நிதீஷ்குமார் ஓர் அரசியல் சந்தர்ப்பவாதி: லாலு பிரசாத் தாக்கு
பிகார் முதல்வர் நிதீஷ்குமார் ஓர் அரசியல் சந்தர்ப்பவாதி என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அரசியலில் நிதீஷை விட நான் மூத்தவன். பாட்னா பல்கலைக்கழக மாணவர்களாக நாங்கள் இருந்த காலக்கட்டத்தில் நிதீஷ்குமார் அரசியல் களத்திலேயே இல்லை. அப்போது மாணவர் இயக்கத்தின் வழிகாட்டுதல் குழுவின் பொதுச் செயலாளராக நான் பொறுப்பேற்றபோது, சிவானந்த் ரொசாரியோ அதன் உறுப்பினராக இருந்தார்.
அப்போது பாட்னா பெண்கள் கல்லூரியின் உள்ளே செல்லும் அளவுக்கு நான் பிரபலமாக இருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் நிதீஷைப் பார்க்கவே முடியவில்லை.
நான் நிதீஷை நம்பவில்லை. ஆனால், முலாயம் சிங்தான் மகா கூட்டணியின் தலைவராக நிதீஷைப் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார். இப்போது எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிதீஷ் ஓர் அரசியல் சந்தர்ப்பவாதி ஆவார். அவர் எப்படி மக்களைச் சந்திக்க முடியும்?
கடந்த 1977-இல் பிகாரின் சாப்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக எனக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் வாய்ப்பளித்தார். அத்தேர்தலில் நான் வெற்றி பெற்றேன்.
ஆனால் 1977-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல், 1980-ஆம் ஆண்டில் ஹர்னௌத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் ஆகிய இரண்டிலும் நிதீஷ்குமார் தோல்வியே அடைந்தார். கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எங்களது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியால் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அது இந்திய அரசியல் சாசனத்தையே தரைமட்டமாக்கியதைப் போல் இருந்தது. முன்னதாக, அந்த மசூதிக்கு எதுவும் நேராது என்று 1991-இல் பாஜக மூத்த தலைவர் அத்வானியே கூறியிருந்தார்.
ஜிதன் ராம் மாஞ்சியை நிதீஷ்குமார் 2014-இல் முதல்வராக்கினார். மாஞ்சியை தனது கைப்பாவையாக வைத்திருக்க நிதீஷ் விரும்பினார். அதை ஏற்க மாஞ்சி மறுத்து விட்டார்.
பிகாரில் 2015 வரை நிதீஷ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நபரே கிடையாது. ஆனால், நாங்கள்தான் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினோம். நிதீஷ் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான சரத் யாதவ்தான் வாய்ப்பளித்தார். தற்போது நிதீஷ்குமாரின் உண்மையான முகம் அம்பலமாகி விட்டது. அவர் பாஜகவுடன் இணைந்து சதியில் ஈடுபட்டது தற்போது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபணமாகி விட்டது.
பிகார் துணை முதல்வர் பதவியில் இருந்து என் மகன் தேஜஸ்வி விலகியிருந்தாலும் கூட, மகா கூட்டணியில் இருந்து நிதீஷ் பிரிந்துதான் போயிருப்பார்.
எனது குடும்பத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாலேயே நாங்கள் ஊழலில் ஈடுபட்டோம் என்று அர்த்தமல்ல என்றார் லாலு பிரசாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.