அண்ணன் அடிச்சுவட்டில்...32

சரஸ்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கு சில காலங்களுக்கு முன்பு தான் படித்த பள்ளியில் மாலினி ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அண்ணன் அடிச்சுவட்டில்...32

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
சரஸ்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கு சில காலங்களுக்கு முன்பு தான் படித்த பள்ளியில் மாலினி ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருடைய காதணியிலிருந்த வைரக்கற்களில் ஒன்று எங்கேயோ விழுந்து விட்டது. அப்போது அந்த வைரக்கல்லின் மதிப்பு மாலினிக்கு பெரிதாகத் தெரியவில்லை. கல்யாணமும் அது தொலைந்ததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சரஸ்வதிக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. அதை ஓர் அபசகுனமாக அவர் எடுத்துக் கொண்டார்.

சாதாரணமாக அவர்கள் குடும்பத்தில் நகையிலிருந்து வைரக்கல் தொலைந்து போனால், தொலைத்தவர்கள் இருப்பதை ஏதாவது உறவினர்களிடம் கொடுத்து விட்டு சில காலங்கள் கழிந்த பின்பு கல்லை மீண்டும் நகையில் பதித்த பின்புதான் அதனை திருப்பிப் பெறுவார்கள். சரஸ்வதிக்கு உடல்நலம் குறைவானபோது கலங்கிப் போன கல்யாணம், தனது உற்ற நண்பரான பழனியப்ப செட்டியாரை அழைத்தார். பின் அந்த இரண்டு வைரக் காதணிகளையும் அவரிடமே கொடுத்து விட்டு தன் மனைவிக்கு குணமான பின்பு அதைப் பெற்றுக் கொள்வதாகக் கூறினார். அவரிடம் வைரக் காதணியைக் கொடுத்ததற்கான எழுத்துபூர்வமான எந்த சான்றையும் கல்யாணம் வாங்கிக் கொள்ளவில்லை.

சரஸ்வதி சிகிச்சை பெற்றுக் கொண்டே இருந்தார். பழனியப்ப செட்டியாரும் கல்யாணத்திடம் அவ்வப்போது அந்த வைரத்தோட்டை திருப்பி பெற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டே இருந்தார். கல்யாணமும் அவரிடம் "உன்னிடம்தானே இருக்கிறது. அப்படியே இருக்கட்டும்'' என்று கூறிக் கொண்டு இருந்தார். சில வருடங்களில் சரஸ்வதி இறந்த போது, பழனியப்ப செட்டியாரும் கல்யாணத்திடம் அந்த வைரக் காதணியை வாங்கிக் கொள்ள வலியுறுத்திக் கொண்டே இருந்தார். கல்யாணம் அதைத் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார்.

அதன் பின் சில வருடங்கள் கழித்து திடீரென ஒருநாள் பழனியப்ப செட்டியார் அந்த வைரக் காதணிகளுடன் கல்யாணத்தின் வீட்டிற்கு வந்தார். "எனக்கும் வயதாகி விட்டது. உனக்கும் வயதாகி விட்டது. இனி இந்த வைரக் காதணி என்னிடம் இருப்பது முறையல்ல'' என்று கூறி அந்த வைரக் காதணிகளை கல்யாணத்திடம் கொடுத்தார். கல்லில்லாதிருந்த அந்தக் காதணியில் புதிதாக ஓர் அழகான வைரக்கல் மினுமினுத்தது. கல்யாணத்திற்கும் அவருக்குமான உள்ளார்ந்த அந்த நட்பின் ஒளி இன்னும் பிரகாசமாய் அந்த வைரக்கல்லினுள் பல வண்ணங்களாய் இன்னும் ஒளிர்கிறது. 

மாலினி சிறுநீரக தானம் செய்ததால் அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. இரண்டாவது மகளான நளினிக்குதான் முதலில் திருமணம் நடந்தது. மாலினிக்கு அதன் பின் இரண்டு மூன்று வருடங்கள் கழித்துதான் திருமணம் நடந்தது. 

அவரது திருமணம் மதுரையில் நடந்ததால் கல்யாணத்தால் செல்ல முடியவில்லை. காரணம் அவர் வீட்டுத் தோட்டத்திலுள்ள செடிகள், மரங்கள் அவருக்கு மிகவும் முக்கியமானவை. திருமணத்திற்காக அவர்களோடு சென்றால் இரண்டு மூன்று நாட்கள் தண்ணீரின்றி அந்தச் செடிகள் வாடிப் போகலாம். வேறொரு வேலைக்காரனை நியமித்துச் செல்லலாமென்றால் அவரது விருப்பத்திற்கேற்றாற்போல் முறையாக உண்மையாக ஒழுங்காக வேலை செய்யும் பயிற்சி பெற்ற வேலைக்காரர்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. யாரையாவது வேலைக்கு வைத்துப் போனால் வீட்டிலுள்ள செடிகளில் சில செடிகளாவது அவரது கவனமின்மைக்கு பலியாகலாமென்ற எச்சரிக்கை உணர்வுதான் அவரை மாலினியின் திருமணத்திற்குச் செல்ல விடாமல் தடுத்தது. பின்பு அவருக்கு சென்னையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கல்யாணம் கலந்து கொண்டார். மாலினி சத்ய சாய் பாபாவின் பக்தை. அன்பே கடவுளென்பார். மண்ணில் பல கலை வடிவங்களைச் செய்வதிலும் அதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதிலும் அவருக்கு அதீதமான ஆர்வம். 

நீதியின் பாதையில்...
நீதிமன்ற நடைமுறையென்பது ஒரே நாளில் தீரக்கூடியதாகத்தான் கல்யாணம் எண்ணி இருந்தார். வழக்கின் விவரத்தை நேரடியாக நீதிபதியிடம் கூற வேண்டும். நீதிபதி எல்லாவற்றையும் விசாரித்து விட்டு அன்று மாலையே தீர்ப்பைச் சொல்லிவிடுவாரென்றுதான் கல்யாணம் அறிந்திருந்தார். பிறகுதான் அவருக்குப் புரிந்தது. வழக்குக் கொடுப்பவர் நீதிபதியிடம் நேரடியாகப் பேச இயலாதென்றும், அது வழக்கறிஞர் மூலமாகவே பல வருடங்களாகத் தொடர்ந்து பயணிக்கும் நடைமுறையென்றும். 

ஒரு வழக்கு விஷயமாக எஸ்பிளெனேட் நீதிமன்றத்திற்கு கல்யாணம் சென்றார். வழக்கானது கல்யாணம் தற்போது வசிக்கும் வீடு தொடர்பானது. பழைய வீடல்ல; அந்த வீட்டை இடித்துவிட்டு பில்டரிடம் ஒப்படைத்து கட்டியது, அவர் இப்போது இருக்கும் வீடு. 1998-இல் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் ஒரு பிரபலமான கட்டுமான நிறுவனத்தின் அதிபர். இந்த வீட்டைக் கட்டும்போது அவருக்கு எந்த முன்னனுபவமும் இல்லை. ஆனாலும் புதிதாகத் தொழிலில் ஈடுபடுகிற அவரை ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கிலும் ஏமாற்ற மாட்டார் என்ற நோக்கிலும் அவருக்கு இந்த வீட்டின் கட்டுமான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் இந்த வீட்டைக் கட்டி அதில் கல்யாணம் குடியேறிய போது வீட்டில் சொல்ல முடியாத அளவிற்கு குளறுபடிகள். ஒப்பந்த விதிகளை மீறி அவர் வீட்டைக் கட்டியும் இருந்தார். தரம் குறைந்த தரை ஓடுகள், குளியலறை இணைப்புக்கள். மழை பெய்தால் ஜன்னல் வழியாக அத்து மீறும் மழைத் தண்ணீரென ஏகப்பட்ட குழப்பங்கள். கல்யாணத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. உடனடியாக சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். கல்யாணமே வழக்கை நடத்த நினைத்தார். 

இரண்டு வருடங்களாக அந்த நுகர்வோர் நீதிமன்றத்திற்கு நீதிபதியே இல்லாமல் வழக்கு முடங்கி கிடந்தது. அப்போதே அவர் அவ்வப்போது இதை விசாரிப்பதற்காக நீதிமன்றம் செல்வதற்கு 85...100 என ஆட்டோவிற்கு தண்டம் வேறு... அதன் பின் ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொண்டார். இரண்டு வருடங்களுக்கு பின் அந்த நுகர்வோர் நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமித்து வழக்கும் விசாரணைக்கு வந்தபோது அவரது துரதிர்ஷ்டம்... வழக்கு எடுக்கப்பட்ட அன்று அவரது வழக்கறிஞரின் மனைவிக்கு கண் அறுவை சிகிச்சை... அன்று வழக்கறிஞர் வராததால் அன்றே அவருடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

அதன் பின் 5000 ரூபாய் செலவு செய்து இன்னொரு வழக்கறிஞர் மூலமாக அந்த வழக்கிற்கு உயிரூட்டப்பட்டது. மீண்டும் வழக்கு இன்னும் நான்கு வருடங்கள் நடந்த பின் அதன் விசித்திரமானத் தீர்ப்பாக, இந்த வழக்கிற்கான நீதிமன்றம் இதுவல்ல என்றும் புதுதில்லியிலுள்ள தேசிய நுகர்வோர் ஆணையத்திலேயே வழக்குத் தொடுக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது. பின் புதுதில்லி சென்று அங்கேயே இன்னொரு வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தொடர்ந்தார். அதற்கு அப்போது 15,000 ரூபாய்க்கு மேலாகச் செலவு செய்தார். அங்கு நாலைந்து வருடங்கள் வழக்கு நடந்த பின் அடுத்த தீர்ப்பு. இந்த வழக்கிற்கான நீதிமன்றம் இதுவல்ல. நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இந்த வழக்கினைப் பதிவு செய்ய வேண்டுமென தீர்ப்பானது. 

பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. அங்கு வழக்கு நான்கு வருடங்கள் தூங்கிய பின் இன்னொரு தீர்ப்பு. 10 லட்ச ரூபாய் அளவிலான இழப்பீட்டிற்கெல்லாம் நீங்கள் சிவில் நீதிமன்றத்தில்தான் வழக்குத் தொடுக்க வேண்டுமென்று கூறி வழக்கு தள்ளுபடியானது. பின் விடாப்பிடியாக சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். கல்யாணத்தின் வழக்கிற்கு பிரதிவாதி அனுப்பிய பதில் இன்னும் அதிர்ச்சியும் மனத் தளர்ச்சியும் அளிக்கக்கூடியதாக இருந்தது. அவர் தனது பதிலில் ஒப்பந்த முறைப்படியே வீடு கட்டிக் கொடுத்ததாகவும் மனுதாரர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்றும் அவர் காந்தியின் தனிச் செயலராக இருந்த போது அவரிடமுள்ள காந்தியின் கடிதங்களை வெளிநாட்டிலுள்ள காந்தி விசுவாசிகளுக்கு விற்க முயன்றாரென்றும் கூறி இருந்தார். 

இதைத் தொடர்ந்து, கல்யாணம் மான நஷ்ட வழக்கு தொடுக்கவே அன்று அந்த நீதிமன்றத்திற்கு வந்தார். 

கல்யாணம் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு காந்தியின் முக்கிய கடிதங்கள் சிலவற்றைப் பரிசாக அளித்தார். அவர்கள் அந்தக் கடிதங்களின் நகல்கள் கொண்ட புத்தகத்தின் முதல் பக்கத்தில் கல்யாணம் பரிசாக அளித்ததை தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன் பின் அவர்கள் அதை வெளிநாட்டில் விற்க முயற்சிக்க, சிலர் கல்யாணம் காந்தியின் கடிதங்களை விற்க முயற்சித்ததாக செய்தி பரப்பி விட்டார்கள். 

அப்போது காந்தியடிகளின் நினைவாக அவருடைய ஏதாவது ஒரு துண்டு காகிதமாவது கிடைக்காதாவென எல்லோரும் அலைபாய்ந்து கொண்டிருந்தனர். அவர் ஒருவேளை அப்போது படுகொலை செய்யப்படாமல் இருந்து டெல்லியை விட்டு வேறு இடத்திற்குச் சென்றிருந்தால் கல்யாணம் அந்தக் கடிதங்களையும் காகிதங்களையும் தேவையற்றவையாகக் கருதி அங்கேயே விட்டிருப்பார். அவை அறை சுத்தம் செய்பவரால் குப்பைப் பெட்டிக்குச் சென்றிருக்கும். காந்தி இறந்தபோது அவருடைய கடிதங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றன. கல்யாணமும் தன்னிடமிருந்த காந்தி தொடர்பான பல கோப்புகளையும் கடிதங்களையும் அரசாங்கத்திற்கும் பல முக்கிய சேவை அமைப்புகளுக்கும் கொடுத்தார். மீதி இருந்தவற்றைப் பத்திரப்படுத்தினார். 

கல்யாணத்தின் நண்பரான குமாருடைய காரில்தான் அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். கல்யாணத்திற்குத் தோட்ட வேலைக்கு மண் தோண்ட ஒரு பிசாத்து தேவை இருந்தது. அந்த நீதிமன்றத்திற்கு அருகே இரும்பு பொருட்கள் விற்கிற கடைகள் நிறைய இருந்தன. கடை இருக்கும் பகுதி மக்கள் நெருக்கடியான பகுதியாக இருந்ததால் அங்கு இன்னொரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு பிசாத்து வாங்க குமார் மட்டும் சென்றார். கல்யாணம் அங்கு காத்திருக்கையில் அந்தப் பகுதியில் நிறைய குடிசைகள் இருந்தன. கல்யாணம் 20 வருடங்களுக்கு பின்தான் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். 

இருபது வருடங்களுக்கு முன்பைவிட முன்னேற்றமின்றி மிகவும் மோசமான நிலையிலிருந்தது அந்த இடம். எங்கும் சிறு சிறு குழிகளும் மூத்திரக் குட்டைகளும் அத்தோடு பாத்திரங்கள் கழுவும் பெண்களும் உணவு சமைக்கும் குடும்பங்களும் ஒரு கையில் தின்பண்டத்துடன் அந்த அழுக்கோடு விளையாடுகிற குழந்தைகளென என எல்லாவற்றையும் பார்க்கும்போது கல்யாணத்திற்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு தன் வீட்டை விட்டு வெளியேறி அங்கு சென்று அவர்களோடு ஒரு குடிசையில் தங்கி அவர்களுக்குச் சுத்தம் சுகாதாரத்தைக் குறித்து விழிப்புணர்வு கொடுக்கலாமெனத் தோன்றியது. ஆனால் தற்போது முதுமையில் உடல் பலகீனமும் பார்வைக் குறைவும் அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கிறது. 

2002 ஜனவரியில் காந்திஜி தொடர்பான ஒரு கண்காட்சி நடத்துவதற்கான முயற்சியில் கல்யாணம் இருந்தார். அதில் காந்தியடிகளின் கடிதங்கள், சுதந்திரப் போராட்டக் கால செய்தித்தாள்கள், காந்தியடிகளைப் பற்றிய கார்ட்டூன்கள், காந்தியடிகளின் உருவம் கொண்டு பல நாடுகளால் வெளியிடப்பட்ட பணக் காகிதங்கள், காசுகள், சுதந்திரத்திற்கு பின் அரசிற்கு காந்தியடிகளின் வழிகாட்டு அறிவுரைகள், முக்கியமான ஆளுமைகளுடனான காந்தியடிகளின் கடிதப் பரிமாற்றங்கள், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் எழுதிய காந்தியடிகளின் கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்றை மக்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம் காந்தியடிகள் பற்றிய உணர்வூக்கம் அளிப்பதே கல்யாணத்தின் நோக்கமாக இருந்தது. 

அந்தக் கண்காட்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைக்கும் முகமாக பல நண்பர்களின் உதவியைக் கோரி இருந்தார். அப்போது ஓர் ஆங்கில இதழில் செய்திப் பிரிவில் பணி செய்யும் ஒரு பத்திரிகையாளர் கல்யாணத்தை சந்தித்தார். அவர் முக்கிய ஆளுமைகளின் கையெழுத்து, கடிதங்கள், புகைப்படங்கள், பழங்கால அருங்கலைப் பொருட்களைச் சேர்க்கும் ஆர்வலரென கல்யாணத்திற்கு அறிமுகமானார். அவர் அந்த கண்காட்சியினை ஒழுங்குபடுத்துவதில் அவருக்கு உதவுவதாக தானாக முன்வந்தார். அதற்காகவே ஒருநாள் கல்யாணத்தின் வீட்டிற்கு வந்தார். கண்காட்சியில் வைப்பதற்காக எண்ணிய காந்திஜி தொடர்பான கடிதங்கள், புகைப்படங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் கல்யாணம் அவர் முன்பு விரித்தார். அவர் அப்போது கல்யாணத்தோடு சுமார் நான்கு மணி நேரங்கள் செலவிட்டு அவற்றை எவ்வாறு முறையாக பார்வைக்கு வைப்பதென ஆலோசனை கூறினார்.

(அடுத்த இதழில் முடியும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com