உங்களுக்கும் இந்த ஃபோபியா இருக்கலாம்! - அச்சத்தின் உச்சம்!! 

அச்ச உணர்வே ஃபோபியா எனப்படுகிறது, நம்மில் பலருக்கும் நம்மையே அறியாமல், இதுதான் ஃபோபியாவா என்று நமக்கே தெரியாமல் நமக்குள் பல பயங்கள், அதாவது இதயத்தையே உறைய வைக்கின்ற அளவிற்கான பயங்கள் மறைந்திருக்கின்றன
உங்களுக்கும் இந்த ஃபோபியா இருக்கலாம்! - அச்சத்தின் உச்சம்!! 

நாம் அனைவருக்கும் அச்ச உணர்வு என்பது பொதுவானது. வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றைப் பார்த்து நாம் பயந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஃபோபியா என்பது பயத்தில் இருந்து சிறிது மாறு பட்டது, அதீதமான அச்ச உணர்வே ஃபோபியா எனப்படுகிறது, நம்மில் பலருக்கும் நம்மையே அறியாமல், இதுதான் ஃபோபியாவா என்று நமக்கே தெரியாமல் நமக்குள் பல பயங்கள், அதாவது இதயத்தையே உறைய வைக்கின்ற அளவிற்கான பயங்கள் மறைந்து கிடக்கின்றன. அதில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.

1. பாதோஃபோபியா (Bathophobia):

ஆழத்தின் மீதுள்ள பயம். ஆழமான நீரில் தான் முழுகுவதைப் போல் நினைத்துப் பார்ப்பதே இவர்களுக்குள் அளவுக்கு மீறிய அச்சத்தை ஏற்படுத்தும். வாழ்நாளில் எப்போதாவது ஆழமான தண்ணீரில் மூழ்கி சுய நினைவை இழந்து உயிர் பிழைத்த அனுபவம் இருந்தால் அவர்களுக்கு இந்த ஃபோபியா இருப்பதற்கான வாய்ப்புண்டு. சில சமயங்களில் இருள் சூழ்ந்த முடிவு தெரியாத அரையைப் பார்ப்பதும் இவர்களுக்கு ஆழத்தை நினைவூட்டி அச்சத்தில் வேர்த்துக் கொட்ட செய்யும்.

2. ஏரோஃபோபியா (Aerophobia):

வானில் பறப்பதற்கு பயம். விமானம், ஹெலிகாப்டர் அல்லது ராட்சத பலூனில் வானில் பறப்பது என்பது இவர்களுக்கு என்றுமே ஒரு கெட்ட கனவுதான். இது உயரத்தினால் வரும் பயமல்ல இவர்களால் 500 அடி உயரமுள்ள மிகப் பெரிய கட்டிடங்களின் உச்சியில் நின்று கீழே எந்தவொரு பயமும் இல்லாமல் பார்க்க முடியும் ஆனால், தரையில் இருந்து 5 அடி உயரத்தில் காற்றில் பறப்பது என்பது இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். 

3. லிகிரோஃபோபியா (Ligyrophobia):

சத்தத்தின் மீதுள்ள பயம். ஃபோனோஃபோபியா அல்லது லிகிரோஃபோபியா என்று சொல்லப்படுவது அதிகமான சத்தமுள்ள ஒலியினால் ஏற்படும் பயம். இவர்களால் சத்தமாக யாராவது பேசினால் கூட அவர்களையும் அறியாமல் இவர்களுக்குள் பயம் ஏற்படும், சிலருக்கு அவர்கள் சத்தமாக பேசுவதே அச்ச உணர்வை ஏற்படுத்தும். உதாரணத்திற்குத் தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெடிச் சத்தத்திற்கு பயந்து சில நாய்கள் பயந்து அழக்கூடச் செய்யும், அதுவே லிகிரோஃபோபியா.

4. சைனோஃபோபியா (Cynophobia):

நாயைக் கண்டால் ஏற்படும் பயம். இது நம்மில் பலருக்கும் இருக்கக் கூடிய ஒரு பயம். நாயைப் பற்றிய நினைப்பு வந்தாலே அச்சம் கொள்வது, தூரத்தில் இருந்தாலும் நாயை பாரத்தால் அப்படியே உரைந்து போவது, உறவினர்கள், நண்பர்கள் என யாராக இருந்தாலும் நாய் வளர்ப்பவர்களைத் தவிர்ப்பது, மேலும் நாயை அடிப்பது அல்லது துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுவது இவை அனைத்தும் இந்த ஃபோபியா இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். மிருகங்கள் மீதுள்ள பயத்தால் ஏற்படும் ஃபோபியாக்களில் 36% பேர் சைனோஃபோபியாவால் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

5. பிடியோஃபோபியா (Pediophobia):
 

பொம்மைகள் மீதுள்ள பயம். நமது ஊரு ‘வா அருகில் வா’ படமாக இருந்தாலும் சரி ஹாலிவுட் ‘அன்னாபெல்’ படமாக இருந்தாலும் சரி பேய் படங்களில் குழந்தைகள் விளையாடும் பொம்மைக்குள் பேய் புகுந்து நம்மையெல்லாம் படாத பாடு படுத்தியிருக்கும். இதனால் ஏற்பட்ட பாதிப்பு ஒரு சிலருக்கு ஆழமாக மனதில் பதிந்து பொம்மைகளைப் பார்த்தாலே நாக்கெல்லாம் வறண்டு, இதயத் துடிப்பு அதிகமாகி, வேர்த்து விறுவிறுத்து போகச் செய்யும். 

6. ஃபாஸ்மோஃபோபியா (Phasmophobia):

பேய் மீதுள்ள பயம். உலகில் உள்ள அனைவருக்கும் பேய் பயம் என்பது மிகவும் பொதுவான ஒன்றுதான். மூடப்பட்ட கதவுகளில் காற்றைப் போல் புகுந்து அந்தரத்தில் பறந்தவாறு, வெள்ளை உடையில் ரத்தக்காயங்களுடன் இருட்டில் திடீர் என்று நம் கண் முன் ஒரு உருவம் வரும் என்று நினைத்துப் பார்ப்பது அனைவரையும் சற்று அதிகமாகவே பீதி அடையத்தான் செய்யும். அதற்காகப் பேய் பயம் உள்ளவர்கள் அனைவரும் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, ஃபோபியா என்பது மிகவும் அதிகமான பயம், தன்னை மறந்து அப்படியே உறைந்து போய் நிற்பது, பேய் பற்றி பேசினாலே பதற்றமடைவது போன்றவையே இதற்கான அறிகுறிகள் ஆகும். 

7. எனோக்லோஃபோபியா (Enochlophobia):

கூட்ட நெரிசல் மீதுள்ள பயம். இந்த ஃபோபியா உள்ளவர்கள் இந்தியாவைல் வாழ்வது என்பது மிகவும் கடினம். திருவிழா, கோவில்கள், கடை வீதிகள், திரையரங்குகள், அரசியல் கூட்டங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள நாடு இந்தியா. ஆனால் இந்த ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டத்தைப் பார்த்தாலே மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள். இந்த ஃபோபியா ஆண்களைவிடப் பெண்களையே அதிகமாகத் தாக்கும். 

8. நெக்டோஃபோபியா (Nyctophobia):

இருட்டின் மீதுள்ள பயம். இது அதிகமாகக் குழந்தைகளிடம் காணப்படும், சிறு வயதிலேயே இந்தப் பயத்தை சரி செய்யாவிட்டால் பெரியவர்கள் ஆனபிறகு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தூங்கும் போது கூட இவர்களால் இருட்டில் இருக்க முடியாது. இருள் நிறைந்த பேய் படங்கள், நைட் கிளப்புகள், இசை விழாக்கள் இவை அனைத்தையும் இவர்களால் கனவில் கூடத் தைரியமாக நினைத்துப் பார்க்க முடியாது. 

9. ஃபிலோஃபோபியா (Philophobia):

காதல் மீதுள்ள பயம். அன்பு, பாசம் மற்றும் காதல் போன்ற உணர்வுகள் இவர்களை அச்சம் அடையச் செய்யும். காதலில் தோல்வி அடைந்தவர்கள், அன்பானவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள், பசத்தின் பெயரால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த ஃபோபியாவின் தாக்கம் இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை நம்புவதற்குத் தயங்குவார்கள்.

10. ஹீமோஃபோபியா (Hemophobia):

ரத்தத்தின் மீதுள்ள பயம். இந்த ஃபோபியா உள்ளவர்கள் ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் அல்லது தங்களது கண் முன்னரே ரத்த வெள்ளத்தில் யாராவது இறந்து கிடப்பதை பார்த்தவர்களை இந்த ஃபோபியா தாக்கும். ரத்தம் மட்டுமின்றி சில சமயங்களில் ரத்தச் சிவப்பு நிறத்தில் எந்தத் திரவத்தை பார்த்தாலும் இவர்களுக்குப் பதட்டம் அதிகரிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com