இனி செல்போன் செயலி மூலமாகவே சிம்கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்

செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் - ஆதார் எண் இணைப்பதற்கான நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இனி செல்போன் செயலி மூலமாகவே சிம்கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்
Updated on
2 min read


செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் - ஆதார் எண் இணைப்பதற்கான நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், இணையதளம் வாயிலாகவோ அல்லது ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது செல்போன் செயலி மூலமாகவோ இருந்த இடத்தில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசி பயன்படுத்தி வரும் அனைவரும் தங்கள் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கால அவகாசம் உள்ளது. 

ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவன மையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

எனினும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், நோய்வாய்பட்டிருப்பவர்கள் நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைப்பதில் சிரமம் உள்ளது.

எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தவிர செல்லிடப்பேசி செயலி, இணையதளம் மூலம் ஆதாரை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வசதிகளைப் பயன்படுத்தி ஆதார் எண் பெறும்போது அளித்த செல்லிடப்பேசி எண்ணை மிக எளிதாக இணைக்க முடியும். 

ஏனெனில் ஆதார் எண் பெறும்போது சுமார் 50 கோடி பேர் தங்கள் செல்லிடப்பேசி எண்ணை அளித்துள்ளனர். அவர்கள் அந்த எண்ணை மிக எளிதாக ஆதாருடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி செல்போனில் பதிவிறக்கம் செய்யப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதாரணமாக வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எளிதாக ஆதார் எண்ணை இணைத்து விடலாம்.

செல்போன் செயலியில் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்?
எந்த செல்போன் நிறுவனத்தின் சிம்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமோ அந்த நிறுவனத்தின் செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அந்த செயலியை திறந்து, அதில்  KYC என்ற வசதியை க்ளிக் செய்து, அதில் 10 இலக்கங்கள் கொண்ட உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்யுங்கள். தொடர்ந்து உங்கள் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி என்பது, நீங்கள் ஆதார் அட்டை பெறும் போது அதில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத்தான் அனுப்பி வைக்கப்படும்.

செயலியில் அளிக்கப்படும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடிபியை பதிவு செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஓடிபியை பதிவு செய்ததும், உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும். அதற்கான குறுந்தகவலும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com