காங்கிரஸ் தலைவராக ராகுல் கடந்து வந்த பாதை...

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல், கடந்து வந்த பாதை....
காங்கிரஸ் தலைவராக ராகுல் கடந்து வந்த பாதை...

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல், திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார். சோனியாவுக்கு பிறகு நேரு குடும்பத்தில் இருந்து வரும் 6-ஆவது காங்கிரஸ் தலைவராக ராகுல் உள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி அப்போதைய இந்திய பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ், படுகொலைக்குப் பின்னர் 1997-ம் ஆண்டு சோனியா, தீவிர அரசியலில் இறங்கினார். இதையடுத்து 1998-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

இதன்பின்னர் சமீபகாலங்களில் சோனியாவின் உடல்நிலையில் கோளாறுகள் ஏற்பட்டு வந்த காரணத்தால், அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்ற கேள்வி கட்சியினரிடையே நிலவியது. இதில், சோனியா மகன் ராகுல் மற்றும் மகள் பிரியங்கா இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இதில், இந்திராவைப் போன்ற தோற்றம் கொண்டதால் காங்கிரஸ் கட்சியின் பலர் அச்சமயம் பிரியங்காவுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

இந்நிலையில், அமேதியில் நடந்த தேர்தலின் மூலம் கடந்த 2004-ம் ஆண்டு மே மாதம் ராகுல், தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், அவரின் தலைமைப் பண்பு குறித்து அவ்வப்போது கேள்வி எழுந்தது.

இதன்பின்னர் 2007-ல் நடந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்காக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் 403 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் காங்கிரஸ் வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

இதையடுத்து 2007ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக ராகுல் பொறுப்பேற்றுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் இளைஞர் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் மாணவர் அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் ராகுலை இந்தியாவின் அடுத்த பிரதமராக நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். குறிப்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, இதனை முதன்முதலில் முன்மொழிந்தார். அச்சமயம் இந்திய பிரதமராக மன்மோகன் சிங் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மேலும், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 21-ல் வெற்றிபெற்றது.

இந்நிலையில், 2013-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி காங்கிரஸ் கட்சியில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. பல மூத்த தலைவர்களின் அறிவுரைப்படி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக நிலவியது.

ராகுல், காங்கிரஸின் துணைத் தலைவரானதும், இந்தியாவின் மாற்றத்துக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கட்சியினருக்கு அரைகூவல் விடுத்தார். கட்சியின் முக்கிய முடிவுகளை எந்த தயக்கமும் இன்றி மேற்கொண்டார்.

இதனிடையே, 2014 நாடளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்று மாபெரும் பின்னடைவைச் சந்தித்து. கடந்த 2009-ல் 206 இடங்களில் பெற்ற வெற்றியைக் காட்டிலும் இது மிக குறைவுதான்.

இதற்கடுத்த நிகழ்வுகளிலும் காங்கிரஸ் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அக்கட்சி ஆட்சி செய்த முக்கிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. இத்தனை சிக்கல்களுக்கு இடையில் தற்போது ராகுல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். 

தற்போது நடந்து முடிந்த ஹிமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்களின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே 132 ஆண்டு வரலாறு கொண்ட இக்கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையப்போகிறது. இதில் ராகுல் எவ்வாறு பயணிப்பார், கட்சி நடவடிக்கைகளில் அவரின் நிலை என அனைத்தையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

''இனி வெற்றி மட்டும்தான். குஜராத்தில் காங்கிரஸ் தருப்புமுனையை ஏற்படுத்தும்'' என்று காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ராகுல் முழங்கியதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com