பதின் வயதில் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்!

சென்னையில் கடும் கோடை முடிந்த நிலையில் சில்லென்று காற்றடிக்கும் ஒரு மாலை.
பதின் வயதில் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்!

சென்னையில் கடும் கோடை முடிந்த நிலையில் சில்லென்று காற்றடிக்கும் ஒரு மாலை. அண்ணாநகர் டவர் பார்க்குக்குச் சென்றிருந்தேன். வெகு நாள் கழித்து ஒரு தோழியை அங்கு சந்தித்ததும் மகிழ்ச்சி ரெட்டிப்பானது. ஆனால் தோழியோ எதையோ பறிகொடுத்தது போன்ற முகபாவத்தில் இருந்தாள். என்னவென்று கேட்கவே மடை திறந்த வெள்ளம் போல் தன் பிரச்னைகளை கொட்டித் தீர்த்தாள்.

'மகளுக்கு பதினைந்து வயது ஆகிறது. எப்போதும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுகிறாள். நன்றாகப் படிப்பதால் கம்யூட்டர் முதல் அவள் கேட்ட லேட்டஸ்ட் செல்போன் வரை வாங்கிக் கொடுத்துள்ளோம். ஆனால் இவள் எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் தூங்கும் வரை காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்கிறாள். தினமும் தூங்க இரவு பதினொன்றுக்கு மேல் ஆகிறது. காலை ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டும், சீக்கிரம் தூங்கும்மா என்றால் அதற்கும் ஒரு கோபம். கொஞ்சம் அதட்டினாலும் முகம் சிவந்துவிடும். பொதுவாகவே சாப்பாடு ரொம்பக் குறைவு. டிபன், ஜூஸ், ஸ்னாக்ஸ் இருந்தால் போதும். நாங்கள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டோம், கோபப்பட்டும் சொல்லிவிட்டோம், ஆனால் எதற்கும் அவள் கேட்பதில்லை. அதற்கு மேல் எதாவது சொல்லிவிட்டால், எனக்கு இந்த வீட்டிலே இருக்கவே பிடிக்கலை என்கிறாள். தாத்தா பாட்டி வீடு அடுத்த ப்ளாட்டில் எப்போதும் அங்கு தான் இருப்பாள். ஆனாலும் லோன்லி என்ற வார்த்தையை அடிக்கடி சொல்கிறாள். கஷ்டமாக இருந்தாலும் இதை அவள் தந்திரமாகத் தான் பயன்படுத்துகிறாள் என்று புரிகிறது. இவளை எப்படி வளர்ப்பது, பேசாமல் வேலையை விட்டுவிடலாமா என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறேன். என்ன பண்றதுன்னே தெரியலை என்று அலுத்துக் கொண்டாள்.

இது அவளுடைய தனிப்பட்ட பிரச்னை மட்டுமில்லை. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். பத்திரிகை வேலையில் சில மன நல மருத்துவர்களை சந்தித்து அவர்களிடம் இது குறித்துப் பேசிய அனுபவத்தின் சாரத்தை மற்றும் எனக்குத் தெரிந்த சிலவற்றையும் அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.  

'அம்மா மகளுக்கு இடையில் எப்போதும் புரிதல் இருக்க வேண்டும். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுக்கான நேரத்தை ஒருபோதும் குறைக்கக் கூடாது. அரை மணி நேரமாக இருந்தாலும் கூட, அதை குவாலிட்டி டைமாக அவர்களுடன் செலவழிக்க வேண்டும். முக்கியமான ஸ்கூல் விஷயங்கள், அவர்களுடைய தோழமைகளைப் பற்றி, டீச்சர்கள் பற்றி பேசி, அவர்களுடைய பிரதானமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். அவர்கள் உங்களிடம் பேசும் போது ஆர்வமாகக் கேட்டு தேவைப்படுமாயின், உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளையும் சொல்லலாம். உங்கள் மகளை ஒரு நாள் பார்க் அல்லது பீச் அழைத்துச் சென்று மனம் விட்டுப் பேசுங்கள். வேலையை விட்டு விடலாமா என்று அவளிடமே அட்வைஸ் கேளுங்கள் (சும்மாவாச்சும்). அவளுக்கு 15 வயது, தன்னைப் பார்த்துக் கொள்வாள், தவிர பாட்டி வீடும் அருகில் உள்ளது என்கிறீர்கள். வேலையின் முக்கியத்துவம் நிச்சயம் அவளுக்கும் தெரிந்திருக்கும். எனவே வேலையை விடச் சொல்ல மாட்டாள்.

பிள்ளைகள் மீது நம்பிக்கை தேவை தான் ஆனால் அதற்காக சுதந்திரம் கொடுக்கிறேன் என்று அவர்களை கண்டும் காணாமல் இருந்துவிடக் கூடாது. அதற்கென்று ஒரேடியாக கண்டிப்புடனும் இருக்க வேண்டாம். பாலன்ஸ் செய்து அவர்கள் போக்கில் போகத் தெரிந்திருக்க வேண்டும். தனி அறையில் கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். ஹாலில் அல்லது டைனிங் ரூமில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் நட்பு வட்டம் எத்தகையது எங்கு போகிறார்கள், ஃபோனில் யாரிடம், எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். இது கண்காணிப்பாக நினைக்க வேண்டாம். இவை குழந்தைகள் மீதான சந்தேகமும் இல்லை. பெற்றோரின் கடமை.

சில குழந்தைகள் கோபத்தை ஒரு ஸ்டைலாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அதை கேஷுவலாக எதிர்கொள்ளுங்கள். தீவிரமான கோபமாக இருந்து பொருட்களை தூக்கி எறியும் அளவிற்கு அவர்கள் போனால் நிச்சயம் கவுன்சிலிங் தேவைப்படும். இந்த வயதில் சாப்பாடு விஷயம் அவர்களுக்கு கசப்பு தான். பிடித்த உணவை, சத்தான ரெசிபிக்களை செய்து கொடுங்கள்.

தாத்தா பாட்டி அருகில் இருப்பதால் நிச்சயம் தனிமையாக அவள் இல்லை உங்களை குற்றவுணர்வுக்கு உட்படுத்த அப்படிச் சொல்லலாம். இத்தகைய எமோஷனல் ப்ளாக்மெயில்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரம்பத்திலேயே இப்பழக்கத்தை முளை விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்று ஒரு பெண் குழந்தை சொல்லும் போது அதை முழுவதும் நிராகரிக்கக் கூடாது. இது வேறு எதாவது பிரச்னையில் க்ளூவாக இருக்கலாம். ஏன் பிடிக்கவில்லை என்ன நடந்தது என்பதை அன்பும் அணுசரணையுடன் கேட்டுப் பாருங்கள், பிரச்னை சாதாரணமாக இருந்தால் இதுக்குப் போயா இவ்வளவு டென்ஷன் என்று அவள் மனம் புண்படும்படி எதுவும் சொல்ல வேண்டாம். நம்முடைய மெச்சூரிட்டி லெவல் வேறு அவர்களின் மெச்சூரிட்டு வேறு என்ற வித்யாசத்தை நாம் உணர வேண்டும். வேறு எதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தால் உடனடியாக அவளிடம் கோபத்தைக் காண்பிக்க வேண்டாம். தெளிவாக யோசித்து அதற்கான தீர்வை தேடித் தாருங்கள். பெற்றோர்களுக்கு சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அதிகம் தேவை.

நம்முடைய குழந்தைகளின் சந்தோஷம் தானே நம்முடைய சந்தோஷமும்?'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com