எனது உத்தரவு 24 மணி நேரத்துக்குள் மாற்றப்படுவதை விரும்பவில்லை: நீதிபதி செல்லமேஸ்வர் வருத்தம்

எனது உத்தரவு 24 மணி நேரத்துக்குள் மாற்றப்படுவதை விரும்பவில்லை என்று வருத்தம் தெரிவித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் மறுத்து விட்டார்.
எனது உத்தரவு 24 மணி நேரத்துக்குள் மாற்றப்படுவதை விரும்பவில்லை: நீதிபதி செல்லமேஸ்வர் வருத்தம்

புதுதில்லி: எனது உத்தரவு 24 மணி நேரத்துக்குள் மாற்றப்படுவதை விரும்பவில்லை என்று வருத்தம் தெரிவித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் மறுத்து விட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கடந்த சில மாதங்களுக்கு முன் செல்லமேஸ்வர் மற்றும் மேலும் மூன்று நீதிபதிகள் புகார் கூறியிருந்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மட்டுமே தலைமை நீதிபதி ஒதுக்கீடு செய்வதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் நால்வரும் இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பேட்டியளித்தது, நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எனது உத்தரவு 24 மணி நேரத்துக்குள் மாற்றப்படுவதை விரும்பவில்லை என்று வருத்தம் தெரிவித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் மறுத்து விட்டார்.

வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் டி.ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  வழக்குகள் உரிய நேரத்தில் விசாரிப்பது மற்றும் அவர்களுக்கு வழக்குகளை ஒதுக்குவது என்பது தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை எனக்கூறி பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கை மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரது மகனும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் ஆஜரானார். தலைமை நீதிபதியின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் இந்த வழக்கை அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்க கூடாது, மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற பதிவாளர் வலியுறுத்தினார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு பட்டியலிடுவதற்காக வந்தது. ஆனால், இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் மறுத்து விட்டார். அப்போது அவர் கூறியதாவது:

எனது சங்கடத்தை புரிந்து கொள்ளுங்கள். எனது பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே இந்த வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை. எனது உத்தரவில் 24 மணிநேரத்திற்குள் மாற்றம் வருவதை நான் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியன்று, மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர்பாக, விரிவான அமர்வு ஒன்று விசாரிக்க அவரும் நீதிபதி மதன் லோகுரும் பிறப்பித்த உத்தரவை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மறுநாளே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com