அண்ணலின் அடிச்சுவட்டில்...33: காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

அந்தக் கண்காட்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைக்கும் முகமாக பல நண்பர்களின் உதவியைக் கல்யாணம் கோரி இருந்தார்.
அண்ணலின் அடிச்சுவட்டில்...33: காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

அந்தக் கண்காட்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைக்கும் முகமாக பல நண்பர்களின் உதவியைக் கல்யாணம் கோரி இருந்தார். அப்போது ஒரு பிரபல ஆங்கில இதழில் செய்திப் பிரிவில் பணி செய்த ஒரு பத்திரிகையாளர் 
கல்யாணத்தைச் சந்தித்தார். அவர் முக்கிய ஆளுமைகளின் கையெழுத்து, கடிதங்கள், புகைப்படங்கள், பழங்கால அருங்கலைப் பொருட்களைச் சேர்க்கும் ஆர்வலரென கல்யாணத்திற்கு அறிமுகமானார். அவர் அந்த கண்காட்சியினை ஒழுங்குபடுத்துவதில் அவருக்கு உதவுவதாக தானாக முன்வந்தார். அதற்காகவே ஒருநாள் கல்யாணத்தின் வீட்டிற்கு வந்தார். கண்காட்சியில் வைப்பதற்காக எண்ணிய காந்திஜி தொடர்பான கடிதங்கள், புகைப்படங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் கல்யாணம் அவர் முன்பு விரித்தார். அவர் அப்போது கல்யாணத்தோடு சுமார் நான்கு மணி நேரங்கள் செலவிட்டு அவற்றை எவ்வாறு முறையாகப் பார்வைக்கு வைப்பதென ஆலோசனை கூறினார்.
கல்யாணம் நடத்திய அந்த முதலாவது கண்காட்சி 2002 ஜனவரி 30 அன்று தொடங்கி 2002 பிப்ரவரி 4 வரை நடந்தது. அதில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள எல்லா ஆவணங்களையும் கல்யாணம் காட்சிக்கு வைத்திருந்தார்:

1. சில பாகிஸ்தான் குடிமக்களிடமிருந்து காந்தியடிகளுக்கு வந்த நான்கு தந்திகள். அதில் காந்தியடிகளை பாகிஸ்தான் வருமாறு அழைத்து செய்தி அனுப்பி இருந்தனர். அந்த தந்தியிலேயே காந்தியடிகள் ""நன்றிகள். பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அழைப்பின்றி பாகிஸ்தான் வர இயலாது } காந்தி'' என்று தன் கையெழுத்திலேயே பதிலும் எழுதி இருந்தார்.

2. லஜபதிராயிடமிருந்து வந்த நெடிய தட்டச்சு செய்யப்பட்ட கடிதம். அதில் ஷ்வைஃப் குரேஷிக்கு காந்தியடிகள் ஒரு பதில் குறிப்பு எழுதி இருந்தார்.

3. ராஜ்குமாரி அம்ரித் கெüர், மெüலானா ஆஸாத், ஆசார்ய கிருபளானி, ராஜேந்திர பிரசாத், போன்ற பெரிய தலைவர்கள் காரிலிருந்து இறங்கும் புகைப்படங்கள்.

4. சர்.சி.வி.ராமனின் கையெழுத்துடன் கூடிய அவரது புகைப்படம்.

5. சென்னையில் சர். சி.வி.ராமனின் வீட்டில் கல்யாணம் இருந்தபோது அவர் கல்யாணத்திற்கு எழுதிய சில கடிதங்கள்.

6. ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் காந்தியடிகளின் சில கையெழுத்துப் பிரதிகள்.

7. சர். அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர் காந்தியடிகளைச் சந்திக்க நேரம் கேட்டு எழுதிய ஒரு கடிதமும் அதில் கல்யாணம் தட்டச்சு செய்வதற்காக காந்தி எழுதிய பதில் குறிப்பும்.

8, மீராபென், டி. பிரகாசம் போன்ற சில முக்கிய ஆளுமைகள் காந்தியடிகளுக்கு எழுதிய சுமார் 12 கடித உறைகள். 

10. காந்தியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையின் முதற்பக்கம்.

அந்தக் கண்காட்சியில் அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையாளரும் பங்கு கொண்டார். பல பிரபலமான ஆளுமைகளிடமிருந்து அவருக்கு வந்த சில கடிதங்களையும் ஒரு தனிப் பகுதியில் அன்று காட்சிக்கு வைத்தார். 

2002 அக்டோபர் 2}ஆம் தேதி கல்யாணம் மீண்டும் ஒரு கண்காட்சி நடத்தும் நோக்கில் தனது காட்சிப் பொருட்களை எடுத்தபோது அதில் மேற் குறிப்பிட்ட ஆவணங்கள் காணாமல் இருந்தன. முதலில் அவை மற்ற காகிதங்களோடு கலந்திருக்கலாமென கல்யாணம் கருதினார். அவர் மிகுந்த சிரத்தையுடன் நுணுக்கமாகத் தேடியும் அவற்றில் எந்த ஆவணங்களும் தன் கைக்கு கிடைக்கவில்லை. அதனால் மிகுந்த துயரமுற்றார் கல்யாணம். அதை நினைத்து பல நாட்கள் அவரால் தூங்க இயலவில்லை. எங்கு போயிருக்கும்... எப்படி காணாமல் போயிருக்குமென தன் மூளையைத் தேடித் துளாவிக் கொண்டிருந்தார். வீட்டின் எல்லா இடங்களிலும் மீண்டும் மீண்டும் தேடியும் அவை பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. தன் தலைவிதியை நொந்து கொண்டு தினமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார் கல்யாணம். 
காந்தியை மிகவும் நேசிக்கிற மும்பையைச் சேர்ந்த முக்கியமான ஒரு நபர் பழம் பொருட்கள் சேமிப்பாளர். அவர் கல்யாணத்தின் நண்பர். குறிப்பாக அவருடைய குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2005}இல் சில நேரங்களில் அவர் அவ்வப்போது மும்பையிலிருந்து கல்யாணத்தோடு தொலைபேசியில் பேசுவார். மேலே குறிப்பிட்ட காந்தி குறித்த ஆவணங்கள் காணாமற் போன விவரத்தை பேச்சினிடையே கல்யாணம் அவரோடு மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். உடனே அவர் 2002 ஆகஸ்டில் சென்னையிலிருந்து ஒருவர் தன்னிடம் காந்தி குறித்த இந்த குறிப்பிட்ட ஆவணங்களை விற்பனைக்காக தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் அதை வாங்கத் தீர்மானிக்கும் முன்பு அவற்றைப் பரிசீலிப்பதற்காக அவரிடமுள்ள காந்தி குறித்த அந்த ஆவணங்களின் புகைப்பட நகல்களை அனுப்பித் தர அவர் கேட்டிருக்கிறார். மும்பை அன்பரின் வேண்டுதலுக்கிணங்க சென்னை நபரும் காந்தி குறித்த குறிப்பிட்ட ஆவண நகல்களை அவருக்கு அனுப்பிக் கொடுத்தார். 
அவர் மும்பை அன்பருக்கு அனுப்பிய இ மெயில் கடிதம், கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம், காந்தியின் கையெழுத்துப் பிரதிகள் உட்பட அனைத்து ஆவண நகல்களையும் மும்பை அன்பர் கல்யாணத்திற்கு அனுப்பிக் கொடுத்தார். கல்யாணம் அவற்றைப் பார்த்தபோது அவை அனைத்தும் கல்யாணம் தேடிக் கொண்டிருக்கும் காந்தி தொடர்பான முக்கிய ஆவண நகல்கள். 
2002 ஜனவரியில் கல்யாணம் கண்காட்சி நடத்தியபோது அவருக்கு உதவுவதுபோல் வந்த அந்த குறிப்பிட்ட பத்திரிகையாளர், அவற்றின் மீது ஒரு கண் வைத்து கண்காட்சி நிறைவு பெற்றபோது அவற்றைக் களவாடி இருக்கிறார் என்று அப்போதுதான் கல்யாணத்திற்குப் புரிந்தது . 2002 ஆகஸ்ட் 8}ஆம் தேதி அந்த நபர் மும்பை அன்பருக்கு எழுதிய இ மெயில் கடிதத்தின்படி அவர் சர்வதேச அருங்கலைப் பொருட்கள் ஆர்வலர்களுக்கு காந்திஜி குறித்த கடிதங்களை சராசரியாக ஒரு பக்கத்திற்கு 1500 டாலர் என்ற அளவில் 25,000 அமெரிக்க டாலருக்கு விற்றிருப்பதாகத் தோன்றுகிறது. அது தொடர்பாக கல்யாணம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். இந்த வழக்கின் நீதிக்காக கல்யாணம் எத்தனை வருடங்கள்காத்திருக்க வேண்டுமோ? 

மரணத்தையும் வரவேற்க வேண்டும்.

கல்யாணம் காந்தியின் செயலராக இருந்த போது பல இளம் காங்கிரஸ் தலைவர்கள் காந்தியைப் பார்ப்பதற்கு வருவார்களாம். காந்தி அழைக்கிற வரை அவர்கள் வெளியிலேயே வரவேற்பறையில் காத்திருப்பார்கள். அவர்கள் நண்பர்களோடு உரக்கப் பேசிக் கொண்டிருப்பார்கள். சில காலங்களுக்கு முன்பு வரை குடியரசுத் தலைவர்களாக இருந்த சிலருக்கு அப்போது 30 வயதினை ஒட்டியே இருக்கும். அவர்கள் அங்கே பேசிக் கொண்டே இருப்பது கல்யாணத்திற்கு பணி செய்வதற்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது. இன்னும் தொலைபேசியில் பேசும் போதும் அவர்களின் உரையாடல்களால் காதில் எதிர்முனையில் சொல்பவை விழாமல் இருந்திருக்கிறது. அதனால் அவர்களிடம் முதலில் அன்பாக அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அவர்கள் மீண்டும் சிறிது நேரத்தில் சத்தமாகப் பேச ஆரம்பிக்க சிறிது கண்டிப்புடனேயே அவர்களிடம் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். பிற்காலத்தில் அந்த இளைஞர்கள் குடியரசுத் தலைவர்களானபோது அந்த நிகழ்வை கல்யாணம் நினைவுபடுத்துவது உண்டு. 

1947-இல் சுதந்திரம் கிடைத்த பின் நேருவை ஒரு தடவை கல்யாணமும், மனு காந்தியும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது நேரு அவர்களைப் பார்த்து ""நீங்க ரெண்டு பேருமே பாராளுமன்ற உறுப்பினர்களாகணும் என்பது எனது விருப்பம்'' என்று கூறி இருக்கிறார். அதற்கு மனு காந்தி மறுப்பு தெரிவித்திருக்கிறார். எப்போதுமே உடல்ரீதியான உழைப்பையே விரும்பக்கூடிய கல்யாணமும் அந்த விருப்பத்திற்கு இணங்கவில்லை. ஒரு நிமிடம் பதவிக்காக அலையும் மனிதர்களோடு அந்த நிகழ்வையும் அன்றைய தலைவர்களையும் எண்ணி பார்க்க வேண்டும். 

கல்யாணத்தைப் பொருத்தவரை மரணத்தைப் பற்றி நினைப்பதும் இல்லை. அதைக் கண்டு அஞ்சுவதுமில்லை. அது மனித வாழ்க்கையின் இயல்பான ஒன்றாகவே அவர் கருதுகிறார். உயிரோடு வாழ்கிற வரை தன் மண்ணுக்கும், மக்களுக்கும், மண்ணோடு வாழ்கிற தாவரங்கள் உட்பட்ட எல்லா உயிர்களுக்காகவும் உழைத்துக் கொண்டே இருப்பதையே தனது வாழ்க்கையாகக் கொண்டவர் கல்யாணம். 

மரணம் இயற்கையின் தவிர்க்க இயலாத நிகழ்வு. அதை வரவேற்க வேண்டும் என்று சொல்வார் கல்யாணம். 

தான் மரணம் அடைந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டிய நண்பர்களின் முகவரிகள் அவரிடம் தயாராக இருக்கின்றன. அன்றாடம் எழுதுகிற நாட்குறிப்பு, ஸ்ரீராமஜெயம் டைரி உட்பட அனைத்தும் அதனதன் இடத்தில் இருக்கின்றன. 
தான் இறந்து போனால் யாராருக்கு முதலில் உடனடியாக செய்தி சொல்ல வேண்டுமென ஓர் அட்டவணை தனியாக தட்டச்சு செய்து வைத்திருக்கிறார். காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி, சங்கர நேத்ராலயா பத்ரிநாத் குடும்பத்தார், ராண்டார் கை, சித்ரா நாராயணசாமி குடும்பத்தார், பழனியப்பா பிரதர்ஸ் சுப்பு, நடிகர் நாசர், சிவகுமார், தூத்துக்குடி துறைமுகத்தின் முதல் தலைவர் வி.சுந்தரம் குடும்பத்தார், டாக்டர் ஜி. சுந்தரம், நல்லி குப்புசாமி செட்டியார், நெருங்கிய நண்பர்களான டாக்டர் சி.வி. ராமகிருஷ்ணன் குடும்பத்தார், நரஹரிராவின் மகனான யோகு உட்பட எல்லா நண்பர்களின் எண்களும் அவரிடம் தயாராகவே உள்ளன. 

தான் இறந்ததும் அறையிலுள்ள பொருட்களை ஒதுக்கிவிட்டு எல்லோரும் இருப்பதற்கு வசதியாக நாற்காலிகளைப் போட வேண்டுமென எழுதி வைத்திருக்கிறார். எல்லோரும் இருப்பதற்கு வசதியாக நிறைய பிளாஸ்டிக் நாற்காலிகளை அடுக்கடுக்காக ஒரு அறையில் வைத்திருக்கிறார் 
""இந்த நாட்டில் லஞ்சம், ஊழல் ஒழியாமல் நான் இறந்தால் மேலே சென்றதுமே காந்தி என்னை திட்டுவார். இந்த நாடு இவ்வளவு தூரத்துக்கு லஞ்சம், ஊழல், வன்முறைன்னு ரொம்ப மோசமா போயிடுச்சு. என்கிட்டே வேலை பார்த்த நீ இதையெல்லாம் சரி பண்ணாம இங்கே ஏன் வந்தே'' என்பார் கல்யாணம் அடிக்கடி. 

இன்னும் அவர் வீட்டு மைய அறையில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார். அதில் நான் இறந்த பின் என் கண்ணை சங்கர நேத்ராலயாவிற்கு வழங்க வேண்டுமென்றும், என் உடலை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு வழங்க வேண்டுமென்றும் எழுதி வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் அந்த மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களையும் எழுதி வைத்திருக்கிறார். அந்த எண்கள் மாறும் போது அந்தப் புதிய எண்ணையும் அதில் பதிவு செய்து வைத்திருக்கிறார். 

குழந்தைக்கு உணவளிப்பதைப் போல் மிகுந்த சிரத்தையுடன் அன்றாடம் அவர் தண்ணீர் விட்டு வளர்த்தவைதான் அவர் வீட்டைச் சுற்றி இருக்கும் அந்த ஆயிரத்தை எட்டுகிற அந்த அற்புதமான செடிகளும் மரங்களும். அவர் எண்ணத்தில் எப்போதும் குடியிருக்கும் பேறு பெற்றவை அந்த செடிகளும் மரங்களும்தான். எத்தனையோ வேலைக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். யாராலும் அவருடைய திருப்திக்குப் பணியாற்ற இயலவில்லை.. அவரின் திருப்திக்கு வேலை செய்த ஒரே தோட்டக்காரர் ஷாஹிம் ஷா என்பவர். குடும்பம் தொலைவில் இருப்பதால் அவராலும் தற்போது வேலைக்கு வர இயல்வதில்லை. 

கல்யாணத்திற்கு சுத்தம் பிடிக்கும்... நேர்மையாக நல்ல வேலை செய்யும் உழைப்பாளிகளைப் பிடிக்கும். விரயமாகாத நேரம் பிடிக்கும். நல்ல சுத்தமான எளிய உணவு பிடிக்கும். வயலின் இசை பிடிக்கும். ஓய்வு பெற்ற ஐ.ஏ. எஸ். அதிகாரியான வி.சுந்தரம் அவர்களின் தேர்ந்த ஆங்கிலமும், உலகத் தலைவர்கள் போல் பேசும் அவரின் பன்முகத் திறனும் அவரின் சுந்தரத் தமிழும் பிடிக்கும். சுந்தரத்தின் மனைவி பத்மா வரைந்த ஓவியங்கள் பிடிக்கும். மண் பிடிக்கும். மக்கள் பிடிக்கும்.. ஏழைகளுக்கு எல்லாம் கிடைத்தால் இன்னும் பிடிக்கும்.

மகாத்மா காந்தியின் கருத்தினை அடிப்படையாகக் கொண்ட கவிதை இது....

எதிரெதிராய் நிறைந்தது உலகம். 
மகிழ்ச்சிக்கு அப்பால் துக்கமும் 
துக்கத்திற்கு அப்பால் மகிழ்ச்சியும்.
சூரிய ஒளியுடன் விழுகிறது நிழலும்
ஒளியோடு இருக்கிறது இருட்டும்
ஜனனத்தோடு இருக்கிறது மரணமும்
எதிரெதிரான இதில் ஏதிலும்
இடறாதிருத்தலே பற்றின்மை
அவற்றை வெல்வதானது
துடைத்தழிப்பதல்ல; அவற்றின் மேல் எழுந்து
பற்றுதலிலிருந்து பறந்து எழுந்து
பற்றற்றிருத்தல்.

(நிறைவு பெற்றது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com