காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்

காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று வெளியிட்ட தீர்ப்பில் கூறியுள்ளார்.
காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று வெளியிட்ட தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், காவிரியில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் பாசன வசதி பெறும் 4 மாநிலங்களும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாசித்து வருகிறார். அதில் முதல் தகவலாக, காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை என்று கருத்துக் கூறியுள்ளார்.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்து வருகிறது.
 
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9- இல் தெரிவித்தது.

இதன்படி, காவிரி வழக்கு விசாரணை ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20-ஆம் தேதி வரை 27 நாள்கள் நடைபெற்றது. விசாரணையின் போது, தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் அந்தந்த மாநில நலன்கள், உரிமைகளை முன்னிறுத்தி வாதங்களை முன்வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, காவிரி வழக்கு இறுதி விசாரணையில் இதுவரை நடைபெற்ற வாதங்கள், ஆவணங்கள், நீர்வள நிபுணர்களின் கருத்துகள் அடங்கிய எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அந்தந்த மாநில வழக்குரைஞர்கள் சமர்ப்பிக்க அமர்வு உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி ஒத்திவைத்தது.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com