ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார்: சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்பார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார்: சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்பார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரம்பரிய தேசியக் கட்சியான காங்கிரஸ், இனி ராகுல் காந்தி தலைமையில் பயணிக்கப் போவது ஊர்ஜிதமாகியுள்ளது.
விரைவில் கட்சியின் செயற்குழு கூடி அதிகாரப்பூர்வமாக அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்குப் பிறகு இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி தொடர் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. பல்வேறு சட்டப் பேரவைத் தேர்தல்களில் அக்கட்சி அடைந்த தோல்விகளால் தொண்டர்கள் மத்தியிலும் உத்வேகம் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கட்சியை அமைப்புரீதியாக வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் உள்கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தலையும் காங்கிரஸ் நடத்தவுள்ளது. இந்த சூழலில் சோனியாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கட்சித் தலைவர் பொறுப்பை ராகுலுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸாரிடையே எழுந்து வந்தது.
இதுதொடர்பான ஊகச் செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சோனியா காந்தி வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது ராகுல் காந்திக்கு கட்சித் தலைவர் பொறுப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சோனியா அளித்த பதில்:
பல ஆண்டுகளாகவே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது அந்த நிகழ்வு (ராகுல் தலைமை) நடக்கப் போகிறது என்று புன்னகையுடன் பதிலளித்தார் சோனியா. 
விரைவில் நடைபெற உள்ள ஹிமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. மேலும், நாடு முழுவதும் இழந்த செல்வாக்கை மீட்டெக்க வேண்டிய கட்டாயமும் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சவாலான சூழலில்தான் கட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் ஏற்க உள்ளார். அதை திறம்பட வகித்து காங்கிரûஸ மீண்டும் அரியணையில் அவர் அமரவைப்பாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com