இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டும் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்!

இந்திய அளவில் உள்ள மாநில கட்சிகளில் அதிகளவில் வருவாய் ஈட்டும் கட்சிகளின் பட்டியலில் திமுக முதலிடம் பிடித்தது.
இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டும் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்!

இந்திய அளிவில் உள்ள மாநில கட்சிகளின் வரவு-செலவு தொடர்பான விவரங்களை தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. Association of Democratic Reforms (ADR) என்ற அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை விவரம் பின்வருமாறு:

இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை மொத்தம் 47-ஆக உள்ளது. இதில் 32 மாநில கட்சிகள் மட்டுமே 2015-16 நிதியாண்டில் முறையான கணக்கு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

மீதமுள்ள 15 மாநில கட்சிகளும் இந்த நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியும், பீகாரைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் அடங்கும்.

வருவாய்

முறையான வருவாய் கணக்கு தாக்கல் செய்த மீதமுள்ள 32 மாநில கட்சிகளில் அதிகளவில் வருவாய் ஈட்டும் கட்சிகளின் பட்டியலில் திமுக முதலிடம் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் 2-ஆம் இடத்தையும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு திராவிட கட்சியான அஇஅதிமுக பெற்றுள்ளது. 3-ஆவது இடத்தை ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி பிடித்துள்ளது.

கடந்த 2015-16 நிதியாண்டின் நிலவரப்படி தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ரூ. 77.63 கோடி வருவாய் ஏற்பட்டுள்ளது. இது அந்த நிதியாண்டில் மட்டும் மொத்தமுள்ள 32 மாநில கட்சிகளின் வருவாய் கணக்கில் 35.05 சதவீதம் ஆகும்.

2-ஆம் இடத்தில் உள்ள அதிமுக அதே நிதியாண்டில் ரூ. 54.93 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்து 3-ஆம் இடத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ரூ. 15.97 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.

இதன்மூலம் முதல் மூன்று கட்சிகளின் ஒரு நிதியாண்டுக்கான வருவாய் ரூ. 148.54 கோடி ஆகும். இது மொத்தமுள்ள 32 மாநில கட்சிகளின் வருவாய் மதிப்பில் 67 சதவீதம் ஆகும்.

2015-16 நிதியாண்டில் மொத்தமுள்ள 32 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ. 221.48 கோடி ஆகும். இதில் ரூ. 110 கோடி செலவிடப்படாமல் உள்ளது. இது மொத்த வருவாயில் 49 சதவீதம் ஆகும்.

செலவீனம்

இந்நிலையில், வருவாய்த் தொகையில் அதிகளவில் செலவு செய்யும் கட்சிகளின் பட்டியலில் ஐக்கிய ஜனதா தளம் முதலிடம் பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியும், 3-ஆவது இடத்தை ஆம் ஆத்மி கட்சியும் பிடித்துள்ளது.

இதன் அடிப்படையில் 2015-16 நிதியாண்டின் அடிப்படையில் தங்களது வருவாய்த் தொகையில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் ரூ. 23.46 கோடியும், தெலுங்கு தேசம் ரூ. 13.10 கோடியும், ஆம் ஆத்மி ரூ. 11.09 கோடியும் செலவு செய்துள்ளன.

இந்த செலவுகளில் ஜக்கிய ஜனதா தளம் ரூ. 14.03 கோடியை தேர்தலுக்காக செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் ரூ. 8.93 கோடியை நிர்வாகம் மற்றும் இதர
செலவுகளுக்கு பயன்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி ரூ. 5.116 கோடியை பிரசாரங்களுக்காக செலவு செய்துள்ளது.

மேலும் தங்கள் வருவாயை விட 14 மாநில கட்சிகள் அதிகளவில் செலவு செய்துள்ளன. அவற்றில் ஜார்கண்ட் விகாஸ் மோர்சா-ப்ரஜாதன்த்ரிக், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக்தளம் உள்ளிட்டவை வரவை விட 200 சதவீதம் கூடுதலாக செலவு செய்துள்ளது.

இருப்பினும் இக்காலகட்டத்தில் திமுக, அதிமுக மற்றும் அனைத்து இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஆகிய கட்சிகள் தங்களது வருவாயில் இருந்து 80 சதவீதத்துக்கும் மேல் செலவு செய்யாமல் வைத்துள்ளன.

கட்சிகளின் வருவாய் அடிப்படை

2015-16 நிதியாண்டில் மட்டும் தெரிந்த, தெரியாத நபர்களிடம் இருந்து சுமார் 18 மாநில கட்சிகள் மொத்தம் ரூ. 206.21 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மொத்த கட்சிகளும் தெரிந்த நபர்களிடம் இருந்து ரூ. 90.74 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன. மேலும் கட்சி சொத்து விற்பனை, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவைகளின் மூலமாக ரூ. 74.86 கோடி வருவாய் பெற்றுள்ளது.

இந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலின் போது அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து அனைத்து கட்சிகளும் மொத்தம் ரூ. 40.61 கோடி வருவாய் பெற்றதாக குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் வருவாய் கணக்கீட்டின் அடிப்படையில் 20 சதவீதம் ஆகும். ஆனால், இதில் ஜார்கண்ட் முக்தி மோர்சா மட்டுமே இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து நன்கொடை எதுவும் பெறவில்லை.

மொத்தம் 6 கட்சிகள் ஒருவருக்கும் மேல் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து கட்சிக்கான நன்கொடை பெற்றுள்ளது. இதர 11 கட்சிகள் இதுபோன்று அடையாளம் தெரியாத ஒருவரிடம் இருந்து மட்டுமே நன்கொடை வசூலித்துள்ளன. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அதிகப்படியாக ரூ. 7.24 கோடி, தெலுங்கு தேசம் ரூ. 6.88 கோடி, ஷிரோமி அகாலிதள் ரூ. 6.59 கோடி அதிகப்படியான அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com