உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்களுக்கு மனஅழுத்தப் பிரச்னை!

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு மதிப்பீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது
உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்களுக்கு மனஅழுத்தப் பிரச்னை!

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு மதிப்பீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலகெங்கும் 300 மில்லியன் மக்களுக்கு மேல் மன அழுத்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது அந்த அறிக்கை.

உலக ஆரோக்கிய தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மார்ச் 31 அன்று இவ்வறிக்கையை யு.என் ஏஜென்சி வெளியிட்டது,

இந்த எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. உடனடியாக அனைத்து நாடுகளும் உளவியல் சிக்கல்களுக்கான மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், உதவி தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் முன் வரவேண்டும் என்றார் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர் ஜின்ஹுவா.

மன அழுத்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டோரின் சதவிகிதம் 2005 லிருந்து 2015-ஆம் ஆண்டுகள் வரை கணக்கில் எடுத்தால், இது 18 சதவிகிதத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஏப்ரல் 7 உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு மன அழுத்தப் பிரச்னையைப் பற்றி விரிவாக பேச முடிவெடுத்துள்ளது இந்நிறுவனம். இதன் மூலம் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிக் கரங்களைப் பெற வேண்டும் என்பதே ஒருவருட காலமாக இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் குறிக்கோள்.

கைவிடப்பட்ட மனநிலை, யாருமற்ற தனிமை போன்ற பல மனோவியாதிகளுக்கு எளிதில் தீர்வும் சிகிச்சையும் உள்ளது. ஆனால் அது குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில் பெரும்பாலான மக்கள் துன்புறுகின்றனர். ஆரோக்கிய நலவாழ்வைப் பற்றிய விழிப்புணர்வு தான் அவர்களுக்கு நிச்சயம் தேவை.

மன அழுத்தப் பிரச்னையின் தொடர்ச்சியாக பலருக்கு தற்கொலை எண்ணமும் தலைதூக்கிவிடும் அபாயம் உள்ளது.  இது ஒவ்வொரு வருடமும் ஆயிரமாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது என்கிறது ஆய்வறிக்கை.

இந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முதல் கட்டமாக பிரச்னையின் மூலத்தை கண்டறிய வேண்டும். பாரபட்சமும் ஒடுக்குமுறையும் மேலோங்கியிருக்கும் சமூகங்களில் சராசரி வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் சோதனை. எனவே அடிப்படை விஷயமான வாழ்தல் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வழி செய்யவேண்டும்.

’மன அழுத்தம் – வாங்க பேசலாம்’ (Depression: let's talk) இதுவே எங்கள் பிரச்சாரத்தின் வாசகம் என்றார் சேகர் சக்ஸேனா. இவர் உலக சுகாதார நிறுவனத்தின் மன நலப் பிரிவின் இயக்குநராவார்.

மன அழுத்தப் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் ஒருவரை குணமாக்க முதலில் அவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். அவர் சொல்வதை பொறுமையாக காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவரின் நம்பிக்கையை பெற்ற பின்னர் தான் சிகிச்சையை தொடங்க முடியும். தொடர் சிகிச்சைக்குப் பின்னரே அவர்களை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றார் சக்சேஸனா.

பெரும்பாலான நாடுகள் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவை அளிக்க முன்வருதில்லை. அறியாமை மட்டும் இதற்குக் காரணமல்ல, இதற்கென நிதி ஒதுக்க முடியாத பொருளாதார நெருக்கடிகளும்தான் பூதாகரமாக உள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் நிலைப் பெற்ற நாடுகளில் கூட 50 சதவிகித மக்கள் மன அழுத்தப் பிரச்னைக்கான சிகிச்சை கிடைக்கப்பெறாமல் அவதியுறுகிறார்கள் என்பது பெரும் சோகம்.

சராசரியாக, அரசாங்கத்தின் 3 சதவிகித நிதி வளம் மட்டுமே மன நலத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. அதிலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நாடுகளில் இது ஒரு சதவிகிதமும், பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடுகளில் 5 சதவிகிதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com