குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி பொது வேட்பாளர் நாளை அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்? என்பது செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி பொது வேட்பாளர் நாளை அறிவிப்பு
Published on
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்? என்பது செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைய குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10}ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவர் தொடர்ந்து இருமுறை அப்பதவியை வகித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை நடத்துகிறார். இதில் பாஜக கூட்டணியில் இல்லாத 18 கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது மட்டுமல்லாது, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆளும் கட்சியை எதிர்கொள்வது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது.
அண்மையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து தங்களுக்கு எதிரானவர்கள் மீது மத்திய அரசு சிபிஐ}யை ஏவி விடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்த விவகாரமும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரைப் பொறுத்தவரையில் இதுவரை எந்தக் கட்சியும் யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்துக்குப் பிறகுதான் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பது குறித்து தெரியவரும்.
கடந்த 2012}ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீது அன்சாரி 490 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் பெற்றார். 2007}ஆம் ஆண்டு தேர்தலில் அன்சாரி 455 வாக்குகளைப் பெற்றார். பாஜக கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 222 வாக்குகள் மட்டும் கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com