கும்ப மேளா, திருச்சூர் பூரம் விழாக்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல்

இந்தியாவில் கும்பமேளா, திருச்சூர் பூரம் போன்ற மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் திருவிழாக்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்போவதாக இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு திடீர்

இந்தியாவில் கும்பமேளா, திருச்சூர் பூரம் போன்ற மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் திருவிழாக்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்போவதாக இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது பயங்கரவாதி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இராக், சிரியா, லிபியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் சிலருக்கு குரல் பதிவு ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. 10 நிமிடம் வரை நீடிக்கும் அந்த குரல் பதிவில் பேசியிருக்கும் பயங்கரவாதி, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடத்தப்பட்டது போன்று, இந்தியாவின் பல இடங்களில் தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், கும்ப மேளா, திருச்சூர் பூரம் போன்ற மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திருவிழாக்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த குரல் பதிவில் பேசியிருக்கும் பயங்கரவாதி கூறுகையில், 'உணவுகளில் விஷத்தை வைத்து கொலை செய்ய வேண்டும்; லாரிகளை மோதி தாக்குதல் நடத்த வேண்டும். திருச்சூர் பூரம் அல்லது மகா கும்ப மேளாவில் கலந்து கொள்வோர்களை கொல்ல வேண்டும். 
உலகின் பல பகுதிகளில் ஐஎஸ் முஜாஹிதீன்கள், இதைத்தான் செய்து வருகின்றனர். லாஸ் வேகாஸ் நகரில் நமது ஆதரவாளர்களில் ஒருவர், இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தி பலரை கொன்றார். ஆதலால், ரயிலையாவது தடம்புரளச் செய்ய நீங்கள் முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், கத்தியை பயன்படுத்தியாவது தாக்குதல் நடத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், 'ஆப்கானிஸ்தானில் இருந்து குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேசியிருப்பவர், ஐஎஸ் அமைப்பில் அண்மையில் சேர்ந்த கேரளம் மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ரஷித் அப்துல்லாவாக இருக்கலாம் என்று நம்புகிறோம். ரஷித் அப்துல்லாவுக்கு எதிராக என்ஐஏ அமைப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிரப்பித்துள்ளது' என்றன.
இந்த குரல் பதிவு தொடர்பாக கேரள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 குரல் பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் இயக்குநர் வி. பாலசந்திரன் கூறும்போது, இது மிகவும் கவலைதரும் விஷயமாகும். அந்த அமைப்பினர் தங்களது சண்டையை ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com