அண்ணலின் அடிச்சுவட்டில்...9

தேநீரை வழக்கமாக ஒரு கோப்பையிலும் அதனை ஏந்தும் தட்டிலுமாக வழங்குவார்கள் (cup and saucer).
அண்ணலின் அடிச்சுவட்டில்...9

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

தேநீரை வழக்கமாக ஒரு கோப்பையிலும் அதனை ஏந்தும் தட்டிலுமாக வழங்குவார்கள் (cup and saucer). ஏந்தும் தட்டினை கோப்பையோடு பயன்படுத்துவதன் நோக்கமானது,  கோப்பையிலுள்ள தேநீர் குடிக்கும் போது அதன் துளிகள் நமது ஆடையில் விழாமல் தட்டு தடுத்துக் கொள்ளும். ஆனால் நமது நாட்டில் தேநீர் வழங்கும்போது பெரும்பாலும் கோப்பையிலும் தட்டிலும் தேநீர் நிரம்ப இருக்கும். அந்தத் தட்டை பெரும்பாலும் நாம் தேநீரை ஆற்றிக் கொள்ளவே பயன்படுத்துகிறோம்.  பலர் தட்டையே தேநீரைக் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

ஒரு தடவை கல்யாணம், காந்தியோடு பாட்னாவிற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது  இரண்டு  ஐரோப்பியர்களும் உடன் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் ஹாரிஸ் அலெக்ஸாண்டர்; மற்றொருவர் ரிச்சர்டு  சைமன்ஸ். காலை 7 மணி அளவில் அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நிற்க வேண்டும். திடீரென வழக்கமாக நிற்காத ஏதோ ஒரு சிறிய நிலையத்தில் ரயில் நின்றது. 

அப்போது காலை 5 மணி இருக்கும். ரயில் பெட்டியிலேயே காலை வழிபாடுகளை முடித்துவிட்டு காந்தி, ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ரயில் நின்றதுமே காந்தி சன்னல் கதவைத் திறந்து பார்த்தார். அங்கே வழக்கம்போல் தேநீர்  விற்பவர்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டே  "சாய்...சாய்...சாய்...'' என தேநீர் விற்றுக் கொண்டிருந்தனர். காந்தி அவர்களில் ஒருவரைக் கூப்பிட்டு ஒரு தட்டில் தேநீர் கொண்டு வரச் சொன்னார். 

தேநீர்க்காரருக்கு அவர் காந்தி என்று தெரியாது. காரணம் அந்த ரயிலில் காந்தி வருகிறாரென்று யாருக்கும் தெரியாது. அப்போது ஒரு டிரேயில் தேநீர் பாட், மில்க் பாட், சுகர், வெற்று கோப்பை, ஒரு கரண்டி எல்லாம் இருக்கும். ஒரு டிரேயை தேநீர் விற்பனையாளர் கொண்டு வந்தார். 

"ரயில் அடுத்த நிலையத்திற்கு வர 7 மணியாகும். அதற்கு இன்னும் அதிக நேரமிருக்கிறது. அவர்கள் இப்போது தேநீர் அருந்தட்டும்'' என்று கூறிய காந்தி கல்யாணத்திடம் அந்த ஐரோப்பியர்களை எழுப்பச் சொன்னார். 

கல்யாணம் ஹாரிஸ் அலெக்ஸாண்டரை முதலில் எழுப்பினார். "சார்! ஒரு கோப்பை தேநீருக்குச் சொல்லி இருக்கிறோம் (sir! we have ordered  for a cup of tea)'' என்றார்.

"அப்படியா... சரி.சரி (oh! is it so...  right... right...)''
என்று கூறிய அலெக்ஸாண்டர் மற்றவரையும் எழுப்பினார்.  தேநீரும் வந்தது. 
இருவரும் ஒரு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தனர்.  

"ஒரு கப்  தேநீர் தயார் பண்ணி தரட்டுமா?''  (Shall i  make a cup of tea?) என்றார் கல்யாணம். 

அதற்கு அவர் "நான் ஒரு கப் தேநீரே குடிப்பேன். இந்தியர்களாகிய நீங்கள் ஒரு கப்போடு சாசர் நிரம்பவும் குடிப்பீர்கள். எங்களுக்கு ஒரே  ஒரு கோப்பை தேநீர் மட்டும் போதும் (No. no. You indians generally make a cup and saucer full of tea?  We would like to hav e just a cup of tea)'' என்று சொன்னார்.

காந்தியடிகள் எந்த ஊருக்குப் போனாலும் ஏதாவது விருந்தினர் வீட்டில்தான் தங்குவார். வழக்கமாக மும்பைக்கும் டெல்லிக்கும் செல்கையில் அங்கே தாழ்த்தப்பட்ட மக்களுடனேயே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் இருக்கும் குடியிருப்பிலேயே ஒரு சின்ன குடிசை கட்டி, அங்கேயே தங்கினார். 

அவரது இறுதிக் காலத்தில் சில மாதங்கள் மட்டும் டெல்லியில் அவர் தங்கியிருந்தார். அப்போது தாழ்த்தப்பட்ட குடியிருப்புகள் முழுவதும் அகதிகளால் நிரம்பிப்போக, அவர் வேறு வழியின்றி பிர்லா மாளிகையில் தங்க வேண்டியதாயிற்று. 

பம்பாய் செல்லும்போது பிர்லாவின் வீட்டிலேயே தங்குவார். 

பாட்னாவிற்கு அவர் செல்லும்போது அங்கே டாக்டர் சையது மேமூதுவின் வீட்டில் தங்குவார். அவர்  பீகார் மாநில அரசில் அமைச்சராகவும் பின்னர் நேருவின் மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தவர்.  

கல்கத்தாவிற்கு வருகிறபோது காதி பிரதிஷ்டானில்தான்  தங்குவார். அதை சதீஷ் சந்திர தாஸ் குப்தாதான் நடத்தி வந்தார். அது பெரிய ஆஸ்ரமம்; சோத்பூரில் இருக்கிறது. ஒரு தடவை அங்கே தங்கியிருந்த போது பல இடங்களில் கலவரம் ஆரம்பமானது. உடனடியாக கலவரத்தை சீர்செய்ய கலவரப் பகுதிகளிலேயே அவர்கள் தங்க வேண்டியதாகி விட்டது. அதனால் பெல்லியா கட்டாவில் பீயம்மா என்ற வயதான இஸ்லாமியப் பெண்ணின் வீட்டில் தங்கினர். அப்போது ஷகீது சுகரா வர்டி முதலமைச்சராக இருந்தார். அவர் பிற்காலத்தில் பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்தார். 

பீயம்மா வீட்டில் தங்கி இருந்தபோது அவர்களுடன் ஹாரிஸ் அலெக்சாண்டர் என்ற ஆங்கிலேயரும் தங்கி இருந்தார். அவர் பாசிஃபாஸ்ட் அமைப்பின் உறுப்பினர்.

சுதந்திர தினத்திற்கு  முந்தைய நாள் காந்தி அங்கே முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாகப் பேசி இருந்தார். அதனால் காந்தி மீது அதிருப்தி இருந்தது.

அதிருப்தியாளர்கள் வெகுண்டெழுந்தனர்.  காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டிற்கு வெளியே பெரிய சப்தமாக இருந்தது. சன்னல் கண்ணாடிகள் உடையும் சப்தம் கேட்டது. ஹாரிஸ் அலெக்சாண்டர் மிகவும் பயந்து போனார்.  

படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காந்தி என்ன சப்தமென்று கேட்டு வெளியே வந்தார்.  அப்போது ஒருவர் கையில் தடியை வைத்துக்கொண்டு காந்தியை அடிப்பதற்காக வந்தார். அதை கல்யாணம் தடுத்தார்.  

"நீங்கள் உள்ளே செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று காந்தியை உள்ளே அனுப்பினார் கல்யாணம். அதன் பின் கலவரக்காரர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார். இதைப்பற்றி காந்தி விளக்கமாக சர்தார் பட்டேலுக்கு கடிதம் எழுதினார். அதில் கல்யாணத்தையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அந்த சம்பவத்தைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதினார் காந்தி.  

பிரதீஷ்டானில் தங்கி இருந்தபோது  காந்தியைக் காண பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் நிரம்ப வருவர். இந்துக்கள் முஸ்லிம்களையும்-முஸ்லிம்கள் இந்துக்களையும் மாறி மாறி குறை கூறிக்கொண்டே இருந்தார்கள். முஸ்லிம்கள் ஒருபக்கம் முறையிட இந்துக்கள் அவர்கள் எங்களை அடிக்கிறார்கள் என்பார்கள். அவ்வாறு கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளின் வருகை தொடர்ந்து கொண்டே இருந்தது.  

இரண்டு நாட்களாக கல்யாணத்திற்கு எந்த வேலையும் காந்தி தரவில்லை.  கல்யாணம் ஒரு  பணிபிரியர். அவரால் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க இயலாது.  அவர்களின் பிரச்னைகளையே வெறுமனே கேட்டுக் கேட்டு கல்யாணத்திற்கு மிகுந்த சலிப்பாகி விட்டது. 

"இங்கு வேலையே இல்லாமல் இப்படி வெறுமனே இருப்பது எனக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கிறது''  என காந்தியிடம் தெரிவிக்கலாமென்று அவர் பல தடவை முயற்சித்தார். அங்கே காந்தியைச் சுற்றி நிறைய மக்கள் பிரச்னைகளோடு இருந்ததால் கல்யாணத்தால் அதைத் தெரிவிக்க இயலவில்லை.  

அதற்கான சரியான தருணத்திற்காக பெரு முயற்சியுடன் காத்திருந்தார். அவர் இருக்கும் இடத்திலிருந்து அவரது கழிவறை சுமார் முப்பதடி தொலைவில் இருக்கும். ஓர்  ஒட்டுத் திண்ணை  வழியாக அங்கே போக வேண்டும். அவர் அவ்வாறு கழிப்பறைக்குச் சென்று வரும்போது தனது மனக் குறையைச் சொல்வதே சரியான தருணமென நினைத்து காத்திருந்தார்.  

அந்தத் தருணமும் வந்தது. அவர் கழிப்பறை சென்று விட்டு திரும்பி வருகையில், அவரிடம் "நீங்கள் எனக்கு மூன்று நாட்களாக ஒரு வேலையும் கொடுக்கவில்லை. இவர்களெல்லாம் உங்களிடம் மாறி மாறி புகார் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு வேலை இல்லாமல் மிகுந்த கஷ்டமாக இருக்கிறது'' என்றார் கல்யாணம்.  

அதற்கு காந்தி  "வேலையில்லையென்று எப்படி நீ சொல்ல முடியும். வேலை நிறைய இருக்கிறது.  என்ன வேலை இருக்கிறது என்று கண்டுபிடித்து அதைச் செய்'' என்றார்.  

"வேலையே  இல்லையென்று எவரும் சொல்லக் கூடாது.  நம்மைச் சுற்றி நமக்கு நிறைய வேலை இருக்கிறது. அவற்றையெல்லாம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்'' என்பதை கல்யாணம் அப்போதுதான் புரிந்து கொண்டார்.  

ஆஸ்ரமத்து அரசியல் 
காந்தியிடம் பணிக்குச் சேர்ந்த புதிதில் கல்யாணத்திற்கு அவரது கையெழுத்து சரியாகப் புரியவில்லை. அப்போது அங்கிருந்த அவரது மூத்த செயலாளரான பியார்லாலின் உதவியையே கல்யாணம் நாடுவார். அவர் பெரிய பூதக் கண்ணாடியை வைத்து காந்தி என்ன எழுதியிருக்கிறாரென்று படித்துச் சொல்வார்.

அவ்வாறே காந்தியின் எழுத்தைப் புரிந்துகொள்ளக் கற்றுக் கொண்டார் கல்யாணம்.  

காந்தி ஜ்ர்ன்ப்க் என்பதற்கு பதிலாக ஜ்க் என்று சுருக்கமாகப் போடுவார். சொற்கள் முழுவதையும் படித் துப் பார்த்தால்தான்  அதைப்  புரிந்து கொள்ள இயலும். கடிதத்தின்  துவக்கத்தில் ம்க்ள் என்று போட்டுவிடுவார். அது  ம்ஹ் க்ங்ஹழ்  நண்ழ் அல்லது க்ங்ஹழ் நஹழ்க்ஹழ் அல்லது க்ங்ஹழ் நன்ட்ழ்ஹஜ்ஹழ்க்ஹ் அல்லது க்ங்ஹழ் நன்ள்ட்ண்ப்ஹ என்பதாவென சந்தேகம் வரும். கடிதத்தைப் படித்து அதன் உள்ளடக்கத்தை வைத்துத்தான் ம்க்ள் என்ற சுருக்கத்தின் விரிவு கிடைக்கும். அவர் யாருக்குக் கடிதம் எழுதியிருக்கிறாரென்பதும் புரியும். அதுவும் கல்யாணம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அதைப் புரிந்துகொள்ள இயலாமல் தவறாகத் தட்டச்சு செய்த போதும் காந்தி கோபப்பட்டதே இல்லை. 

காந்தியின் வழிபாட்டு கூட்டங்களில் ராஜ்குமாரி அம்ரித் கெளர், சுசீலா நய்யர் உள்பட பலரும் பங்கேற்பர். அவர்களுடன் கல்யாணமும் கலந்து கொள்வார்.  கபுர்தாலா மாநிலத்திலிருந்து அரச குடும்பத்தில் பிறந்து காந்தியால் ஈர்க்கப்பட்டு வந்தவர் ராஜ்குமாரி அம்ரித் கெளர். அவர் கபுர்தலா இளவரசியுமாவார். அவர் உப்பு சத்தியாகிரகத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் காந்தியோடு பங்கு கொண்டவர்.  

சுசீலா நய்யர் மருத்துவர். காந்தியின் செயலாளராக இருந்த பியார்லாலின் இளைய சகோதரி. டெல்லியிலுள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே விடுமுறையில் வார்தா ஆஸ்ரமம் வந்து ஆஸ்ரமப் பணிகளில் ஈடுபடுவார்.  பின்  காந்தியோடும் கஸ்தூர்பாவோடும் பயணம் செய்து அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்தவர். அவர்களோடே தங்குவார்.  1942-இல் ஆககான் மாளிகையில் காந்தி, கஸ்தூர்பா காந்தி,  மகாதேவ தேசாயோடு இவரும் சிறையிலிருந்தார். பெரிய பெரிய மருத்துவர்களிடம் காந்தி சிகிச்சை பெற்றாலும் சுசீலா நய்யரே தனது தனிப்பட்ட மருத்துவரென காந்தியே ஒரு தடவை சொல்லி இருக்கிறார்.  

சாதாரணமாக காந்தியுடைய அன்றாடப் பணிகளினூடாகவே அவரது உரை, அவரது உரையாடல்கள், நேர்முகங்களென எல்லாவற்றையும் அவர்கள் கேட்டு குறிப்பெடுப்பார்கள். பின் இறுதியில் எல்லோருமே அவரவருக்குத் தெரிந்த மொழிகளில் அவற்றைத் தெளிவாக விரிவாக எழுதுவர். ஆங்கிலத்தில் எழுதியதை மட்டும் காந்தியிடம் கொடுப்பார்கள். காந்தி அவற்றைப் படித்து திருத்திய பின் அதனை கல்யாணம் தட்டச்சு செய்து நான்கைந்து நகல்கள் வைத்திருப்பார்.

தினமும் மாலை பல்வேறு நாளிதழ் செய்தியாளர்கள், காந்தி பங்கேற்ற நிகழ்ச்சிகள் பற்றிய அன்றைய செய்திகளைப் பெற்றுக்கொள்ள வருவார்கள். அப்போது கல்யாணம் ஏற்கெனவே தட்டச்சு செய்த அன்றைய செய்தி நகல்களை பத்திரிகையாளர்களுக்குக் கொடுப்பார். அது அடுத்த நாள் செய்தியாக வரும். "நவஜீவனில்' அடுத்த இதழில் அந்த செய்தி வரும். 
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com