அண்ணலின்  அடிச்சுவட்டில்... 16

இந்திய பாகிஸ்தான் பிரிவினையென்பதை காந்தி முற்றிலும் எதிர்த்தார். மொகலாய ஆட்சியிலும், பிரிட்டீஷ் ஆட்சியிலும் கூட இந்தியா
அண்ணலின்  அடிச்சுவட்டில்... 16

காந்திஜியின்   செயலர்   கல்யாணத்தின்  அனுபவங்கள்
இந்திய - பாகிஸ்தான் பிரிவினை

இந்திய பாகிஸ்தான் பிரிவினையென்பதை காந்தி முற்றிலும் எதிர்த்தார். மொகலாய ஆட்சியிலும், பிரிட்டீஷ் ஆட்சியிலும் கூட இந்தியா ஒன்றாகவே இருந்தது. காங்கிரஸால் இந்தியா இரண்டாகப் பிரிந்தது. அதற்கு முக்கியக் காரணம் நேருதான் என்பார் கல்யாணம். காந்தியே அதை ஒரு தடவை சொல்லி இருக்கிறார். "காங்கிரஸ் தலைவர்களால் நான் ஏமாற்றப் பட்டிருக்கிறேன்''  என்றார். 

பெரும்பான்மை இந்து சமூகத்தால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று கருதி முகமது அலி ஜின்னா தனிநாடாக பாகிஸ்தான் பிரிந்து வர வேண்டுமென அறைகூவல் விடுத்தார். காந்தி அவரின் அந்த அறைகூவலை எப்படியாவது தடுக்க வேண்டுமென எண்ணினார். அதற்காக அவர் ஒரு வழியினையும் கண்டார். அவரின் துணிச்சலான அந்த ஆலோசனையானது ஜின்னாவையே  பிரதமராக்குவது என்பதேயாகும். 

காந்தியின் அந்தக் கருத்திற்கு அப்போது ஆதரவு தெரிவித்தவர்கள் மெளலானா அபுல் கலாம் ஆஸாத், மற்றும் கான் அப்துல் கஃபார் கான் ஆகிய இருவர் மட்டுமே. ஜின்னாகூட அதை ஏற்றுக் கொண்டிருப்பார். அந்த ஆலோசனையை காங்கிரஸýம் அன்று ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று இந்தியா ஒன்றுபட்ட வல்லரசாக இருந்திருக்கும்.  மீண்டும் தேர்தல் வரும்போது நாம் விருப்பப்பட்ட நல்ல தலைவர்களை பிரதமராக தேர்ந்தெடுக்க  இயலும். 

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே நேருவுக்கும் ஜின்னாவிற்கும் எப்போதுமே பிடித்தமில்லாமலேயே இருந்தது. ஜின்னாவை பிரதமராக்கலாமென காந்தி கூறிய போது நேரு துணை பிரதமராக அவரின் கீழ் பணியாற்ற வேண்டுமெனக் கருதி அதை பலவந்தமாக எதிர்த்தார். அப்போது மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கூட பாகிஸ்தான் பிரிவினையைத் தடுக்கும் விதமாக இந்தியா சுதந்திரம் பெற்றுக் கொள்ளும் நாளை சிறிது காலம் தள்ளி வைக்கலாமென்ற அளவிற்கு கூட கருத்து தெரிவித்தார். அதனால் இந்து -  முஸ்லிம் இதயங்கள் ஒன்றிணையும் என்பது அவரது நம்பிக்கை.

நேருவுக்கு அப்போது 50 வயதிற்கு மேலாகி விட்டது. அவருக்கு தானே பிரதமராக வேண்டுமென்ற ஆசை இருந்தது. காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில் பெரும்பாலான காங்கிரஸ்காரர்களும் நேரு கூறியதற்கிணங்க பிரிவினைக்குச் சாதகமாக ஓட்டளித்ததால் காந்தி எண்ணியது நடக்க இயலாமற் போனது. அதை வைத்துதான் தன்னுடைய ஆலோசனைகள் முழுவதும் புறக்கணிக்கப்பட்டதாகவும், முஸ்லிம் மக்களல்லாத மற்றவர்களால் தான் தனித்து விடப்பட்டதாகவும் காந்தி கூறினார். 

அப்போது காங்கிரஸில் எல்லா உறுப்பினர்களுமே காந்தியவாதியாக இருக்கவில்லை. அவர்கள் வெறுமனே காதியை மட்டும் உடுத்தி இருந்தார்கள். அவ்வளவுதான். ஆஸ்ரமத்திலிருப்பவர்களே பெரும்பாலும் காதியை உடுத்தி காந்தியவாதிகளாகவும் இருந்தார்கள்.

இந்திய -  பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் காந்தி கூறிய ஒரு விஷயம் பலருக்கும் தெரிந்திருக்காது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாய் இருந்த நாடுகள். அதனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இரண்டு நாட்டுக் கொடிகளையுமே ஏற்ற வேண்டுமென்று காந்தி சொன்னார்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையானதும் ஏராளமான பிரச்னைகள் இருந்தன. இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் நெருங்கிய உறவினர்கள் பலரும் பிரிய வேண்டி இருந்தது. ஒரே குடும்பத்தில் சகோதரி பாகிஸ்தானிலும் சகோதரர் இந்தியாவிலுமாக பிரிய நேர்ந்தது. தனது பெற்றோர்களை எளிதில் பார்க்க இயலாத துயரம் வேறு.

அப்போது காந்திக்கு வந்த நூற்றுக்கணக்கான கடிதங்களில் ஒரு கடிதம் இது..
ஜெய் ஹிந்த்

ஹிஸ்ஸர்
24-09-1947

அருட்திரு  மகாத்மாஜி,
மனித இனம் மற்றும் நீதியின் நற்செய்தியாய் நீங்களே இருக்கிறீர்கள். பேரிடரை எதிர்கொள்ள இயலாமல் உங்களிடம் அடைக்கலம் தேடி வரும் எல்லா தனிமனிதரையும் நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். அதே நம்பிக்கையை என் மனதில் கொண்டே ஓர் எளிய வேண்டுதலுடன் உங்களை நான் அணுகுகிறேன்.

பி.பீஷன் தத்தா ஷர்மா என்கிற எனது சகோதரர் பாகிஸ்தான் சிந்து பகுதியில் ரோஹ்ரி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குகிற எழுத்தராக உள்ளார்.   அங்குள்ள நிலையப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும். அவரும் அவரது குடும்பத்தாரும் மிகுந்த பீதி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையையே இழந்துவிட்டார்கள். அவரை பாகிஸ்தான் ரயில்வேயிலிருந்து இந்திய ரயில்வேக்கு உடனடியாக மாற்றுவதற்காக பண்டிட் நேருஜி, சர்தார் பட்டேல்ஜி, டாக்டர் ஜான் மத்தாய், விஸ்வநாதன், பாகிஸ்தானிலுள்ள இந்தியாவிற்கான தூதரக துணை உயர் அதிகாரி ஆகியோரை கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஆனால் அதற்கு எனக்கு இன்னும் எந்தப் பதிலுமே கிடைக்கவில்லை. சிந்துவிலுள்ள ரோஹ்ரி நிலையத்திலிருந்து இந்தியாவிலுள்ள ஏதாவது நிலையத்திற்கு எனது சகோதரர்  மாற்றம் பெறுவதற்கு தயவுசெய்து உதவுங்கள். நாங்கள் இரவு பகலாக அவரைப்பற்றிய செய்தியினை அறிய காத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் எதுவும் சாதகமாய் நடக்கவில்லை. உங்களது கால்களே எங்களின் இறுதி முயற்சியும் நம்பிக்கையுமாக உள்ளது. எனது சகோதரர் இயன்ற அளவு சீக்கிரமாக இந்தியா வர தயவு செய்து அவருக்கு உதவுங்கள். இல்லாவிட்டால் அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் பிழைக்க மாட்டார்கள். எல்லா துயரங்களிலிருந்தும் பகவான் அவர்களை காப்பாற்றட்டும்.
என்றும் தங்களது உண்மையுள்ள,
ரவி தத்தா ஷர்மா,
குற்றவியல் நீதிமன்றம், 
ஹிஸ்ஸால், கிழக்கு பஞ்சாப்.
  
பாகிஸ்தானில் நிறைய உறவினர்களைக் கொண்ட முஸ்லிம்கள் பலர் பாகிஸ்தானிற்கு சென்று விடவே நினைத்தனர். அவர்களுக்கு இந்தியாவில் நிறைய சொத்துக்கள் இருந்தன. அதேபோன்று இந்தியாவிற்கு திரும்ப விரும்பிய பல இந்துக்களுக்கும் பாகிஸ்தானில் நிறைய சொத்துக்கள் இருந்தன. பலரும் பாகிஸ்தானிலுள்ள தனது சொத்துக்களை இந்தியாவில் சொத்து வைத்திருக்கும் பாகிஸ்தானியர்களோடு ஈடாக மாற்றிக் கொண்டனர். இரு நாடுகளிலும் உறவினர்களையும் சொத்துக்களையும் கொண்ட பல மக்கள் எதுவும் செய்வதறியாது மிகவும் திண்டாடினர். 
பாகிஸ்தானில் தொழிற்சாலை நடத்தி வந்த பீம் சைன் மெஹ்ரா என்பவர் தனக்கேற்பட்ட பாதிப்பு குறித்து காந்திக்கு எழுதியிருந்த கடிதம் இது.

பீம் சைன் மெஹ்ரா
உரிமையாளர்
ரவி ஹோசியரி ஃபாக்டரி,
லக்ஷ்மி இன்டஸ்டிரியல் ஒர்க்ஸ்,
ரவி ஸ்டோர்ஸ், லாகூர்,
ரவி ஹோசியரி ஃபாக்டரி.
டெல்லி - ஷாதாரா.
6-அண்டர் ஹில் லேன்,
சிவில் லைன்ஸ்,
டெல்லி. 14-12-1947.

மதிப்பிற்குரிய மகாத்மாஜி,
நீங்கள் பெரிய பிரச்னைகளில் முழுவதும் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்களென நன்கு தெரிந்தும், உங்கள் கவனத்தைத் திருப்புகிற மிகச்சிறிய விஷயங்களால் உங்களுக்கு எந்த கவலையினையும் அளிக்க கூடாதென்ற எண்ணத்திலும் உங்களின் ஓர் எளிய குழந்தையான நான் இவற்றையெல்லாம் இதுவரை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர முயற்சிக்கவில்லை. ஆனால் இது விதிமுறை சார்ந்த விஷயமாதலால் கீழ்கண்ட சில குறிப்பிட்ட உண்மைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தாலும், மதிப்பு மிகுந்த மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும், ஆகஸ்ட் 17 ஆம் தேதி நாங்கள் குடும்பத்துடன் லாகூரை விட்டு வெளியேறி இங்கே ஓர் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைய வேண்டி இருந்தது. எங்கள் வீடு கொள்ளை அடிக்கப்பட்டு எங்கள் கடைகள் சில முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்டுள்ளன. இரண்டுக்குமான மதிப்பு 1,15,000 ரூபாய் இருக்கும். ஆனால் லாகூரிலுள்ள ரவி ஹோசியரி ஃபாக்டரி, லக்ஷ்மி இன்டஸ்டிரியல் ஒர்க்ஸ், ரவி ஸ்டோர்ஸ் ஆகிய தொழிற்சாலைகளிலுள்ள இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் இயந்திரங்களும் அப்படியே இருக்கின்றன. 

எல்லா பொருட்களும் அப்படியே இருந்தபோது அவற்றை இங்கே கொண்டு வருவதற்காக 09-09-1947 அன்று டெல்லியிலுள்ள அகதிகளுக்கான அமைச்சகத்தை உதவிக்காக அணுகினோம். ஒரு பதில் கூட கிடைக்கவில்லை. கொள்ளை நடந்த பின் எங்கள் கடை ஒரு முஸ்லிமிற்கு வழங்கப்பட்ட செய்தியினையும் அறிந்து என்னுடைய தந்தை எல். பிஷான்நாத் டிசம்பர் ஒன்றாம் தேதி லாகூர் சென்று பாகிஸ்தான் அரசை அணுகினார். என்னுடைய தந்தை காங்கிரஸ் போராட்டத்தில் 20 வருடங்கள் ஈடுபட்டவர். இந்திய அரசும் பாகிஸ்தானும் இணைந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள். அதன்படி தனது சொந்த இடங்களுக்கே திரும்ப விரும்புகிற மக்களுக்கு அவர்கள் தங்கள் வியாபாரங்களை மீண்டும் நடத்த எல்லா வசதிகளையும் அந்தந்த அரசுகள் செய்து கொடுத்து உரிய பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தீர்மானித்தனர். அதன்படியே எங்களது தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அவற்றை தொடர்ந்து நடத்துவதற்காகவும் அனுமதி வேண்டி நாங்கள் விண்ணப்பித்தோம். எங்கள் சார்பில் ஈசுன் காதிர் லாகூரிலுள்ள தொழிற்சாலைகளுக்கான இயக்குநரை அணுகி இருக்கிறார். அவர் அந்த தொழிற்சாலைகள் 10 அகதிகளுக்கு கூட்டாக வழங்கப்பட்டு விட்டதாகவும் ( சொத்து இன்னும் அவர்கள் பெயருக்கு மாற்றப்படாத போதிலும்)  அந்த தீர்மானத்தை இனி மாற்ற இயலாதென்றும் கூறி அனுமதிக்கு மறுத்து விட்டார். 

தனது சொந்த இடங்களுக்கே திரும்ப விரும்புகிற மக்களுக்கு அவர்கள் தங்கள் வியாபாரங்களை மீண்டும் நடத்த எல்லா வசதிகளையும் அந்தந்த அரசுகள் செய்து கொடுத்து உரிய பாதுகாப்பும் வழங்கப்படும் என்று ஒருபக்கம் இரண்டு அரசாங்கங்களும் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்திய அரசாங்கம் அதன்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ( இங்கே முஸ்லிம்களின் கடைகளும் வீடுகளும் அவரவர்க்கே வழங்கப்பட்டு வருகின்றன) ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் நேர் எதிர்மறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் அரசின் நேர்மை குறித்தும், பாகிஸ்தான் அரசிற்கு கடன், விநியோகப் பொருட்களென உதவும் நமது இந்திய அரசின் நியாயம் குறித்தும் உங்களது கருத்துக்களை திறந்த மனதுடன் வெளிப்படுத்த மிகவும் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் மேற்கு பஞ்சாபில் பாதிக்கப்பட்டவர்கள் தனது வாழ்வை கெளரவமாக மீண்டும் தொடங்குவதற்கு உதவ முயற்சிக்க தயவு கூர்ந்து இந்திய அரசிற்கு ஆலோசனை கூறுங்கள். மக்களுக்கான அரசு வழங்க வேண்டிய கடமைகளான குழந்தைகளுக்கான கல்வி, வாழ்வாதாரத்திற்கான தொழில், தங்க இடம் ஆகியவற்றிற்காகவே பாதிக்கப் பட்டவர்கள் தேடி வருகிறார்கள். 

கடவுளுக்காகவாவது அவர்களை மோசமான நிலையை அடையச் செய்து பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் நிலைக்கு அனுமதிக்க கூடாது.

ஒரு குடும்பத்தின் மூத்தவருக்கான உயர்ந்த பாசத்துடன் பெரு மரியாதையுடனும் உங்கள் பாசத்திற்குரிய
(கையெழுத்து)
6-அண்டர் ஹில் லேன்,
சிவில் லைன்ஸ்,
டெல்லி. 
தயவுசெய்து உங்கள் பதில்?

மவுண்ட் பேட்டனுடைய மனைவிதான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கான நிவாரணம் மற்றும் நலக் குழுவின் (United council for relief and welfare) தலைவராக இருந்தார். கல்யாணம் அவருக்கு உதவியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். கல்யாணம் உட்பட அவர்களின் பணியானது இந்து பெண்களை பாகிஸ்தானிலிருந்து இங்கும், இங்குள்ள முஸ்லிம் பெண்களை பாகிஸ்தான் செல்ல விரும்பினால் அவர்களை அங்கே அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதென்பதாகவும் இருந்தது. கல்யாணமும் திருமதி மவுண்ட் பேட்டனும் விமானத்திலேயே செல்வர். டெல்லியிலிருந்து அமிர்தசரஸிற்கும், அமிர்தசரஸிலிருந்து டெல்லிக்குமாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எப்பொழுதெல்லாம் விமானம் தேவையோ அப்பொழுதெல்லாம் அதிகாரிகள் உடனடியாகவே விமானத்திற்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். 
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com