மன நலம் காப்போம் 6

எனக்கும் என் கணவருக்கும் மூன்று ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.
மன நலம் காப்போம் 6

மனதில் குழப்பம் இருந்தால்..!  எஸ்.வந்தனா பதிலளிக்கிறார்.

எனக்கும் என் கணவருக்கும் மூன்று ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. கண் திருஷ்டி, நல்ல சகுனம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், என் கணவர் எதற்கெடுத்தாலும் சகுனம் பார்க்கிறார். சமைக்கும்போது அடுப்பில் ஏதாவது தீய்ந்து போனால், நல்ல சகுனம் பார்த்து மளிகை சாமான் வாங்கி வரவில்லை என்று திட்டுகிறார். அவருடன் வெளியே எங்கு சென்றாலும் அழுது கொண்டே சென்று அழுதுகொண்டே வீடு திரும்புவதாக அமைகிறது. அவரின் மனநிலையை எப்படி மாற்றுவது?
-சூரியகலா, மதுரை

உங்களுடைய மனநிலை எனக்குப் புரிகிறது. பொதுவாகவே ராகு காலம், நல்ல நேரம், சகுனம், திருஷ்டி போன்றவை நம் கலாசாரத்தில் ஒன்றிணைந்த ஒன்றாக இருக்கிறது. நிறைய நபர்கள் இதை கடைப்பிடிப்பார்கள். இது போன்ற விஷயங்களால் மற்றவர்களுக்காக, சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரச்னை ஏற்படாதவரைக்கும் இவை அனைத்தும் இயல்பான விஷயம். ஆனால், இந்த விஷயங்களால் கூட இருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்படும்போது, இவற்றை சாதாரணமான ஒன்றாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. உங்கள் கணவரைப் பொருத்தவரை நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இவருக்கு சிறுவயதில் இருந்தே இந்த விஷயத்தை கடைப்பிடித்து இருக்கிறாரா? எப்போதிருந்து இதைக் கடைப்பிடிக்கிறார்? இதனால் இவருக்கும் மற்றவர்களுக்கும் படிக்கும் போதோ, வேலை செய்யும் இடத்திலோ பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பதை நீங்கள் அறிய வேண்டும். உங்கள் கணவர் உங்களிடம் மட்டுமே இப்படி நடந்துகொள்கிறாரா அல்லது அனைவரிடமும் இப்படி இருக்கிறாரா என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். முதல் கட்டமாக இவ்விஷயத்தைப் பற்றி அவரிடமே நல்லவிதமாக பேச வேண்டும். இது போன்ற விஷயங்கள் இயல்பாக இருக்கலாம்; சில சமயங்களில் மன நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். ஆதலால் நீங்கள் மனநல ஆலோசகரைப் பார்ப்பது நல்லது. 

என் வயது 48. என் கணவரின் வயது 53. அவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். நானும், எங்கள் இரண்டு குழந்தைகளும் மட்டும் சேலத்தில் வசித்து வருகிறோம். இரவில் உறங்கச் செல்லும்போது, தலையணையில் தலை வைத்தவுடன் ஏதோ ஒரு பாட்டு சத்தம் மெலிதாகக் கேட்கிறது. டக்கென்று எழுந்து உட்கார்ந்தால் பாட்டுச் சத்தம் நிற்கிறது. மீண்டும் படுத்தால் சத்தம் கேட்கிறது. இது எதனால் ஏற்படுகிறது. வீட்டில் ஏதும் அமானுஷ்ய சக்தி இருந்தால் இப்படி நடக்குமா அல்லது இது என் மனப் பிரமையா என்ன காரணமாக இருக்கும்?                             
-வாசகி, சேலம்.

நீங்கள் கூறியுள்ளது என்னவென்றால் உங்கள் கணவர் வெளியூர் செல்லும் போது  மட்டும் பாட்டு கேட்கிறது என்கிறீர்கள், இவற்றிற்கு பல காரணங்கள் உள்ளது. முதல் கட்டமாக பயத்தினால் கூட இதுபோல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இல்லையெனில் தங்களுக்கு இப்பொழுது வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா? (உதாரணமாக: பணப் பிரச்னை அல்லது உடம்பு சம்பந்தப்பட்ட (மாதவிடாய் போன்ற) பிரச்னை ஏதாவது இருக்கிறதா?) இவ்வாறு ஏதாவது இருந்தால் அதை நீங்கள் சரி செய்ய வேண்டும். இவ்விதமான பாட்டு சத்தம் உங்களுக்கு மட்டுமே கேட்கிறதா? குழந்தைகளுக்கும் கேட்கிறதா? எத்தனை நாட்களாக இவ்வாறு உள்ளது என்பதை நீங்கள் தெளிவாக கூறவில்லை. ஆகையால் முதல் கட்டமாக உங்கள் மனதில் ஏதாவது குழப்பம் இருந்தால் இதைப்பற்றி உங்கள் கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இப்படி பகிரும் போது இவ்வாறான பிரச்னைகள் தானாக குறையும். சில நேரங்களில் தூக்கம், உணவு, பிரச்னைகள் காரணமாக இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகவும்.

திருமணமாகி 4 ஆண்டுகள் வரை என் கணவரின் சொந்த வீட்டில் மாமனார் மாமியாருடன் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். கணவரின் உறவினர்கள் என்னைத் தவறாக  விமர்சித்ததால், என் விருப்பத்தைக் கணவர் ஏற்று இருவரும் வாடகை வீடு எடுத்து, தனிக்குடித்தனம் சென்றோம். இப்போது மீண்டும் சொந்த வீட்டிற்கே போகலாம் என்கிறார் கணவர். அங்கே போனால் எனக்கு மதிப்பு இருக்குமா என் மன உளைச்சலை கணவர் புரிந்துகொள்ள மறுக்கிறார். அவருக்கு எப்படிப் புரியவைப்பது?
- வாசகி, திருவண்ணாமலை.

திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தல், புரிந்துக்கொள்ளுதல், பொறுமையுடன் இருத்தல் மிக முக்கியமானதாகும். பொதுவாக கூட்டுக் குடும்பத்தில் இந்த மாதிரியான பிரச்னைகள் வருவது இயல்பு. உங்கள் கணவர் முதலில் உங்களின் உணர்வுகள் மற்றும் கவலையைப் புரிந்து தனிக்குடித்தனம் வந்திருக்கிறார். 

ஆனால் அவருக்கு தற்பொழுது என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவரது பிரச்னைக்கு முக்கியத்துவம் தரவேண்டிய பொறுப்பு உங்களுக்கும் உண்டு. பணப்பிரச்னையா, வேலைக்கு செல்லும் தொலைவு அதிகமா, மறுபடியும் உறவினர்கள் ஏதாவது சொல்கிறார்களா என்பதை முதலில் நீங்கள் அறிய வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் முன்பு நடந்த விஷயத்தைப் பிரச்னைகளை மறக்க வேண்டும். உங்கள் கணவர் ஏன் மறுபடியும் அங்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறார் என்பதை இருவரும் சேர்ந்து மனம் விட்டுப் பேசி முடிவு எடுப்பது நல்ல பயனைத் தரும்.


(பதில்கள் தொடரும்)
- ரவிவர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com