக , தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் நிறைவேற்றிக் கொள்ளும் ஞானம் மிக்கது நமது உடல். எனவே, எப்போது சாப்பிட வேண்டும் என்றால் உடல் கேட்கும் போதுதான் சாப்பிட வேண்டும். அதாவது பசிக்கும் போதுதான் சாப்பிட வேண்டும்.

எதையும் உடல் கேட்கும்போதுதான் கொடுக்க வேண்டும். பசித்தால் தான் சாப்பிட வேண்டும். தாகம் இருந்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். பசிக்காமல் சாப்பிட்டால் அந்த உணவு வயிற்றில் முழுமையாக ஜீரணமாகாது. சிறு குடலிலும் முழுமையாக ஜீரணமாகாது.

இதனால் சிறுகுடலின் செரிமான இறுதியில் கிடைக்கக்கூடிய சத்துப் பொருள்கள் மேன்மையானதாக இல்லாமல் தரம் குறைந்து இருக்கும். சாப்பிட்ட உணவு மென்மையானதாக இருக்கலாம். ஆனால் பசிக்காமல் சாப்பிட்டதால் அந்த உணவு முழுமையான ஜீரணத்துக்கு உட்படுத்தப்படாமல் ஜீரணத்தின் இறுதியில் கிடைக்கும் சத்துப் பொருள்களின் தரம் குறையும்.

தரம் குறைந்த சத்துப் பொருள்களை உடலானது பயன்படுத்தாமல் கழிவுப் பொருள்களாக நிராகரிக்கிறது. உடலால் நிராகரிக்கப்பட்ட இந்த கழிவுப் பொருள்கள் பல்வேறு வழிகளில் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுப் பொருள்கள் வெளியேற நாம் ஒத்துழைக்காமல் போகும் போது கழிவுப் பொருள்கள் உடல் உறுப்புகளில் தேக்கம் கொள்ளும் போதுதான் நோய் ஏற்படுகிறது.

கழிவுத் தேக்கம்தான் நோய், சாப்பிட்ட உணவில் பயன்பட்டது போக மீதிதான் கழிவுகளாக உருவாகும். இது இயல்பான கழிவுகள். ஆனால் பசிக்காமல் சாப்பிடும் போது உணவின் பெரும்பகுதி கழிவுகளாக மாறுகின்றன. பசிக்கும் போது வயிறானது உணவை ஜீரணிக்க தயார் நிலையில் உள்ளது. உணவுக்கு ஏற்றவாறு செரிமான நீர்களை சுரக்கும் தன்மையில் சுரப்பு உறுப்புகள் இருக்கும்.

ஆனால் பசிக்காமல் சாப்பிடும் போது வயிறானது ஜீரணத்துக்கு தயார் நிலையில் இல்லாததால் அந்த உணவு நிறைய நேரம் வயிற்றில் தங்கும். உணவு நிறைய நேரம் வயிற்றில் தங்கும் போது அதிகமாக புளிப்படையும். வயிற்றில் உணவு புளிப்படைய புளிப்படைய உணவிலுள்ள சத்துப் பொருள்களின் தரம் குறையும். கெட்ட வாயுக்களும் உருவாகும். பசிக்காமல் சாப்பிடும் பழக்கம் தொடர்ந்து நடைபெற்றால் கல்லீரலின் இயற்கையான செயல்பாடு மாறுபடும். இதனால் சிறுகுடலுக்குப் போக வேண்டிய பித்தநீர் வயிற்றுப் பகுதிக்கு வரும்.

பித்தநீர் சிறுகுடலுக்கு மட்டும் தான் பொருத்தமானது. அது இரைப்பைக்கு வரத் தொடங்கும்போது வயிற்றுப் புண்களை ஏற்படுத்துகிறது. பசிக்காமல் சாப்பிடும் பழக்கம் நெடுங்கதையானால் ஏப்பம், வாய்வுத் தொல்லை, நெஞ்சுக்கரிப்பு, உணவுக் குழல் எரிச்சல், வயிற்றுப் புண், மலச்சிக்கல், உடல் சோர்வு என ஒவ்வொரு பிரச்னையாக தொடர்ந்து நாளைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சர்க்கரை, ரத்த அழுத்தம், போன்றவைகளுக்கு வித்திடும்.

எனவே, பசித்த பின்னே புசிக்க வேண்டும். முழுமையான ஆரோக்கியத்தைப் பெற பசித்து சாப்பிடுவது மட்டும் போதாது. அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமானது. எப்படி சாப்பிட வேண்டும் என்றால், உணவில் உள்ள சுவைகள் அனைத்தும் வாயிலேயே ருசிக்கப்பட்டு ஜீரணிக்கப்பட வேண்டும்.

- Hr.இயற்கை குமார் M.Acu,கோவை

செல்பேசி - 9488449933

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com