தாங்க்யூ சொல்லுங்க!

நீங்கள் உங்கள் நட்பு சூழ் உலகை பத்திரமாக உள்ளங்கையில் பொத்தி வைத்திருக்க
தாங்க்யூ சொல்லுங்க!

நீங்கள் உங்கள் நட்பு சூழ் உலகை பத்திரமாக உள்ளங்கையில் பொத்தி வைத்திருக்க ஆசைப்படுகிறீர்களா? நெருக்கமான உறவுகள் எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம். இது மிகவும் சுலபம். இதை சாதிக்க ஒரு வார்த்தை போதும். அன்பின் உறவுகள் யாவும் ஒருபோதும் நம்மை விட்டு நீங்காது. அந்த ஒரு வார்த்தையான மறைவார்த்தை என்னவெனில் ‘நன்றி’. ஆம். மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை என்றென்றும் மறக்காமல் இருப்பதும், அவர்களிடம் அதைப்பற்றி நினைவு கூறி மகிழ்வதும் அவ்வுறவின் சிறப்பை மேம்படுத்தும். தவிர நன்றி என்ற சொல் மகத்தான விளைவுகளை தரும் மந்திரச் சொல். அது நம் மனத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். இதைத் தான் வள்ளுவர் செய்நன்றி அறிதல் எனும் அதிகாரம் முழுவதும் கூறியுள்ளார், சமீபத்திய ஆய்வு ஒன்றும் இதையே கண்டுபிடித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் ரெவ்யூ ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் எனும் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. வாழ்க்கையையும் உறவுநிலைகளையும் மேம்படுத்தும் சக்தி நன்றி உணர்வுக்கு உள்ளது. ஒருவர் செய்த உதவியை மறக்காமல் அவருடன் இணக்கமாக நன்றியுடன் இருக்கையில் நீண்ட காலம் அவ்வுறவு பேணப்படுகிறது என்கிறது அந்த ஆராய்ச்சி.

நம்முடைய உடல் நலத்தை மேம்படுத்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது போல மனநலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நம்மை சார்ந்த அனைத்து உறவுகளிடம் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் இருந்தால் போதும். அது பல நன்மைகளை நமக்கே தெரியாமல் விளைவித்துவிடும். அதுவும் முக்கியமாக காதலர் அல்லது வாழ்க்கைத் துணையிடம் நேசத்துடனான நன்றியுணர்வுடன் வாழ்வது நீண்ட கால பந்தத்துக்கு உறுதி அளிக்கும் விஷயம் என்று ஆணித்தரமாக கூறுகிறது இந்த ஆய்வு.

நன்றியுணர்வு என்பதை எப்படியெல்லாம் எந்தந்த தருணத்தில் வெளிப்படுத்தலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கு ஒருவர் பரிசு அளித்தாலோ, அல்லது உங்களுக்காக ஒரு செயலை செய்து உதவினாலோ, உங்கள் அன்பை நன்றியாகத் தெரிவிப்பீர்கள் தானே. அதை ஒருமுறையாக மட்டும் குறிக்கிக் கொள்ளாமல் அதை உங்கள் மனத்தில் எப்போதும் பதித்துக் கொள்வதும் அந்த நபரை சந்திக்கும் போது அவர் செய்த நன்றியை மறக்காமல் இருப்பது நல்ல குணம். அதான் ஒரு தடவை நன்றி சொல்லிவிட்டோம் இனி அவர் யாரோ நாம் யாரோ என்று நினைத்தால் அது நல்ல உறவு நிலையை வளர்த்தெடுக்காது. எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அதை நேரடியாகவோ அல்லது குறிப்புணர்வாகவோ கூட அவர்களுக்கு உணர்த்தலாம். அல்லது அவரிடம் பிரத்யேகமாகவும் நன்றி சொல்லலாம் சில சமயம் உங்களுக்கு உதவி செய்தவரின் பொதுநலச் செயலையும் தயாள குணத்தையும் மற்றவர்களும் அறிந்து கொள்ளும்படி வெளிப்படையாக அனைவருக்கு மத்தியிலும் கூறலாம். அந்தந்த சூழலுக்கு தகுந்தபடி நாம் நடந்து கொள்வது நல்லது.

நன்றி உணர்வு என்பது வேறு மகிழ்ச்சியாக இருப்பதும் வேறு வேறு. நன்றி உணர்வு என்பது பிறர் நமக்காக ஒரு செயலை செய்யும் போது ஏற்படும் உணர்வு. நமக்காக மற்றவர்கள் செய்த நன்மையை உள்ளார்ந்து நினைத்துப் பார்க்க வேண்டும். பிரதி உபகாரமாக நாம் அதை வாய் வார்த்தையாகவோ அல்லது சமயம் கிடைக்கும் போது சிறு உதவிகள் செய்வதன் மூலமாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கலாம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நமக்கு செய்த ஒரு நல்லது உடனடியாக நினைவுக்கு வருமே, அதுவே நன்றியுணர்வு என்கிறார் அமெரிக்க தன்னார்வு அமைப்பான நேஷனல் கம்யூனிகேஷன் அசோசியேஷனைச் சேர்ந்த ஸ்டீபன் எம்.யோஷிமுரா.  

நன்றியறிவித்தல் என்பது மிகவும் நேர்மறையான ஒரு விஷயம். நாம் ஒருவருக்கு கடமைப்பட்டிருக்கிறோம் எனில் அவர்களிடம் அதை உணர்த்திவிடுவது நல்லது. இது உளவியல்ரீதியாக பல நன்மைகளை இருதரப்புக்கும் ஏற்படுத்தும். மேன்மேலும் பல உதவிகளையும் பெற்றுத் தரும். நன்றி என்ற வார்த்தையை ஒருவரிடம் சொல்லும் போது அவர் உள்ளம் பூரிப்படையும், சொல்லுவோருக்கும் அந்த வார்த்தை போதாது என்றே நினைக்கத் தோன்றும். தருவதும் பெறுவதுமான இந்த நீண்ட வாழ்க்கையில் நன்றி என்பது நீரூற்று. அது குளிர்ச்சியான மனநிலையை உடனடியாக உருவாக்கிவிடும். ஒருவர் மீதான பிரியத்தையும் உறவையும் அழகாக்கும் வழி அவரிடம் தாங்யூ சொல்வதுதான்’ என்கிறார் யோஷிமுரா.
  
நன்றியுணர்வுடன் நடந்து கொள்வது ஒருவருடைய சமூகத் தொடர்புடைமை அதிகரிக்கும். தவிர அவர்களுக்கு உடல் நலப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு மன பாரம் ஏதுமிருக்காது. நன்றாக உறக்கம் வரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நன்றியை தருவதும் பெறுவதும் மனித மனங்களில் நல்விதைகளாகும். உறவு நிலைகளில் அழகான மாற்றங்களுக்கு அது வழிவகுக்கும். அது வாழ்க்கையை திருப்திகரமாக வாழ வைப்பதுடன் எதிர்மறை விஷயங்களை தவிர்க்கும். மன அழுத்தம், பதற்றம், பொறாமை, வேலை சார்ந்த நெருக்கடி எனப் பல பிரச்னைகளையும் நன்றியுணர்வு வென்றெடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com