உங்கள் வாழ்க்கையிலிருந்து ரொமான்ஸ் தொலைந்துவிட்டதா? இதோ தீர்வு!

ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை சுத்த போர். ஆனால் பரபர வாழ்க்கையில் ஆசைகள்
உங்கள் வாழ்க்கையிலிருந்து ரொமான்ஸ் தொலைந்துவிட்டதா? இதோ தீர்வு!

ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை சுத்த போர். ஆனால் பரபர வாழ்க்கையில் ஆசைகள் எல்லாம் வெகு சீக்கிரம் ஆவியாகிவிடுகின்றன. தேவதை மனைவி நார்மலாகத் தென்பட ஆரம்பிக்கும் சமயத்தில் தான் ரொமான்ஸ் மறைந்து ரியாலிட்டி விழித்துக் கொள்கிறது. வேலை, அதை சார்ந்த ஸ்ட்ரெஸ், பதவி உயர்வு, ஐபோன் முதல் ஆவடியில் லேண்ட் வரை வாங்கிக் குவித்த பொருட்களுக்காக கட்ட வேண்டிய தவணை என்று வாழ்க்கை ஒரு சக்கரத்துக்குள் சிக்கிவிடுகிறது. கண் திறந்து மூடுவதற்குள் ஸ்லிம் ப்யூட்டியாக இருந்த மனைவி குழந்தை பெற்ற பின் சற்று எடை கூடி பருமனாகிவிட, ரொமான்ஸ் என்பதெல்லாம் என்றோ நடந்து முடிந்துவிட்ட மத்தாப்பூ நினைவுகளாகி விட்டிருக்கும். ஆனால் உண்மை அப்படியில்ல. உங்கள் மனத்தை கூலாக வைத்திருந்தால், இன்று காதலிக்க ஆரம்பித்த ஒருவரின் மனநிலைக்குச் சென்று உங்கள் துணையை சந்தோஷக் கடலில் ஆழ்த்த முடியும். எனவே ரொமான்ஸ் விஷயங்களுக்குத் தடையாக இருப்பவை என்னவென்று முதலில் பார்க்கலாம். 

1. பாலியல் நாட்டக் குறைவு 

வேலை அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டால் பாலியல் சார்ந்த விஷயங்களில் மனம் லயிக்காது. ஒரு நிறுவனத்தில் ஆள் குறைப்பு செய்தார்கள். நல்ல சம்பளத்தில் உயர் பதவியில் இருந்த ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார். மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட அவருக்கு வீட்டில் மனைவியைப் பார்த்தாலே ஒரே எரிச்சல். அவர் சாதாரணமாக பேசினாலும் கூட இப்ப எதுக்கு என் பக்கத்துல வரே என்று தேவையில்லாமல் கோவப்படுவார். தாம்பத்ய விஷயங்களில் துளியும் ஆர்வம் இல்லாமல் போனார். சில மாதங்கள் கழித்து வேறு வேலை கிடைத்தவுடன் தான் அவரால் பழைய மனநிலைக்கு வர முடிந்தது. இதற்குக் காரணம் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது ஆண்களின் ஹார்மோன் அளவுகள் சீர்குலைந்துவிடும், இது தமனிகளைச் சுருக்கவும் வாய்ப்புள்ளது. தமனிகள் சுருக்கமடைந்து ரத்த ஓட்டம் தடைபட்டால் அது விருப்பன்மைக்கு வழிவகுக்கலாம்.

2. சலிப்பான வாழ்க்கைமுறை

சிலருக்கு ஒரே விதமான வாழ்க்கை முறை சலிப்பாகிவிடும். தினமும் ரொட்டீனாக செய்ததையே செய்து கொண்டிருப்பதும், குடும்பத்தை பாதுகாக்க சம்பாதித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் போதும் அவர்கள் எளிதில் சலிப்படைந்துவிடுவார்கள். தினமும் செய்யும் ஒரு விஷயம் போல ரொமான்ஸ் விஷயங்களையும் அணுகிவிடுவார்கள். அது துணையின் விருப்பம் சார்ந்த ஒன்று என்பது கூட அவர்கள் நினைப்பதில்லை. ரொமான்ஸை கடமை என்று நினைக்கும் கணவர்கள் உள்ளார்கள். இயந்திரத்தனமாக இவ்விஷயங்கள் இருந்தால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது.  

3. நெடுநாள் வியாதிகள்

நெடுநாளான வியாதிகள் அல்லது வலி போன்ற பிரச்னைகள் ஒருவருக்கு இருந்தால் ரொமான்ஸ் பற்றி யோசிக்கவே முடியாதபடி அவர் மனம் மரத்துப் போயிருக்கும். வியாதி குறித்த கவலையும், உயிர் பயமும் வேறெந்த சிந்தனையும் அவரை நெருங்கவிடாது. உடல் நலமடைந்தவுடன் மெள்ள பழைய வாழ்க்கைக்குத் திரும்ப அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். மனைவியுடன் வெளியூர்ப் பயணம்ம அதுவும் மலை வாசஸ்தலத்துக்கு செல்வது பலன் தரும்.

4. டெஸ்டோஸ்டிரோன்

டெஸ்டோஸ்டிரோன் ஆண்களின் விந்தணு உற்பத்தியைத் தூண்டும் முக்கியமான ஹார்மோன். இந்த டெஸ்டோஸ்டிரோனின் அளவு ஏதேனும் காரணத்தால் குறைந்துவிட்டால் (ஆண்ட்ரோஜன் குறைபாடு) ரொமான்ஸ் மூட் பாதிக்கப்படுகிறது. பொதுவாக வயது அதிகரிக்கும் போது இதன் அளவு குறைவது இயல்பு. ஆனாலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாடுவது ரொமான்ஸ் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும். ரத்தத்தில் ஆண்ட்ரோஜன் குறைபாடு (குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு) இருப்பதாகக் கண்டறியப்பட்டால், டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.

5. மருந்துகளின் பக்கவிளைவு

சில உடல் வியாதிகளுக்காக எடுக்கப்பட்ட தொடர் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் மன இறுக்கத்திற்காக உட்கொண்ட மாத்திரைகள் போன்றவை சிலருக்கு பாதகமாக அமைந்துவிடலாம். அது ஹார்மோன் சமன்நிலையை பாதிக்கச் செய்தால் ரொமான்ஸ் என்பது ஒரு எரிச்சலான விஷயமாகிவிடும். 

மேற்சொன்ன பிரச்சனைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. 

தீர்வு

ஒருவர் சந்தோஷமாக இருந்தால் தான் ரொமான்ஸ் மனநிலையில் இருக்க முடியும். சந்தோஷம் என்பதை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆரோக்கியமான உணவு, நல்ல உறக்கம், சமன் நிலை குறையாத மன நிலை, மனக் கட்டுப்பாடு, திருப்தியான வாழ்க்கை இவை இருந்தால் போதும் மகிழ்ச்சி உங்களிடம் எப்போதும் நிலைத்திருக்கும். தவிர உங்கள் துணையின் மீது நீங்காத அன்பும், விட்டுக் கொடுக்காத தன்மையும் இருந்தால் ரொமான்ஸ் என்பதெல்லாம் வார்த்தையாக இருக்காது, அழகான வாழ்க்கையாக இருக்கும். சரிதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com