மது அருந்தும் கணவரை அடிக்க மணமகளுக்கு "பேட்' பரிசளித்து அசத்திய அமைச்சர்!

கணவன்(மணமகன்) மது அருந்தினால், அவரை அடிப்பதற்காக, மனைவிகளுக்கு (மணமகள்) கிரிக்கெட் மட்டையை பரிசளித்திருக்கிறார்
மது அருந்தும் கணவரை அடிக்க மணமகளுக்கு "பேட்' பரிசளித்து அசத்திய அமைச்சர்!

போபால்: கணவன்(மணமகன்) மது அருந்தினால், அவரை அடிப்பதற்காக, மனைவிகளுக்கு (மணமகள்) கிரிக்கெட் மட்டையை பரிசளித்திருக்கிறார் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கோபால் பார்கவா.

இந்த ருசிகர சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் சனிக்கிழமை அம்மாநில அரசின் சார்பில் கர்ஹகோடா நகரில் சுமார் 700 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. 700 ஜோடிகளுக்கு மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபால் பார்கவா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில், ” குடிப்பவர்களை அடிப்பதற்காக, போலீஸ் தலையிடக்கூடாது” என எழுதப்பட்ட கிரிக்கெட் மட்டையை மணப்பெண்களுக்கு கிரிக்கெட் மட்டையை அவர் பரிசளித்தார்.

மது அருந்திவிட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது இந்த மட்டைதான் பேச வேண்டும். குடும்பத் தலைவன் மது குடித்தால் அவன் வன்முறையாளனாக மாற வாய்ப்புள்ளது. எனவே, மனைவிகள் இந்த மட்டையைக் கொண்டு அவனைத் தடுக்க வேண்டும்; இந்த விவகாரத்தில் காவல் துறை தலையிடாது என்று மணப்பெண்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், கிராமப்புறங்களுக்கு நான் செல்லும்போது, அங்கு வசிக்கும் பெண்கள், தங்கள் கணவரின் குடிப் பழக்கத்தைக் கூறி புலம்பியிருக்கிறார்கள். மேலும், தாங்கள் சம்பாதிக்கும் சொற்பத் தொகையையும், குடிப்பதற்காக கணவர் பறித்துச் சென்றுவிடுவதாகவும் அவர்கள் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். கணவரால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், என்னை சந்தித்த பெண் ஒருவர், தனது கணவர் மது அருந்துவதைத் தடுத்து நிறுத்த அவரை அடிக்கலாமா? என்று கேட்டார். அப்போதுதான், மணப்பெண்களுக்கு கிரிக்கெட் மட்டையை பரிசளிக்கும் எண்ணம் எனக்கு உதித்தது. எனவே, மதுப் பழக்கத்துக்கு அடிமையான கணவர்களின் பிடியில் பெண்களைக் காப்பாற்றுவதற்காக, உடனடியாக, 10,000 கிரிக்கெட் மட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்தேன். சமூக மாற்றத்துக்கான முதல் படி இதுவாகும்.

மதுபானம் பற்றிய அச்சுறுத்தலை சமாளிக்கத் தேவைப்படும் சமூக மாற்றத்தை கொண்டு வருவது குறித்த செயல்களுக்கு பாராட்டுகள் தெரிவித்த பார்கவா, மதுகுடிக்கும் பழக்கத்தால் உருவாகும் பிரச்னைகளை அரசோ, காவல் துறையோ தீர்க்க முடியாது. எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு முடிவுகட்டுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் என்று கூறினார்.

மதுகுடிப்பதால் ஏற்படும் தீமை குறித்து முதலில் தங்கள் கணவருடன் மனைவிகள் பேச வேண்டும். அப்படி பேசியும் பலன் கிடைக்கவில்லை என்றால், கிரிக்கெட் மட்டையை 'மோக்ரி' பேசுவதை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சட்டவிரோத மது விற்பனையானது மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெரிய பிரச்சினை. "மதுபானத்திற்கு எதிராக மாநிலம் ஒரு எழுச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது, ஆனால், இந்த விஷயத்தில் மக்கள் படித்திருக்க வேண்டும், தடை விதிக்கப்படுவதற்கு முன் இது அவசியம்" என்று கூறிய அமைச்சர் புதிய கிராமத்தை உருவாக்கி, கிராமங்களில் உள்ள அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்கவும், குழந்தைகளுக்கு சரியான கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் குஜராத், பீகார், மிசோரம் மாநிலங்களில் முழுமையான மதுவிலக்கும், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் படிப்படியான மதுவிலக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com