

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினார்.
மேலும், கர்நாடகாவில் காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடா ஒப்புக் கொண்டிருப்பதாகவும், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்றும் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சித்தராமையா, கர்நாடக மாநில மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். மேலும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கிறோம் என்றும் கூறினார்.
முன்னதாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க காங்கிரஸ் புதிய வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது காங்கிரஸ். இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமியை கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.