அண்ணலின்  அடிச்சுவட்டில்...14

ஜி. டி. கன்ஷ்யாம் தாஸ் பிர்லாவை காந்தி முதன்முதலாக 1916-இல் சந்தித்தார். காந்தியின் எளிமைக்கு நேர் மாறாக ஆடம்பரமாக இருப்பவர் பிர்லா.
அண்ணலின்  அடிச்சுவட்டில்...14

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
காந்தியும் பிர்லாவும்
ஜி. டி. கன்ஷ்யாம் தாஸ் பிர்லாவை காந்தி முதன்முதலாக 1916-இல் சந்தித்தார். காந்தியின் எளிமைக்கு நேர் மாறாக ஆடம்பரமாக இருப்பவர் பிர்லா. ஆனால் இருவருக்குமிடையே ஆழ்ந்த நட்பும் நல்ல புரிதலும் இருந்தது. காந்திக்கும் பிர்லாவிற்குமிடையே நிறைய கொள்கை வேறுபாடுகளும் இருந்தன. கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள் போன்றவற்றின் வளர்ச்சிக்கே காந்தி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் பிர்லாவின் விருப்பமானது பெரிய பெரிய நவீன இயந்திரங்களுடன் நாட்டை தொழில் மயமாக்க வேண்டுமென்பதாக இருந்தது. 

காந்தியுடைய ஆஸ்ரமத்தில் காதி, கைத்தறி, தொழிற்பயிற்சி, கல்வி என பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. அதற்கெல்லாம்  பொருளாதார உதவி தேவைப்பட்டது. எப்போதெல்லாம் இந்த அரும்பணிகளுக்கு பணம் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் பிர்லா எந்தத் தயக்கமுமின்றி தாராளமாகவே உதவி புரிந்தார். 

ஒரு தடவை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு பணம் தேவைப்பட்டபோது காந்தி பிர்லாவிடம் பண உதவிக்காக கோரினார். பிர்லாவிற்கு முதலில் அதற்கு விருப்பக் குறைவு இருந்தது. ஆனாலும் காந்தி மீது கொண்ட மரியாதைக்காக உதவி செய்தார். பிர்லாவின் மனைவி உடல்நலமின்றி இளவயதிலேயே காலமாகி விட்டார். அதன்பின் பிர்லா இன்னொரு திருமணம் செய்து கொண்டார்.  அவர் உயிரோடிருக்கும் போதே அவர் முன்பாகவே இனி நான்  மீண்டும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டேனென்று உறுதியேற்க வேண்டுமென்று காந்தி பிர்லாவிடம் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்டு பிர்லாவும் அவர் மனைவியின் முன்பாக உறுதி கூறி இறுதிவரை மீண்டும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. 

காந்தி எப்போதும் புதுதில்லியிலிருக்கும்போது பங்கி காலனியில் தாழ்த்தப்பட்ட மக்களோடேயே இருந்து வந்தார். காந்திக்காக அங்கே பிர்லா ஒரு குடிலைக் கட்டிக் கொடுத்திருந்தார். சுதந்திரம் கிடைத்தபின் பாகிஸ்தான் பிரிவினையில் அங்கிருந்து வந்த அகதிகளெல்லாம் பங்கி காலனி முழுவதும் தங்க வைக்கப்பட்டதால் காந்தியை பிர்லா மாளிகையில் தங்க எல்லோரும் கேட்டுக் கொண்டனர். 

அவ்வாறு காந்தி அவரது இறுதி நாட்களில் சுமார் ஐந்து மாதங்கள் தில்லியில் பிர்லா மாளிகையிலேயே தங்கி இருந்தார். அப்போது ஜி. டி. பிர்லா தினமும் காலை ஐந்து மணிக்கு காந்தியைக் காண வந்து விடுவார். அப்போதெல்லாம் காந்தி மூன்றரை மணிக்கு எழுந்திருப்பார். நான்கு மணிக்குள் வழிபாடுகளை முடித்திருப்பார். நான்கிலிருந்து ஐந்து மணி வரை தட்டச்சு செய்வதற்காக கல்யாணத்திடம் குறிப்புகள் தருவார். அந்தப் பணி முடிந்ததும் அங்கே பிர்லா காந்தியை சந்திக்க தயாராக இருப்பார். அவருக்கு காந்தியின் பணி நேரங்கள் பற்றியும் ஓய்வு நேரங்கள் குறித்தும் துல்லியமாகத் தெரியும். அந்த சமயங்களில் காந்தியுடன் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பார். 

அப்போது ஒரு தடவை பிர்லா காந்தியிடம்  "இந்தியாவிற்குதான் சுதந்திரம் கிடைத்து விட்டதே. நீங்கள் இனிமேல் பல இடங்களிலும் சென்று தங்க வேண்டாம். என்னுடைய இந்தப் பெரிய மாளிகை இருக்கிறது. இதை நான் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன். உங்களது ஆயுள் முழுக்க நீங்கள் இங்கேயே தங்கி விடுங்கள்.'' என்று வேண்டுகோள் விடுத்தார். பின் இன்னுமொன்றையும் சொன்னார்.  "ஒன்று சொல்கிறேன்... நானும் இங்கேதான் இருப்பேன். எனக்கு இங்கே ஒரு சிறிய அறையும் இங்கிருக்கும் தாராளமான அந்தப் பெரிய குளியலறை மட்டும் போதும். மீதி எல்லாவற்றையும் நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றார். 

பிர்லாவிற்கு பட்டேலை மிகவும் பிடிக்கும். காரணம் பட்டேல் எதையும் செயல்முறையில் சாத்தியப்படுத்துபவர். நிறைய சாதித்தவர். அந்த நெருங்கிய நட்பின் காரணமாக பிர்லா தினமும் பட்டேலுடனேயே நடைப்பயிற்சி மேற்கொள்வார். பட்டேல் தன் வாழ்க்கையின் தனிப்பட்ட பிரச்னைகளனைத்தையும் பிர்லாவோடு மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வார். 

சுதந்திரம் கிடைத்தபின் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டதும் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இளவரசர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான கூட்டமொன்று பிர்லா மாளிகையிலேயே நடைபெற்றது. அந்த விருந்து ஒரு பெரிய அறையில் நடைபெற்றது. அந்த அறை சாதாரணமாக திறக்கப்படுவதில்லை. அந்த விருந்தின் போதுதான் முதன்முதலாக அந்த அறையை கல்யாணம் பார்த்தார். உயர்ந்த கலைத்திறனோடு கூடிய நாற்காலிகள், மேசைகளோடு அந்த அறை மிகவும் அழகாக இருந்தது. 

மோதிலால் நேருவுக்கும் பிர்லாவிற்கும் நெருங்கிய நட்பு இருந்தது. மோதிலால் நேரு சிறந்த வழக்கறிஞர். நிறைய சேவைகளும் தியாகமும் செய்திருக்கிறார். காங்கிரஸின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி இருக்கிறாரென்ற அளவில் அவர் மீது பிர்லாவிற்கு உயர்ந்த மரியாதையும் நட்பும் இருந்தது. பிர்லாவின் அந்த நட்பும் உறவும் மோதிலால் நேருவிற்கு பின் ஜவகர்லால் நேருவோடு தொடரவில்லை. 

ஆபாவின் கணவரான கனுகாந்திக்கு புகைப்படம் எடுப்பதில் இளமையிலேயே மிகுந்த ஆர்வமிருந்தது. 1936-இல் அவருக்கு முதன்முதலாக காமிரா கிடைத்தது. அவர், தன்னை புகைப்படம் எடுப்பதற்கு காந்தி மூன்று நிபந்தனைகளுடன் அனுமதித்தார். முதலாவது தன்னை புகைப்படம் எடுக்கும் போது ஃப்ளாஷ் உபயோகிக்க கூடாது. புகைப்படம் எடுப்பதற்கான செலவினை ஆஸ்ரமம் வழங்காது. புகைப்படம் எடுப்பதற்காக காந்தி காட்சி அளிக்க மாட்டார். முதலில் அவர் ஒரு சிறிய காமிராவே வைத்திருந்தார். அதைப் பார்த்த பிர்லா அவருக்கு அப்போது ஒரு பெரிய நவீனக் காமிராவை வாங்கிக் கொடுத்தார். அந்தக் காமிராவே காந்தியின் வாழ்க்கையை உள்வாங்கி இன்றைய தலைமுறைக்கும் புகைப்படங்களாகத் தந்திருக்கின்றன.

உலகம் வியக்கும் காந்தியின் உன்னதப் புகைப்படங்களுக்கு அந்தக் காமிராவே காரணமாக அமைந்தது.

கல்யாணத்தின் இந்தி கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். அதனால் அபூர்வமான சில தருணங்களில் காந்தி அவரிடம் இந்தியில் கடிதம் எழுதும் பணியைத் தருவார். அப்படி அவரின் கையெழுத்திலிருந்த கடிதம் பிர்லாவின் அறையில் இருந்திருக்கிறது. அப்போது அந்த அறையில் கல்யாணம் எழுதிய கடிதத்தைப் பார்த்த பிர்லாவின் உறவுப் பெண் வியந்து "இந்தக் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கிறது. இதை எழுதியது யார்'' என்று பிர்லாவிடம் விசாரித்திருக்கிறார். 

உடனே பிர்லா அது  "கல்யாணத்தின் கையெழுத்து'' எனக் கூறி இருக்கிறார். உடனே அந்தப் பெண்மணி கல்யாணத்தைப் பார்த்த போது "அச்சுப் போல இவ்வளவு அழகாக எப்படி எழுதுகிறீர்கள்'' எனக் கேட்டார். அவரது குழந்தைக்கும் அந்த முறையை சொல்லிக் கொடுக்க வேண்டுமெனவும் ஆசையுடன் கேட்டுக் கொண்டார். கல்யாணமும் சொல்லிக் கொடுத்தார். 

அந்தக் காலத்தில் ரிலீஃப் நிப் என்று ஒன்று உண்டு. அந்தப் பேனாக்களில் மையினை சேமிக்க இயலாது. பக்கத்தில் மைப்புட்டியை திறந்து வைத்துக்கொண்டு அதில் முக்கி முக்கியே எழுத வேண்டும். அச்சுப் போல் அழகான கையெழுத்திற்கு அந்த பேனா முனையை நுணுக்கமாக வடிவமைக்க வேண்டும்.

கத்திரிக்கோலைக் கொண்டு அந்த நிப்பின் நுனியில் இரண்டு புள்ளிகள் அளவிற்கு குறுக்காக வெட்டி விட வேண்டும். பின் அந்த நுனியை சொரசொரப்பான கல்லில் தேய்த்து விட வேண்டும். இனி அந்தப் பேனாவை மையில் முக்கி சாய்வாக ஒரு குறிப்பிட்டக் கோணத்தில் திருப்பி எழுதினால் அழகான கையெழுத்து அச்சு போல் காகிதத்தை அலங்கரிக்கும். அச்சை விட அழகாகவும் இருக்கும்.

காந்தியும் பட்டேலும் பிர்லாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது பிர்லா பிலானியில் இருந்தார். 

காந்தியும் பட்டேலும்
கல்யாணம், ஆபா, மனு ஆகியோர் மகாத்மா காந்தியுடன் பிர்லா இல்லத்தில் தங்கி இருந்த தருணம். 

அப்போது கல்யாணத்திற்கு  22 வயது இருக்கும். ஆபா காந்திக்கும் மனுவுக்கும் 19, 20 வயதிருக்கும். காலை 5 மணிக்கு எழுந்து காந்திக்கு எண்ணெய் தடவி அவர்கள் முறையாக உடல் மசாஜ் செய்வார்கள். 

வழக்கம்போல் அன்றும் அவர்கள் காந்திக்கு மசாஜ் செய்து கொண்டிருந்த போது மகாத்மா அவர்களை நோக்கி "நீங்கள் எனது உடல் ஆரோக்கியத்திற்காக மசாஜ் செய்கிறீர்கள். ஆனால் இந்தச் சின்ன வயதில் நீங்கள் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கிறீர்களே'' என வருத்தப்பட்டார். "இனி நீங்கள் நடைப் பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டுமம்'' என்றார். அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தையும் குறிப்பிட்டுச் சொன்னார். காலையில் தான் ஓய்வெடுக்கும் நேரத்தில் நீங்கள் வெளியே நடைப் பயிற்சி மேற்கொள்ளலாமென்றார். 

உடனே  ஆபாவும் மனுவும் நாங்கள் விடியாத இந்த அதிகாலைப் பொழுதில் தனியாக எப்படி வெளியே  நடந்து போக முடியுமென்றனர். 

உடனே காந்தி "கல்யாணத்தையும் கூடவே அழைத்துச் செல்லுங்கள்'' என்றார்.

அன்றிலிருந்து மூவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். இரண்டு நாட்கள் சென்று வந்திருப்பார்கள். 

மூன்றாவது நாள் வீட்டிலிருந்து கதவைத் திறந்து வெளியே வந்ததுமே, பிர்லா அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். அவர்கள் மூவரையும் அந்த நேரத்தில் அங்கே பார்த்ததும் அவருக்கு வியப்பாக இருந்தது. 
"இந்த நேரத்தில் மூவரும் எங்கே போகிறீர்கள்?'' என்றார். 
காந்தி நடைப்பயிற்சி செய்யச் சொன்னதை கூறினர். 

உடனே அவர் "நான் தினமும் காலையில் 5 மணிக்கு நடைப்பயிற்சி போகிறேன். என்னுடனேயே வந்து விடுங்கள்'' என்று சொல்லி அவரது காரில் ஏறச் சொன்னார்.

கல்யாணம் காரின் முன்பகுதியில் ஏறினார். ஆபாவும் மனுவும் பின்னால் ஏறிக் கொண்டனர். கார் நேராக ஒüரங்கசீப் சாலையிலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் வீட்டின் முன்பாக நின்றது. அப்போது பட்டேலின் வீடு நேருவின் வீட்டிற்கு அடுத்ததாக இருந்தது. நேருவின் வீடு யார்க் சாலையிலிருந்தது. இரு சாலைகளின் சந்திப்பைக் கடந்தால் லோதி பூங்கா வந்துவிடும்.

பட்டேலும் பிர்லாவும் தினமும் சேர்ந்து லோதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். பட்டேலும் பிர்லாவும் மிக நெருங்கிய நண்பர்கள்.

பட்டேலுக்கும் நேருவிற்கும் அதிகமாக பிடித்தமில்லை. இருவரும் மாறி மாறி குறை கூறிக் கொண்டிருப்பார்கள். பட்டேல் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தார். பல தருணங்களில் பட்டேல் தன்னால் நேருவோடு பணியாற்ற இயலவில்லையென நேருவைக் குறித்து காந்தியிடம் முறையிட்டிருக்கிறார். 

பட்டேலிற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் பிர்லாவே செய்தார். கல்யாணம் பிர்லாவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு இரண்டு மூன்று நாட்களாகி இருக்கும். அன்று நடைப் பயிற்சி செய்துவிட்டு பட்டேலின் வீட்டில் சிறிது நேரம் இருந்தனர். 

வழக்கமாக அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு விட்டு வீட்டிற்கு வரும்போது உள்துறை அமைச்சரான அவரிடம் முறையிடுவதற்காக நிறைய அகதிகள் காத்திருப்பார்கள். அப்போதெல்லாம் பூனைப்படை போன்ற பாதுகாப்பு காவலர்களெல்லாம் அங்கு கிடையாது. சுதந்திரமாக மக்கள் அவரின் வீட்டு வளாகத்திற்குள் வந்து பேசுமளவிற்கு நல்ல சுதந்திரம் இருந்தது. அங்கு கூடியிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்ட அகதிகள். தங்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்கிறார்களென பட்டேலிடம் முறையிட்டனர். 

உடனே பட்டேல் மிகுந்த கோபத்துடன் "நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நீங்களும் மாறிப் பதிலடி கொடுக்க வேண்டியதுதானே'' என்றார். 

அப்போது அங்கே கல்யாணம், ஆபா, மனு, பிர்லா ஆகியோர் மட்டுமே இருந்தார்கள். கல்யாணமும் ஆபாவும் எந்த உணர்ச்சிகளையும் வெளிப் படுத்தாமல் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். சுட்டியான மனு நக்கலாக சிரித்தார். பிர்லாவின் முகத்திலும் சிறிது சிரிப்பு. 

பின்பு அங்கிருந்து வீட்டிற்கு வந்ததும் வழக்கமான சேவைகளை மூவரும் காந்திக்கு செய்து கொண்டிருந்தார்கள். அன்றிரவு ஒன்பது மணி. அதுவே மனு மனதில் தேக்கி வைத்திருப்பதை காந்தியிடம் கொட்டி விடும் நேரம். அதிகமாக பேசும் இயல்புடைய மனுதான் அதிகமாக கிசுகிசுப்பார். அந்த நேரத்து காட்சி இன்னும் கல்யாணத்தின் கண்களில் அப்படியே இருக்கிறது. 

காந்தியின் கால்களை ஆபா அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார். அதுவரை விஷயத்தை மனதில் அடக்கி வைத்திருந்த மனு, பட்டேலின் வீட்டில் நடந்த அந்த சம்பவத்தை காந்தியிடம் கூறினார் ஒருவித எக்காளச் சிரிப்புடன். 

உடனே காந்தி மிகுந்த வருத்தத்துடன் "ஏம்' என்றார். குஜராத்தியில் "ஏம்' என்றால் அப்படியா? என்று பொருள். மனுவின் முகத்தில் இன்னும் அந்த குறும்பான சிரிப்பு மாறவில்லை. 

"இது மிகவும் வருத்தப்படக் கூடிய விஷயம். அதற்கு ஏன் சிரிக்கிறாய்?'' என்றார் மிகுந்த கண்டிப்புடன் காந்தி. 

உடனே மனு தனது சிரிப்பின் வலுவை சிறிது குறைத்துக்கொண்டு "பட்டேல் சொன்ன விதத்தை நினைத்தேன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது'' என்றாள். 

அந்த நிகழ்வு காந்திக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. இந்த சம்பவம் நேருவுக்கு தெரியாது. இந்த நிகழ்வின் பின் காந்திக்கும் பட்டேலுக்குமான உறவு மிகுந்த கசப்பாகவே இருந்தது. இதை மனதில் கொண்டுதான் காந்தி அடிக்கடி சொன்னார்.  "பழி வாங்குதலென்பது மிகவும் தவறானது. ஒருவர் கண்ணைக் குத்தினால் மற்றவர்களும் அதற்கெதிராக கண்களைக் குத்தத் தொடங்கினால் உலகத்திலுள்ள அனைவருமே குருடர்களாகி விடுவார்கள் (An eye for an eye will make the world blind)'' என்று.
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com