கர்நாடக அரசியல் ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ அரியணையில் அமருகிறாரா குமாரசாமி..?

ஆட்சி அதிகார ஆடுபுலி ஆட்டத்தில் யார் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா?
கர்நாடக அரசியல் ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ அரியணையில் அமருகிறாரா குமாரசாமி..?

கிரிக்கெட், பங்குச்சந்தை புள்ளிகளைப் போல் கர்நாடக தேர்தல் முடிவுகளில் ஏற்ற-இறக்கங்களை சந்தித்துவரும் கர்நாடகா தேர்தலின் ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்த பாஜக, தற்போது ஆட்சி அதிகார அரியணையில் காங்கிரஸ் கூட்டணியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி அமரப்போவதாக வெளியான தகவல் பாஜகவினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

பாஜகவின் பிரசார பீரங்கியான நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட பல பாஜக பிரமுகர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கர்நாடக தேர்தல் களத்தை கலங்கடித்ததுடன், பிரசார களத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சரமாரியான தாக்குதலை நடத்தினாலும், ராகுல் காந்தி, தனது சரியான பிரசார திட்டமிடலுடன், தனது செயல்பாடுகளையும் மத்தியில் ஆளும் பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் நேர்த்தியாக கொண்டு சென்றதுடன், கட்சியின் மூத்த தலைவர்களின் தேவையற்ற அறிக்கை போர்களை தவிர்த்து சாந்தமாய், சளைக்காமல் ‘ஒன் மேன் ஆர்மி’யாக மாநிலத்தை வலம் வந்து காங்கிரஸ் வெற்றிக்கான போராடினார். அவருக்கு பலமாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் அவரது தாயும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சரமாரியான தாக்குதலை நடத்தினாலும், ராகுல் காந்தி பிரசாரத்தில் மக்களின் சேவையை, காத்திருப்பை மட்டுமே முன்னிறுத்தியே வாக்கு சேகரித்தார். 

இவர்களுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில், மாநிலத்தின் மூன்றாவது சக்தியாக கருதப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் தனது பிரசாரத்தை நடத்தியது.

கர்நாடகா தேர்தல் களத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசார போராட்ட களத்தில், காங்கிரஸ் கட்சியும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் என்றும் மாநிலத்தின் மூன்றாவது சக்தியாக கருதப்படும் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாக்கும், வாய்ப்பும் அளிப்பாரகள் என்று மாநில கட்சிகளின் தலைவர்கள் மத்தியிலும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, கர்நாடகா தேர்தலின் ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் கிரிக்கெட், பங்குச்சந்தை புள்ளிகளைப் போல் ஏற்ற-இறக்கங்களை சந்தித்துவருகின்றன. காங்கிரஸ்-பாஜக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்து வருகின்றனர். 

முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மிக மோசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சிகாரிபுரா தொகுதியில் பாஜக முதல்வர் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா 35 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போதைய ஆட்ட நேரப்படி, பாஜக 104 இடங்களிலும். காங்கிரஸ் 76 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. 

அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அரியணையில் அமருவதற்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையிலில், பாஜக பெரும்பான்மைக்கு இன்னமும் 6 இடங்கள் தேவை. அதேநேரத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கை கோர்த்தால் 114 இடங்களில் முன்னிலை என்கிற நிலை உள்ளது. 

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நோக்கி, காங்கிரஸ் தற்போதைய முன்னிலை நிலவரப்படி, பாஜகவை விட, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களின் ஒட்டுமொத்த முன்னிலை இடங்கள் 118 என்ற மனக்கணக்கில், தலித் இனத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வர் அமர்த்த காங்கிரஸ் முன்வந்தால் தேவேகவுடாவின் மனதை வென்று மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்களுடன் தனது ஆட்சியை கூட்டணி ஆட்சியாக தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

ஒருவேளை, தனக்கோ தனது மகன் குமாரசாமிக்கோ முதல்வர் பதவி தந்தால் கூட்டணி ஆட்சி அமைக்க ஒத்துழைப்பதாக தேவேகவுடா நிபந்தனை விதித்தால் அதற்கும் காங்கிரஸ் சம்மதிக்கலாம் என்று நோக்கில் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல் இந்த ‘ஆடுபுலி ஆட்டத்தில்’ “எந்த கை மறைத்தாலும் தாமரை மலர்வதை தடுக்க முடியாது” என பாஜக வேறொரு கணக்கை தொடங்கி உள்ளது. 

இன்று மாலைக்குள் முடிவுகள் தெரியவரும் என்றாலும் கோவா, மேகாலயா மாநிலங்களில் பாஜக குறைவான இடங்களில் வென்றபோதும் பிற கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது. அதுவும் மேகாலயாவில் காங்கிரஸ் 21, பாஜக 2 இடங்களில் வென்ற நிலையிலும் ஆட்சியை அமைத்தது. தற்போது அதே ஆடுபுலி ஆட்ட களத்தை எதிர்கொள்ளும் நிலையில் கர்நாடகா உள்ளது. அதாவது காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டு பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பாஜகவை ஆட்சி அரியணை என்ற கனவுக்கு செக் வைக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளுமா? என்ற "ஆடுபுலி ஆட்டம்" களை கட்டத் துவங்கி உள்ளது. 

தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரு தொகுதிகள் மற்றும் ஒருவேளை குமாரசாமி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்று, பின்னர் ராஜிநாமா செய்யவுள்ள ஒரு தொகுதி என இந்த மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல்கள் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு பலம் சேர்க்கும் என்பது உறுதியாகி உள்ள நிலையில், அரியணையில் அமரும் வாய்ப்பு குமாரசாமிக்கே அதிகம் என பரவலாக பேசப்படுகிறது. 

இவர்களின் ஆட்சி அதிகார ஆடுபுலி ஆட்டத்தில் யார் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா? என்றாலும் எடியூரப்பா, குமாரசாமி யாராக இருந்தாலும் வராது என்றே பதில் வருகிறது. 
 
தற்போதைய நிலவரப்படி பாஜக மற்றும் காங்கிரஸ் நிலைமை சற்றே சிக்கலில் உள்ள நிலையில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள குமாரசாமியை ராஜாவாக காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதால், வேறு வழியில்லாமல் குமாரசாமியும் இசைவு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com