குறை என்பதையே அறிய மாட்டார்கள்!

நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் அவரை குறை
குறை என்பதையே அறிய மாட்டார்கள்!

மன நலம் காப்போம் -8

எஸ்.வந்தனா பதிலளிக்கிறார்


எனக்கு வயது 30, என் மனைவியின் வயது 28. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி எந்த வேலை செய்தாலும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார். சமைத்தல், குளித்தல், வீடு கழுவுதல், துடைத்தல், துணி துவைத்தல், மேக்கப் செய்து வெளியே கிளம்புதல் இப்படி எந்த வேலையாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக நேரம் செலவழிக்கிறார். மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தாமதம் செய்வதாக கூறுகிறார். இதனால், எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் நிறைய பிரச்னைகள் வருகின்றன. இதை எவ்வாறு சரி செய்வது? 
- வாசகர், திருமுல்லைவாயல்.


நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் அவரை குறை சொல்வதால் அவருக்குப் பதற்ற நோய் ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது.

முதலில் நீங்கள் அவரின் பெற்றோரிடம் அவரைப் பற்றிய விஷயங்களை எடுத்துச் சொல்லி, குழந்தை பருவத்திலிருந்தே அவர் இப்படித்தான் இருக்கிறாரா? என்பதை அறிய வேண்டும். சில சமயம் இந்த மாதிரியான குறைபாடுகள் பதற்றத்தினால் ஏற்படும். இதை மன சுழற்சி நோய் (obessive compusive disorder) என்று சொல்வோம். பொதுவாக இந்த மனநிலையில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்த வேலையை திரும்ப திரும்ப செய்வார்கள். அடிக்கடி கை கழுவுவது, வீடு துடைப்பது, குளிப்பது, அதைச் செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இதுதான் அவர்களுடைய பிரச்னை. இதனால், தன்னுடைய அன்றாட செயல்களில் தன்னைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும், வேலை பற்றியும் முக்கியத்துவம் தரமாட்டார்கள். இது ஒரு குறை என்பதையே அவர்கள் அறியவும் மாட்டார்கள் அதுதான் பெரியகுறை. அவர்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால் மட்டும்தான் இக்குறையைக் கண்டு பிடிக்க முடியும். இந்த பிரச்னை வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக குழந்தைப் பருவத்தில் இவ்வித பாதிப்பு சில வேளைகளில் மருத்துவ பிரச்னைகளால் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. மனநல மருத்துவரிடம் சென்று இதற்கான சிகிச்சை முறை, மாத்திரைகள், சைக்கலாஜிகள் சிகிச்சை மூலமாகவும் இதைக் கட்டுப்படுத்த முடியும்.  இது குழந்தை முதல் முதியவர் வரை யாருக்கும் வர வாய்ப்பு உண்டு.

நான் ஒரு தாய், என்னுடைய மகளுக்குத் தற்பொழுது குழந்தை பிறந்து இருக்கிறது. குழந்தை பிறந்து 1 மாதம் ஆகிறது. குழந்தை பிறந்ததிலிருந்து என்னுடைய மகள் அதிகப்படியான கோபம், எரிச்சல், அழுகை, குழந்தையைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருக்கிறாள். நான் என்ன செய்வது என்று தெரிவில்லை!
- சரஸ்வதி, சங்கரன்கோவில்.  

அம்மா, உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது. நீங்கள் இது அவருடைய முதல்  குழந்தையா அல்லது இரண்டாவது குழந்தையா என்று கூறவில்லை. குழந்தை பிறப்பு  என்பது மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணம். பொதுவாக குழந்தை பிறக்கும் போது பயம், கவலை வருவது இயல்பு. குழந்தை பிறப்பின் போது அவர்கள் மனநிலையிலும் உடல் அளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களால் அவர்களின் எண்ணத்திலும், உணர்ச்சியிலும் மாற்றம் ஏற்படுகின்றது. அது அப்படியே தொடர்ந்து 1 அல்லது 2 வாரங்களுக்கு மேல் கோபம், வெறுப்பு, தூக்கமின்மை, அழுகை, அக்கறையின்மை போன்றவை இருக்கலாம். ஆனால், இவை தொடர்ந்து நீடித்தால் அல்லது அன்றாட நடவடிக்கை பாதிக்கப்பட்டால் உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் தரும் மாத்திரைகள் மூலம் மனநிலையில், எண்ணத்தில் நல்ல மாற்றம் வரும். நீங்கள் இதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். இது விரைவில் சரியாகக் கூடிய பிரச்னைதான்.

நான் ஓர் ஆசிரியர். என் வகுப்பில் ஒரு மாணவி எதற்கெடுத்தாலும் அச்சம், பயம்,  கூச்ச சுபாவம், தாழ்வு மனப்பான்மை உடையவளாக இருக்கிறாள். யாரிடமும் பேசமாட்டாள். எப்போதும் உம்மென்று இருப்பாள். நான் கடந்த 3 வருடங்களாக பார்த்து வருகிறேன். படிப்பும் சுமாராகத்தான் வருகிறது. அவளை எப்படித் தேற்றுவது சரி செய்வது?
- சேகர், தருமபுரி

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஓர் ஆசிரியர் தன்னுடைய வகுப்பு மாணவிக்காக இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்வதை எண்ணிப் பெருமையடைகிறேன். தற்பொழுது நிறைய காரணங்களால் மாணவர்கள் பயம் மற்றும் கூச்ச சுபாவத்திற்கு ஆளாகின்றனர். 

மரபு மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக இருக்கலாம். முதலில் நீங்கள் அவளுடைய குடும்ப நிலை, உடன் பிறப்பு, யார் யார் எல்லாம் அவளுடன் இருக்கின்றனர், அவளை எப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். தாங்கள் ஒரு தந்தையைப் போன்று, அவளுடன் ஒரு நல்ல உறவுமுறையில் இருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் அவளிடம் பேச வேண்டும். அவளுடைய படிப்பு, அவளுடைய விருப்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். அவளுக்குப் படிப்பதில் பிரச்னையாக இருக்கலாம் (slow learner) புரிந்து கொள்வதில், எழுதுவதில் அல்லது கணிதப் பாடம் பிரச்னையாக இருக்கலாம். எழுதும்போது நிறைய பிழைகள் இருக்கலாம். 

உதாரணமாக, said என்றால் sed என்றும் what  என்றும் எழுதுவார்கள். நீங்கள் அவளுடைய முந்தைய வகுப்பு படங்களைப் பார்க்க வேண்டும். அதன்பின், அவள் எந்த நிலையில் உள்ளார் என்பதை அவளுடைய பெற்றோரிடம் கூறி உடனடியாக மனநல ஆலோசகரிடம் சென்று நுண்ணறிவுத் திறன் (INTELLIGENCE) மற்றும்  கற்றலில் உள்ள குறைபாடு (SLOW LEARNER) கண்டறிந்து இதற்குப் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். படிப்பில் அவள் முயன்றால்  அடுத்தபடியாக உள்ள அவளுடைய தாழ்வு மனப்பான்மை மற்றும் நடத்தையில் மாற்றம் வரும். 

(பதில்கள் தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com