கொளுத்தி அடிக்கும் வெயிலைச் சமாளிக்க ஒரு டானிக் உள்ளது! அது என்ன தெரியுமா?

வெயில் காலம் வந்தாலே முதல் பிரச்னை அடிக்கடி தாகம் எடுப்பதுதான். கொஞ்ச தூரம் வெயிலில் நடக்கும் போதே மேல் மூச்சு கீழ் மூச்சு 
கொளுத்தி அடிக்கும் வெயிலைச் சமாளிக்க ஒரு டானிக் உள்ளது! அது என்ன தெரியுமா?

வெயில் காலம் வந்தாலே முதல் பிரச்னை அடிக்கடி தாகம் எடுப்பதுதான். கொஞ்ச தூரம் வெயிலில் நடக்கும் போதே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதுடன் வியர்வை ஆறு போல உச்சி முதல் உள்ளங்கால் வரை பிசுபிசுக்கும். வியர்வை வருவது ஒரு பிரச்னையல்ல. வராமல் போனால்தான் பிரச்னை. சரி வெயிலை சமாளிக்க கைவசம் நிறைய டிப்ஸ் இருந்தாலும், மேற்சொன்ன டானிக்கின் விலை மிகவும் குறைவு. எளிதாகக் கிடைக்கக் கூடிய அதன் சத்துக்களும் பலன்களும் மிக அதிகம். அதுதான் எலுமிச்சைப் பழம். 

அனைவருக்கும் இது தெரிந்த விஷயம் தான் என்றாலும் அலட்சியப்படுத்தும் விஷயமும் கூட. ஒரு படத்தில் தங்கவேலு சமையல் குறிப்பு சொல்லித் தருவார். அவர் மனைவி எதை எடுத்தாலும் அதான் எனக்குத் தெரியுமே என்பார். ஆனால் செயல்பாடு எனும் வரும்போது அது எனக்குத் தெரியாது என்று கையை விரிப்பார். அது போலத்தான் நம்மில் பெரும்பாலானோர். தெரியும் ஆனால் தெரியாது என்ற நிலைதான். மேலும் பத்திரிகை இணையம் என எங்கு நோக்கினும் சக்தியின் வடிவம் போல இக்காலகட்டத்தில் தகவல்களின் களஞ்சியம் கொட்டிக் கிடப்பதால் அவற்றில் எது சரி எது தவறு என்று ஆய்வு செய்ய ஒருவருக்கும் நேரம் இருப்பதில்லை. லெமன் பற்றி சில பயனுள்ள டிப்ஸ் தருவதற்குத் தான் இவ்வளவு பெரிய முன்னுரை.

முதலில் லெமன் வாட்டர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பெரிய க்ளாஸில் சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் எலுமிச்சைச் சாறை கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால், செரிமானப் பிரச்னைகள், குமட்டல், வாந்தி போன்றவை குணமாகும். மேலும் அனேக பலன்கள் இந்த எலுமிச்சை வாட்டரில் உள்ளன. அவை

1. உடல் எடை குறையும்

தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள். அது உங்கள் எடையை குறைக்கும். ஜீரண மண்டலத்தை சீர் செய்துவிடும் திறன் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. மேலும் உங்கள் உடலில் சேர்ந்துள்ள டாக்ஸின்கள் எனப்படும் நச்சுக் கழிவுகள் அனைத்தும் லெமன் ஜூஸ் குடிப்பதால் வெளியேறிவிடும். உங்கள் குடல் சுத்தமாவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். ஓர் அற்புத இயற்கை உணவாக இது செயல்படுகிறது. 

2. தாகம் அடங்கும்

வெறும் சுடு நீரை வெறும் வயிற்றில் குடிப்பது சிலருக்குப் பிடிக்காது. லெமன் நறுமணத்துடன் குடிக்கும்போது எளிதாக குடிக்க முடிவதுடன் சுவையும் இருப்பதால் நிச்சயம் குடித்து விடுவீர்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சுவை நரம்புகளை உற்சாகப்படுத்துவதுடன் காலையிலேயே ஊட்டச் சத்துடன் அந்த நாளை நீங்கள் தொடங்க முடியும். தாகம் அடங்குவதுடன் உடலைக் குளிர்ச்சியாக்க இயற்கையான முறை இதுதான்.

3. சருமம் பளபளப்பாகும்

லெமன் போன்று பளபளப்பான சருமம் வேண்டும் என்றால் லெமன் வாட்டர் தினமும் குடித்துவிடுங்கள். எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி மற்றும் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது.  அது சருமத்தின் அடி ஆழம் வரை ஊடுருவி சருமத்தை பொலிவாக்கிவிடும். தோலைப் பளபளப்பாக்கும். உடலுக்கு மெருகூட்டும். தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றும். கரும்புள்ளிகளை மறையச் செய்யும். விரைவில் தோல் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது இது. வைட்டமின் சி அதிகம் உட்கொள்பவர்களுக்கு தோல் சுருக்கம் ஏற்படாது. சருமம் புத்துணர்வுடன் பொலிவாகக் காணப்படும். லெமனின் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் முதுமை அடைவதைத் தள்ளிப் போடும். இன்னொரு டிப்ஸ் - எலுமிச்சம் பழத்தோலை காய வைத்து பொடி செய்து கடலைமாவு, தயிர் சேர்த்து ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தலாம்.

4. சுவாசப் புத்துணர்ச்சி

சிலரின் அருகில் போக முடியாது. காரணம் ஏதோ ஒரு துர்நாற்றம் லேசாக அடிக்கும். அதற்குக் காரணம் வாய் துர்நாற்றத்துடன் இருப்பதுதான். மேலும் வாய் உலர்ந்து போதல் அல்லது பாக்டீரியாவின் வேலையாகவும் இருக்கலாம். தினமும் லெமன் வாட்டர் குடித்தால் சுவாசத்தில் புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் நறுமணம் வீசும். லெமன் ஜூஸ் குடிப்பதால் வாயில் சலைவா நன்றாக ஊறும், நா வறட்சி, உதட்டு வறட்சி போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்பட்டு சுவாசம் புத்துணர்ச்சியுடன் வெளிவரும். வாரத்துக்கு ஒருமுறை எலுமிச்சம் பழச்சாறில் பற்களை சுத்தம் செய்தால் பற்கள் முத்துப்போல பிரகாசிக்கும். உணவுடன் வெங்காயம், பூண்டு அல்லது மீன் சாப்பிட்டால் நிச்சயம் சிறிதளவு லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது. நமக்கு நல்லதோ இல்லையோ அருகில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

5. சிறுநீரகக் கோளாறை சீர்படுத்தும்

எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். வைட்டமின் சி அதிகளவு லெமனில் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். கிட்னி ஸ்டோன் உருவாவதை லெமன் தடுக்கிறது. தினமும் அரை க்ளாஸ் லெமன் சாறு குடித்தால் கால்ஷியம் ஆக்ஸலேட் ஸ்டோன் கிட்னியில் உருவாகுவதை தடுக்கப்படுகிறது.

6. லிவர் செயல்பாடு அதிகரிக்கும்

லிவரில் கொழுப்புச் சத்து சேராமல் பாதுகாக்கிறது லெமன் ஜூஸ். நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் துணை புரிகிறது. லிவர் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒன்று அல்லது இரண்டு க்ளாஸ் லெமன் வாட்டர் குடிப்பது சாலச் சிறந்தது.

7. ரத்தத்தை சுத்தப்படுத்தும்

கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை எனலாம். ரத்தம் சுத்தமானால் அது புத்துணர்ச்சி தருவதுடன் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.

லெமன் நல்லது என்று சொன்னதற்காக தினமும் தண்ணீருக்கு பதிலாக லெமன் வாட்டரை குடித்திவிடாதீர்கள். எதுவும் அளவுக்கு மிஞ்சினால் பிரச்னைதான். தவிர லெமனில் அசிடிக் ஆசிட் உள்ளது. இதிலுள்ள அதிகப்படியான அமிலத்தன்மை பற்களிலுள்ள எனாமலை அழித்து விடக்கூடும். மேலும் அளவுக்கு அதிகமாக லெமன் ஜூஸ் குடித்தால், சில சமயம் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். சிலருக்கு உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும். வீஸிங் போன்ற பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே குடிக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வாமை, அலர்ஜி, தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளும் உபாதைகளும் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com