பாஜக ஆதரவுடன் முதல்வராகிறார் நிதீஷ்?

பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதன் மூலம் பிகாரில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
பாஜக ஆதரவுடன் முதல்வராகிறார் நிதீஷ்?

பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதன் மூலம் பிகாரில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
பாட்னாவில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது. அவரது அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் இடம் பெறுவார்கள் என்றும், பிகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடிக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் தெரிகிறது.
முறிந்தது மகா கூட்டணி: முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் பிகார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டுமென்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது. ஆனால், அவர் பதவி விலக மாட்டார் என்று லாலு திட்டவட்டமாக அறிவித்தார். இதையடுத்து, நிதீஷ் குமார் புதன்கிழமை மாலை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் பிகாரில் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் - லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைத்த மகா கூட்டணி முடிவுக்கு வந்தது.
பாஜக ஆதரவு: இதையடுத்து, உடனடியாக நிதீஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்து ஆளுநருக்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. பிகார் மாநில பாஜக தலைவர் நித்யானந்த் ராய், கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இந்த ஆதரவுக் கடிதத்தை அளித்தனர்.
இது தொடர்பாக சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களும், பாஜக கூட்டணித் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து நிதீஷ் குமார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள். இது தொடர்பாக ஆளுநரிடம் பாஜகவின்ஆதரவுக் கடிதத்தை அளித்துள்ளோம். புதிய அரசில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என்றார்.
நீங்கள் துணை முதல்வராகப் பொறுப்பேற்பீர்களா? என்ற கேள்விக்கு, இது தொடர்பாக பாஜக மத்தியத் தலைமைதான் முடிவெடுக்கும் என்றார்.
மீண்டும் முதல்வர்: நிதீஷ் குமாருக்கு பாஜக ஆதரவு அளித்ததை அடுத்து ராஜிநாமா செய்த சில மணி நேரத்திலேயே அவர் மீண்டும் முதல்வராவது உறுதியானது. இதையடுத்து, பதவியேற்பு நிகழ்ச்சி குறித்து முடிவும் அறிவிக்கப்பட்டது.
பிகார் சட்டப் பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இப்போது 71 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பாஜக ஆதரவு அளித்தால் 124 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை கிடைக்கும்.
இது தவிர பாஜக கூட்டணியில் உள்ள பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். இதுதவிர 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் பிகாரில் உள்ளனர்.
முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மோடி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதை அடுத்து பாஜகவுடனான 17 ஆண்டு கூட்டணியை நிதீஷ் முறித்துக் கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
திட்டமிட்ட நாடகம்: லாலு குற்றச்சாட்டு


முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்தது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நாடகம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
நிதீஷ் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டார். பாஜகவின் ஆதரவைப் பெற மாட்டேன் என்று அவர் மறுத்தது இல்லை. நிதீஷ், மோடியுடன் நெருக்கமாகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
1991-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலையில் நிதீஷ் குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது. தேர்தல் வேட்புமனுவில் இதனை நிதீஷ் குமார் ஒப்புக் கொண்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டைவிட கொலைக் குற்றச்சாட்டு மோசமானது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வழக்கு விசாரணையை நிதீஷ் நிறுத்தி வைத்துள்ளார்.
அவர் பாஜகவுடன் ஐக்கியமாவார் என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். நிதீஷ் ராஜிநாமா செய்தவுடன் மோடி அதனைப் பாராட்டுகிறார். நிதீஷின் ராஜிநாமா நாடகம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது என்றார் லாலு.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது முதல்வர் பதவியில் இருந்து விலகும் தனது முடிவை நிதீஷ் அறிவித்தார். எம்எல்ஏக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து ஆளுநரிடம் பதவி விலகல் கடித்தை நிதீஷ் அளித்தார்.
பிகாரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைத்த மகா கூட்டணி பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது.
நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதே நேரத்தில் கூட்டணியில் அதிகபட்சமாக 80 இடங்களில் வென்ற லாலுவின் கட்சிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். லாலுவின் மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுகாதாரத் துறை அமைச்சரானார்.
மோடி வரவேற்பு
நிதீஷ் குமாரின் முடிவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் கருத்துத் தெரிவித்தார்.
அதில், ஊழலுக்கு எதிரான போரில் இணைந்ததற்காக நிதீஷ் குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நேர்மையான முடிவுக்கு இந்த தேசம் துணை நிற்கும். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
பின்னணி
லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரயில்வே துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக புதிய வழக்குகளை சிபிஐ அண்மையில் பதிவு செய்தது.
ரயில்வே ஹோட்டல் டெண்டர்களை அளிப்பதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், பிகார் துணை முதல்வராக உள்ள தேஜஸ்வி யாதவ் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்பு ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது இந்த முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இது நிதீஷ் குமாருக்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பாட்னாவில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக் கூட்டம் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் ஆர்ஜேடி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை மக்கள் மத்தியில் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், தேஜஸ்வி பதவி விலகமாட்டார் என்று ஆர்ஜேடி திட்டவட்டமாக கூறிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com