எட்டி கரன்ட்டும் இண்டக்ஷ்ன் அடுப்பும்

இண்டக்‌ஷனில்‌ வெப்பம் நேரடியாக பாத்திரத்திலேயே உருவாக்கப்படுகிறது. இது ஆற்றல் சேமிப்பு.

எண்சாண் உடலுக்கு வயிறே பிரதானம். உணவு என்பதில் பச்சையாகத் தின்பதில் ஆரம்பித்து, எதேச்சையாகச் சுட்ட மாமிசம் ஆதி‌மனிதனைச் சப்புக்கொட்ட வைத்ததில், சமையல் மீது கவனத்தைத் திருப்பினான். நெருப்பை கட்டுக்குள் வைக்கத் தெரிந்தவுடன், அப்படியே விறகு, கரி, குமுட்டி அடுப்பு, மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ், திரி ஸ்டவ், கேஸ் ஸ்டவ், அப்படியே மின்மயமாகி ரைஸ் குக்கர், மைக்ரோவேவ் ஓவன் (அவன்னு‌ சரியா சொன்னா, ஆணாதிக்கவாதின்னு சொல்லிடுவாங்களோ!), அப்புறம் இப்போதைக்கு இண்டக்‌ஷனில் வந்து நிற்கிறது. இண்டக்‌ஷன் அடுப்புகள் மாதிரி, சமையல்‌ சாதனங்களில் புரட்சி ஏற்படுத்திய ஒன்று எனக்குத் தெரிந்து இல்லை என்றே சொல்ல முடியும். அந்த இண்டக்‌ஷன் எப்படி வேலை செய்கிறது என்று கொஞ்சம் பார்த்துவிடுவோம். அதற்கு‌ முன், மின்காந்தவியல் (electromagnetism) பற்றி சற்றே தெரிந்துகொள்வது அவசியம்.

ஒரு சுபயோக சுபமுகூர்த்தத்தில், தெரிந்தவருடைய கல்யாணத்தில், கெட்டிமேளம் கொட்டுகையில், சேரிலிருந்து எழுந்து நின்று மணமக்கள், ஹோமகுண்டம், வாத்தியார் என்று எல்லார் மேலும் அட்சதை தூவிவிட்டு பந்திக்கு முந்திப்போய் குந்துகிறீர்கள். இலைபோட்டாகிவிட்டது. ஆனால், இலையில் எதையும்‌ போடக் காணோம். வடை, அப்பளம் எல்லாவற்றையும் போடுகிற மாதிரி வந்து, திரும்ப எடுத்துக்கொண்டு‌விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு அளவில் கடுப்பாகி, தூக்கி‌‌ அடிச்சிருவேன் பாத்துக்க என்று நாக்கை ‌மடக்கி, பல்லைக் கடித்து உறுமுவோம். ஏகத்துக்கும் சூடாகியிருப்போம். அந்தச் சூட்டில், மொத்த கல்யாண கோஷ்டிக்கும் காப்பி போட்டுவிடலாம்.

இப்படித்தான் ஒரு உலோகத்தின் மீது மாறிக்கொண்டே இருக்கும்‌ காந்தப்புலம்‌ இயங்கும்போது, அந்த உலோகத்தில் ஒரு எதிர்ப்பலை கிளம்பும். அந்த எதிர்ப்பலைகள்தான் சிறு சிறு‌ மின்னோட்டங்கள். ஒரு நீரோட்டத்தில் ஏற்படும் சிறு சுழல்போல, இந்த எலெக்ட்ரான்கள் சுற்றிக்கொண்டிருக்கும். இவற்றுக்கு எட்டி கரன்ட் (Eddy currents) அல்லது ஃபோகால்ட் கரன்ட் (Foucault current) என்று பெயர். இந்த மின்னோட்டம் அந்த உலோகத்தில் வெப்பத்தை உருவாக்கும். இந்த நிகழ்வு ஏகப்பட்ட இடங்களில் தலைவலியை உண்டாக்கக்கூடியது. டிரான்ஸ்ஃபார்மர்களில் ஏற்படும் தவிர்க்கமுடியாத மின்சார இழப்புகளுக்கு இந்த எட்டி கரன்ட்டும் ஒரு காரணம். ஏனெனில், இந்த டிரான்ஸ்ஃபார்மர்கள் கடத்துகிற AC (alternating current) எனப்படும் மாறுதிசை‌ மின்னோட்டம் சீராக‌ வராமல்,‌ மேலும் கீழும் அல்லாடி திசை மாறிக்கொண்டே இருக்கும். அப்போது, அதனால் உருவாகும் எட்டி கரன்ட் வெப்பத்தால் கணிசமான அளவு மின்னாற்றல்‌ வீணாகும். ஆனால், அந்த வெப்பமாதல்தான் இந்த இன்டக்‌ஷன் அடுப்புகள் செயல்படுவதற்கான‌ அடிப்படைக் கோட்பாடு.

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் உலோகத்தால் ஆனவை. மாறுகிற காந்தப் புலத்தில் வைக்கும்போது அவை சூடேறும். இதனால், சமைப்பதற்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். ஆனால், நம் வீட்டுக்கு வரும் மாறுதிசை மின்னோட்டம், இந்த வெப்பத்தை ஏற்படுத்துவதற்குப் போதாது. அப்போ என்னதான் நடக்குது இங்கே?

நம் இண்டக்‌ஷன் அடுப்பின் பளபளப்பான கருப்பு நிற செராமிக் மேற்புறத்துக்குக் கீழ் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். உள்ளே ஒரு குட்டி டிரான்ஸ்ஃபார்மர், வீட்டுக்கு வரும் மின்சாரத்தை அடுப்புக்குத் தேவையான அளவுக்கு மாற்றிக் கொடுக்கும். காந்தப் புலம் உருவாதற்காக, மெல்லிய தாமிரக் கம்பிகளை சுற்றிவைத்திருப்பார்கள். இதற்கு, நேர்மேல்தான் நாம் சமைக்கும் பாத்திரத்தை வைக்கிறோம். அடுப்பை ஆன் செய்தவுடன், இந்தக்‌ கம்பிச்சுருளில் மின்சாரம் பாய்ந்து, சில‌ சென்டிமீட்டர் உயரத்துக்கு, மாறிக்கொண்டே‌ இருக்கும் ஒருவித காந்தப்புலம் உருவாகும். இந்த உயரத்துக்குள் நம் பாத்திரத்தின் அடிப்பாகம் வந்துவிடும். மாறுகிற‌ காந்தப்புலத்தில் இருக்கும் அடிப்பாகத்தில், எட்டி கரன்ட்டுகள் உற்பத்தி ஆவதால், அடிப்பாகம் வெப்பமடையும். இந்த வெப்பம், உணவுக்குக்‌ கடத்தப்பட்டு சமையல் இனிதே நடைபெறும்.

சரி, இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? சாதாரண எரிவாயு அடுப்புகளில், எரிவாயு எரிந்து தீயின் வெப்பம் பாத்திரத்துக்குக் கடத்தப்பட்டு, அதிலிருந்து வெப்பம்‌ உணவுக்குக் கடத்தப்படுகிறது. ஆனால், இண்டக்‌ஷனில்‌ வெப்பம் நேரடியாக பாத்திரத்திலேயே உருவாக்கப்படுகிறது. இது ஆற்றல் சேமிப்பு. மேலும், சிலிண்டர்‌ மாற்றத் தேவையில்லை; புகையில்லை; அடுப்பு தொடர்ந்து எரிவதால் ஏற்படும் வெக்கையும் இல்லை. முக்கியமாக, பராக்கு பார்த்துக்கொண்டே பொங்கவிடப்படும் பாலால், பர்னரில் அடைப்பு என்ற பிரச்னையும் இல்லை. அத்துடன் மிக முக்கியமாக, சூடுபட்டுக்கொள்ளும் ஆபத்தும் இல்லை.

ஆனால், பல நல்லதுகள் இருக்கும்போது அங்கு சில சின்னச் சின்ன சங்கடங்களும் இருக்கத்தானே செய்யும். நம் இஷ்டத்துக்கு கல்யாணச் சீராக வந்த வெண்கலப் பாத்திரங்களை இதில் ஏற்றமுடியாது. ஒரு ஆளுக்கு மட்டும்தானே என்று சின்ன டவராயை ஸ்டவ்வில் ஏற்றி காப்பி போடுவதுபோல் போடமுடியாது. பாத்திரங்கள் தட்டையான அடிப்பாகத்துடன் குறிப்பிட்ட அளவு உள்ளவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெப்பம் உண்டாகும். இதயத்தில் பேஸ்மேக்கர் வைத்திருப்பவர்கள், மருத்துவரிடம் ஒருமுறை கேட்டுக்கொள்வது நலம்.

மற்றபடி, எட்டி கரன்ட்டினால் செயல்படும் இண்டக்‌ஷன் அடுப்புகள், சமையலறையில் இடத்தை அடைக்காமல், ஜம்மென்று நமக்குப் பொங்கிப் போட்டுக்கொண்டிருப்பது, எந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியமோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com