ரூபாய் நோட்டு அறிவிப்பால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நிதி சார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸியல் பொக்ரான்) போன்றது.
ரூபாய் நோட்டு அறிவிப்பால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்
Updated on
2 min read

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நிதி சார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸியல் பொக்ரான்) போன்றது. இதனால், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்று பிரபல பொருளாதார நிபுணரும் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் சார்பு பொருளாதார அமைப்பான சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக குருமூர்த்தி உள்ளார். தில்லியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதாரத்தில் தேவைக்கு அதிகமான பணம் புழக்கத்தில் இருந்து வந்தது. இதனால்தான் மனை, வீடு, தங்கம் உள்ளிட்டவற்றின் விலை சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. ஹவாலா பணப் பரிமாற்றம், பங்கேற்பு ஆவணங்கள் (பி நோட்ஸ்) மூலம் கருப்புப் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு பங்கு விலைகளும் ஏற்றப்பட்டன.
இப்போதைய மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை மூலம் நமது பொருளாதாரத்தில் இருந்து கருப்புப் பணம் அனைத்தும் முடக்கப்படும். இதனால் நாட்டுக்கு அதிக நன்மை கிடைக்கும்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நிதி சார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸியல் பொக்ரான்) போன்றது. இதனால், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும். பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்திய பிறகுதான் உலகமே நம்மைத் திரும்பிப் பார்த்தது.
மத்திய அரசின் நடவடிக்கை மிகப்பெரிய நிர்வாகச் சீர்கேடு என்றும், இதனால் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் குறையும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். உண்மையில், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அவரது ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேட்டை நீக்குவதுதான் இப்போதைய மத்திய அரசின் நடவடிக்கை. அவர்கள் ஆட்சியில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெருமளவில் வெளியிடப்பட்டன. அப்போதே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ரூபாய் நோட்டு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையில் ரகசியத்தைக் காக்க வேண்டும் என்பதால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சில குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவதால் கருப்புப் பணத்தை பதுக்குவது எளிதாகும் என்று சிலர் கூறுகின்றனர்.
குறுகிய காலத்தில் ரகசியமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் புதிதாக அச்சடிக்க போதிய கால அவகாசம் இல்லை. ரூ.2000 நோட்டையும் அரசு விரைவில் திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசு மேற்கொண்டுள்ளது தேசத்தின் பொருளாதாரத்தையே மறுநிர்மாணம் செய்யும் மிகப்பெரிய முயற்சி. இதுவரை ரூ.14 லட்சம் கோடி பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது. உயர் மதிப்பு நோட்டுகள் அனைத்தும் வங்கிக்கு வந்து விட்டது இத்திட்டத்தின் முதல் வெற்றி.
பலர் தங்கள் கருப்புப் பணத்தை தாமாக முன்வந்து அறிவித்துள்ளனர். இதன் மூலம் ரூ.20,000 முதல் 30,000 கோடி வரை வரி வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜன் தன் கணக்கில் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்தவர்களைக் கண்டறிய மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
டெபிட், கிரெடிட் கார்டுகள், இ-வாலட், நெட் பேங்கிங் போன்றவற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ரொக்கமற்ற பணப்பரிமாற்றத்துக்கு மாறி வருவதால், கணக்கில் வராத பணப்பரிமாற்றம் குறையும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநராக முன்பு இருந்த ரகுராம் ராஜன் அமெரிக்க ஆளுநராகவோ, நிதி அமைப்பின் தலைவராகவோ இருக்கவே தகுதியானவர். ஏனெனில், அவர் அமெரிக்காவை நன்கு புரிந்து கொண்டவர். ஆனால், இந்தியாவைப் புரிந்து கொண்டவரல்ல என்றார் குருமூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com