படிச்சதெல்லாம் பரீட்சையின் போது மறந்து போகிறதா? இதோ ஒரு ஸிம்பிள் ட்ரிக்!

பரீட்சை என்பது நாம் படித்ததையெல்லாம் சரியாக எழுதி மதிப்பெண் வாங்குவது மட்டுமல்ல நம்முடைய கட்டுப்பாட்டின் அடையாளம் அது.
படிச்சதெல்லாம் பரீட்சையின் போது மறந்து போகிறதா? இதோ ஒரு ஸிம்பிள் ட்ரிக்!

படிப்பதை எப்படிப் படித்தால் பரீட்சைக்கு உபயோகமாக இருக்கச் செய்யலாம்? 

பரீட்சை என்பது நாம் படித்ததையெல்லாம் சரியாக எழுதி மதிப்பெண் வாங்குவது மட்டுமல்ல நம்முடைய கட்டுப்பாட்டின் அடையாளம் அது. எந்த அளவிற்கு நாம் ஒழுக்கமாக இருந்து செயல் பட்டு இருக்கிறோம் என்பதிற்கான அளவு கோள் ஆகும். எவ்வாறு நம்முடைய பொறுப்புகளை கையாளுகிறோம் என்பதை பற்றியும் காட்டும். இதற்கு, வயது வரம்பு என்பது இல்லை.

இப்போழுது தான் உயர் கல்வி நிலயங்களில் பரீட்சைகள் முடிந்துள்ளது, மூன்று மாதத்துக்குப் பிறகு மறுபடியும் தயாராக வேண்டும். இதோ, ஒரு மாதத்தில், பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வு வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டிற்கும் தரும் கவனம் மற்றதற்குக் கொடுப்பதில்லை. அதனாலேயே இந்தப் பரீட்சையை எழுதப் போகிறவர்கள் பல வாரங்களுக்குத் திகில் படம் பார்ப்பது போல் இருப்பார்கள். இப்படி இருப்பது தேவையா?

இங்கு வயது வித்தியாசம் இல்லாமல், எப்படிப் படித்தால் பரீட்சைக்கு உபயோகமாக இருக்கச் செய்யலாம் என்பதை விவரிக்கப் போகிறேன். முதலில் வெற்றியை அடையச் செய்ய அதிகமாக விவரிக்கப் படாத சிலவற்றை எடுத்துச் சொல்ல போகிறேன். இதைத் தொடர்ந்து, தெரிந்தவற்றையும், கடைசியில் அன்றாடம் செய்ய வேண்டியவை (ஆனால் பலர் இவற்றை தள்ளிப் போட்டோ, தவிர்த்தோ விடுவார்கள்) பற்றியும் சொல்லப் போகிறேன்.

அம்மா-டீச்சர்-தாத்தா சொன்னதே:

“வாய் விட்டுப் படியுங்கள்” என்றதையே ஆராய்ச்சிகளும் காட்டுகிறது. வாய் விட்டுப் படித்தால், சீக்கிரமாகப் புரியும் என்பதை காட்டி இருக்கிறார்கள். அம்மா-டீச்சர்-தாத்தா சொல்லிக் கொண்டு இருப்பதை ஆராய்ச்சிகளும் உறுதிப் படுத்துகிறது!

எப்படி?: வாய்விட்டுப் படிக்கும்போது, நாம் பாடத்தை பார்க்கச் செய்ககிறோம் அதே நேரம், கேட்டும் கொள்கிறோம். அதனாலேயே நம் கவனம் பாடத்தில் மட்டும் இருக்கும். நன்றாக புரிந்துக் கொள்வோம்.

முக்கியமானதை:
●    வாய்விட்டுப் படித்து, குறித்துக் கொள்ளலாம், அடிக்கோடு போட்டுக் குறிப்புகளை வலியுறுத்தச் செய்யலாம்.
●    படித்து முடித்து, மூன்று நிமிட அவகாசம் விட வேண்டும்.
●    மூன்று நிமிடங்கள் சென்ற பின், பாடத்தைப் பார்க்காமல், ஞாபகப் படுத்தி பார்க்கலாம். இப்படி செய்தால், நாமே கணித்துக் கொள்ளலாம், எந்த அளவிற்குக் கவனம் செலுத்தினோம், புரிந்து இருக்கிறது என்பதை அறிவோம்.
●    ஞாபகத்தைச் சோதனை செய்ய, அதே பாடத்தை நாள் முடிவிலும், மூன்று நாட்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்றும் சோதனை செய்து கொள்ளலாம். ஞாபகம் இருந்தால், நல்ல அறிகுறி!

இப்படிச் செய்தால் நேரம் வீணாகிப் போய்விடும் என்று நினைக்கக் கூடும். இதைப் பின்பற்றி பழக்கமாகியவர்கள் பலனைத் அனுபவித்து இருக்கிறார்! 

கான்ஸெப்ட் மேப் (Concept Map): 

படித்த முக்கியமான ஒரு விஷயத்தை எழுதி அதைத் தொடர்ந்து வரும் தகவல்களை இதனுடன் சேர்த்துக் கொண்டே போகலாம். இதை வரைப்படமாக செய்துக் கொள்ளலாம். தேவைக்கு ஏற்றார் போல், குறிப்புகளை வெவ்வேறு வர்ணத்தில் செய்யலாம். புது விவரங்களை இணைத்துக் கொண்டே இருக்கலாம்.

புதிர் போல், தேடிக் கண்டுபிடித்து சேர்ப்பதால், படிப்பின் மீது பிடிப்பு ஏற்படுத்தும். புதிதாகப் படித்ததை எங்குச் சேறும் என்ற தேடுதலே ஒரு பயிற்சி மையமாகி விடும். புதியதைச் சேர்க்க, பாடங்களை மனதில் பதிய வைக்கும்.  

இவ்வாறு செய்வதால் கற்றுக் கொள்வது பிடித்து விடும். பரீட்சை என்பதற்கு சஞ்சலப் பட மாட்டோம். இது தானே படிப்பின் குறிக்கோள்!

இடைவெளியும் பொறுப்பும்:

படித்துக் கொண்டு இருக்கும் பொழுது, இடைவெளி தேவை. ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பலன்களை காட்டி வருகின்றனர்!

நாற்பது நிமிடம் படிக்க வேண்டும். படித்ததை ஒரு சிறுகுறிப்பாக செய்து கொண்டவுடன் 5-10 நிமிடம் இடைவெளி கொடுத்துக் கொள்ளலாம். அப்போழுது அடுத்ததாகப் படிக்க போவதைக் கவனம் கொடுத்துப் படிப்போம். 

சிட்டிகீ பொறுப்பு:

இடைவெளிக்குப் பிறகு திரும்பி வந்து படிக்க துவங்குவது படிப்பவரின் பொறுப்பாகும். 5-10 நிமிடம் என்பதை நீட்டிக் கொண்டே போனால், அது சாக்கு-போக்கு, இடைவெளி இல்லை. பரீட்சைக்குத் தயாராகும் விதம் நம் பல குணாதிசயங்களைக் காட்டி விடும்!

இடைவெளி எடுத்துக் கொள்வதே, நாம் படித்ததை நன்றாக உள் வாங்கிக் கொள்ளத் தான். இந்தப் பத்து நிமிடங்களில், குறும்செய்தி, டிவி பார்ப்பது, தவிர்க்க வேண்டியவை. 

கலவையாகப் படிப்பது:

தினம் இரண்டோ, மூன்றோ பாடங்களை படித்தால் கவனம் தளராமல் படிக்க ஒரு வழி என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதே போல், ஒரே வகையான பாடங்களாக இருக்கக் கூடாது. வெரைட்டி இருந்தால், ஆர்வம் கூடும். 

“ஓபன் ஸிஸேமீ”:

ஆ, மாயப் கதவு திறந்தது! இதில், உங்களின் கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்: இப்படி எதுவாகவும்  இருக்கலாம்:

❏    “நான் பரீட்சையை நன்றாகச் செய்வேனா?” இதுவாகவும் 
❏    “கடைசி நிமிடத்தில், ஞாபகம் வரவில்லை என்றால்”? இல்லை,
❏    “நான் நினைப்பதை விட பரீட்சை இன்னும் கடினமாக இருந்து விட்டால்?” என்று பல இருக்கலாம்.

ஏன் “ஓபன் ஸிஸேமீ”?: பயம், சந்தேகம் வருவதும், இப்படி எல்லாம் யோசிப்பதும் இயல்பு. என்றாலும், இவையே நம் மூளையில் ஓடிக் கொண்டே இருந்தால், இந்த உணர்வுகளில் நாம் மூழ்கிப் போய் விடுவோம். ஃபெயில் என்றே முடிவெடுத்து விடுவோம். படிக்க முயல மாட்டோம். 

வழி என்ன:

மாணவர்கள், தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது முக்கியம். நம் அனைவருக்கும் இது பொருந்தும்.

நம் உணர்வுகளைப் பற்றி எழுதுவது ஒரு வழியாகும். எழுத, எழுதப் பதட்டத்திலிருந்து விடுபடுவதை உணர முடியும்.

இதைப் பதட்டத்துடனோ, அவசரமாகவோ, அடித்து புடிச்சுன்னு இல்லாமல் எழுத வேண்டும். 

குறிப்பாக
●    “படித்தேன், ஆனால்…” என்பதைப் பூர்த்தி செய்யலாம்.  
●    “நன்றாகச் செய்ய, நான்….” என்பதை விவரிக்கலாம்.
●    “மறந்து போகிறதே” என்னவென்று பகிர்ந்து கொள்ளலாம்.

இப்படி எழுதுவது தான் ஜர்னலிங் (Journaling) என்றது. மெதுவாக, எதிர்மறை எண்ணங்கள் குறைய, கவனம் அதிகரிக்கும். 

உணர்வை குறித்துக் கொள்ள, சரியான ஆரம்பம்

படிப்பதற்கு முன்னால், “இப்பொழுது எனக்கு -----” நாம் உணரும் உணர்வை எழுதி விட வேண்டும். அதைத் தொடர்ந்து மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, வெளியே விட்டுப் படிக்க ஆரம்பித்தால், படிப்பது பதியும். 

பயங்களைக் கணக்கிடுவது: 

பதட்டத்தைக் தருவதை குறித்துக் கொள்ளலாம். நமக்கு, ஆதரவு புரியும் பெற்றோர்களுடனோ, டீச்சருடனோ, ஸ்கூல் கொளன்ஸ்லருடனோ பகிர்ந்து கொள்ளலாம். ஆறுதலும், வழியும் தெரிய, மனதைப் பாடத்தின் மீது செலுத்த மிக ஈஸியாக இருக்கும்.

தெரியும், ஆனால் செய்வதில்லை:

இங்கு, பேசப் படுபவை அனைத்தும் தெரிந்ததே ஆனால் பெரும்பாலும் பின்பற்ற மாட்டோம்!

நாமே நமக்குப் பரீட்சை அமைத்தல்:

நாமாக, நமக்கு வினா-விடை, பரீட்சை அமைத்து-எழுதி-திருத்திக் கொள்ளுதல். நம்முடைய கற்றலை நாமே மேம்ப் படுத்திக் கொள்ள இது ஒரு வழியாகும். நம் வகுப்பு பாட புத்தகங்களுடன் மற்ற வளங்களிலிருந்தும் இப்படி நமக்குப் பரீட்சையை அமைத்துக் கொள்ளலாம். 

ஏன்?: நன்றாகப் புரிந்ததையும், புரியாததையும் தெளிவு படுத்தவே! 

மிக முக்கிய  தேவை: உதவி கேட்பது!

பரீட்சை வரும் வேளையில் சந்தேகங்களை கேட்கச் சங்கடமாக இருக்கலாம். “இவ்வளவு நாளா என்ன செஞ்ச?” என்று கேட்பார்கள். அதற்காகவே அச்சம் கொண்டு, தள்ளிப்போட நேர்ந்திருக்கும். சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொண்டால், பாடமும் புரியும், மதிப்பெண்களும் கூடும்! 

“நாளை, அப்புறமாக படிக்கிறேன்”
தெரியாததைத் தள்ளி போடாமல் படிக்க தேவை.

நமக்குக் கடினம் என்று கருதும் பாடங்களை நாம் சுறுசுறுப்பாக இருக்கும் பொழுது இதை எடுத்துப் படிக்க வேண்டும். புரியாததை புரிந்து கொள்ள அதிக நேரமாகக் கூடும். தாராளமாக நேரத்தைக் கொடுத்தால், அதன் விளைவு நமக்கே நன்மையைச் சேர்க்கும்! இன்னுமா தயக்கம்?

அவ்வப்போது திறனாய்வு: திறனாய்வு செய்து கொள்வது பழக்கமாக வேண்டும்.

படிப்புடன் டிவி, ஃபோன்:

இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் கவனம் சிதரும். அதிலும், படித்துக் கொண்டே டி.வி. பார்ப்பதும், குறும்செய்தி அனுப்புவதும். இந்த நேரங்களில் நெட் இல்லாமல், தோலைப்பேசியை வேறு அறையில் வைத்தால், அதன் கவனத்தை தவிர்க்கலாம். 

அன்றைய தினத்தின் பாடம் படித்து விட்டால்:

அன்றைய பாடத்தை குறித்து வைத்தது போல், முடித்த பின், கொஞ்சம் வேறு ஏதாவது செய்யலாம். இதில் சில தினங்களுக்கு உடற் பயிற்சிக்காக நடப்பது, ஓடுவது, நீச்சல் அடிப்பது என்றெல்லாம் செய்யலாம். சில தினங்கள் டிவி பார்க்கலாம், குடும்பத்தினருடன் ஜோக்ஸ் அடித்து, ஜாலியாக பேசலாம், இப்படி ஏதாவது ஒன்றைச் செய்யலாம்.

அன்றாடம்…

வேளாவேளைக்கு சாப்பிட வேண்டும்.
சுத்தமாக இருப்பது.
குளிப்பது அவசியம்.
எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். 
எட்டு மணி நேரம் தூக்கம் தேவை. நம் மூளை படித்ததை பதிவு செய்ய நேரம் கொடுப்பதால், படித்ததை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். 

பாடம் கற்பது நம்முடைய ஆர்வத்தையும் புரிதலையும் காட்டுகிறது. பரீட்சை என்பது நம் ஆற்றல், சமாளிக்கும் திறன்களை குறிக்கிறது. படிப்பதும், பரீட்சையும் நம் நண்பர்களே!

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com